Wednesday, April 17, 2013

நண்பனுடன்
அவனது
வீட்டிற்குச்சென்றிருந்தேன்..

வாசலில்
அவனது பாட்டி
கயிற்றுக்கட்டிலில்
கிடந்தார்..

நண்பன் உள்ளே 
போய்விட்டான்..

நான் : என்ன பாட்டி
நல்லா
இருக்கிங்களா..?

பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?

நான் : நல்லாருக்கேன் பாட்டி..

இடையே எனது Android
தொலைபேசி அழைத்தது..
பேசி முடித்தேன்..

பாட்டி : என்னாய்யா அது
டிவி பொட்டி கணக்கா..?

நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய்
அதிலிருந்த Talking Tom-ஐ
எடுத்துக்காட்டினேன்..
பாட்டி இதுகிட்ட பேசினா
அத அப்புடியே திரும்ப பேசும்..

பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?

நானும், பாட்டியும், Talking Tomமும் சிரித்தோம்..

பிறகு வீட்டினுள்
சென்றேன்..

எல்லோருடன்
பேசிவிட்டு வெளியில் வந்தேன்...

வாசலில் பாட்டி..

நான் : போயிட்டு வாரேன் பாட்டி..

பாட்டி : ராசா...

நான் : என்னா பாட்டி..?

பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய
இங்க உட்டுட்டு போயா..

நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?

பாட்டி : ஆமாய்யா..
இந்த வயசான காலத்துல இங்க
எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா..
நா செத்துபோறப்ப
அந்த
பூனகுட்டிகிட்டயாச்சும்
பேசிட்டே சாவுறேன்யா..

நண்பனைப்பார்த்தேன்..

யாருடனோ (!)
ரகசியமாய்ப்
பேசிக்கொண்டு
இருந்தான்..

நா சாப்ட்டேன் செல்லம்..
நீ செல்லம்..?

சரிடி..
நா வீட்ல இருக்கேன்டி..
அப்புறமா பேசுறேன்டி..
அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்..

ஒரு அப்பா குடும்பத்தையே சுமந்து
சைக்கிள் மிதிக்கிறார்..
ஒரு அப்பா குடும்பத்துக்காகவே
மீன் கூடையை
சைக்கிளில் சுமக்கிறார்.

ஒரு அப்பா மன உளைச்சலை
வெளியே விட்டு
சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார்.

ஒரு அப்பா தீபாவளி முன்னிரவில்
கடன் கேட்டு வீதியில் அலைகிறார்.

ஒரு அப்பா கவலை மறைத்து
குழந்தைகளுடன் மத்தாப்பு கொளுத்துகிறார்.

ஒரு அப்பா ஜவுளிக்கடைக்குள்
குடும்பத்தை அனுப்பிவிட்டு
தள்ளு வண்டி காரனிடம்
டவல் வாங்குகிறார்.

ஒரு அப்பா கடன்காரனுக்கு பயந்து
தெரு சுற்றி காலம் கடந்து
பசியோடு வீடு வருகிறார்.

பாவம் அப்பாக்கள்.
அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்..................................

Wednesday, April 10, 2013

யோக சித்தி வரங் கேட்டல்

தேடிச் சோறுநிதந் தின்று — பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் 
வாடித் துன்பமிக உழன்று — பிறர் 
வாடப் பலசெயல்கள் செய்து — நரை 
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் 
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல 
வேடிக்கை மனிதரைப் போலே — நான் 
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

Thursday, April 4, 2013

இறந்த பின்‍‍ ‍ சிறுகதை

நண்பர் பகிர்ந்தது.......

”கார்த்தி, அந்த அரதப் பழசான சைக்கிளை புது வீட்டிலேயும் கொண்டு வந்து வைக்கனும்னு அடம் பிடிக்கிறாருடா உன் அப்பா”

அம்மா குறிப்பிடும் மிதிவண்டி என் அப்பா வழி தாத்தாவின் உடையது. அந்த தாத்தா இறந்து இருபது வருடங்கள் ஆனாலும், அப்பா அந்த சைக்கிளை கண்ணும் கருத்துமாய் பராமரித்து வருகின்றார். ஒன்றிற்கு இரண்டு கார்கள், மூன்று மோட்டார் பைக்குகள் என வீட்டில் இருந்தாலும் அந்த சைக்கிளும் அவற்றிற்கு இணையாக வாசலில் நிற்கும்.

“பழைய பேரீச்சம்பழம், ஈயம் பித்தாள” என தெருவில் குரல் கேட்கும்பொழுதெல்லாம் அப்பாவைத் தவிர அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரிப்போம்.

அந்த அசட்டையான நமுட்டு சிரிப்புகளை ஐந்தாறு வருடங்கள் கழித்து இன்னும் எட்டு மணி நேரத்தில் மீண்டும் அனுபவிக்கப் போகின்றேன். பிராங்பர்டில் விமானம் ஏறியாகிவிட்டது.  அருகில் ஓர் அமெரிக்கன். கையில் ஒருப் புத்தகம். வளைந்து நெளிந்து புத்தகத்தின் பெயரை ஒரு வழியாகப் பார்த்துவிட்டேன்.  "Energy of life" என எழுதி இருந்தது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. நாசாவின் இலச்சினை ஓர் ஓரத்தில் இருந்தது.

விமானம் வானில் நிலைபெற்ற பின்னர், அரைவாசிப் புன்னகையைக் கொடுத்ததற்கு முழுப்புன்னகையையும் கொடுத்தார்.

தன்னை “தனடோஸ்” என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

”நாசா,  வாழ்வியல் மேலாண்மையைப் பற்றி எல்லாம் புத்தகம் எழுதி இருக்கின்றதா?” எனக் கேட்டேன்.

மென்மையாய் சிரித்துவிட்டு, சன்னமான குரலில், “அதிரகசியமான ஆய்வைப் பற்றியப் புத்தகம் இது, இந்த விமானம் சென்னை போய் சேர்ந்துவிட்டால், அந்த ஆராய்ச்சியின் கடைசிப் பரிசோதனையும் வெற்றி “ என்றார்.

”அப்படி என்ன வகையான ஆராய்ச்சி” என்றேன். 

”நாம் அனைவரும் இறந்த பின், அந்த ஆற்றல் எங்கேப் போகின்றது ?”  என்ற அவரின் கேள்வி  வடிவேலுவின் ”மூனைத் தொட்டது யாரு” நகைச்சுவை நினைவுக்கு வந்தது. இன்னும் எட்டு மணி நேரம் பொழுது போகவேண்டுமே, பேச்சுக் கொடுத்தேன்.

“நம்பிக்கையாளராக இருந்தால், சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகும்,  பகுத்தறிவாளராக இருந்தால், இயற்கையோடு கலந்துவிடும்”

”நான் ஒரு விஞ்ஞானி, ஆக இயற்கையோடு கலந்துவிடுகிறது என எடுத்துக் கொள்வோம். அப்படி இருக்கையில் அந்த ஆற்றலை வழிமறித்து நமக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியும் தானே”

”புரியவில்லையே”  சிரிக்காமல் சுவாரசியமாகக் கேட்டேன்.

“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்ற முடியும் இது அடிப்படை விதி, ஆக, இறந்த ஆன்மாவை பிடித்து ஏன் வேறுவகை ஆற்றலாக மாற்றி பயன் படுத்திக் கொள்ளக்கூடாது என்பதான ஆராய்ச்சி அது”

உண்மையோ பொய்யோ , இந்த வகையான விசயங்களை எனக்கு கேட்கப் பிடிக்கும்.

“வல்லரசுகள் ஏன் போர்களில் ஈடுபடுகின்றன?”

”கனிம, எண்ணெய் வளத்திற்காக?”

”ஆம், அவற்றுடன், போரினால் அழியும் ஏகப்பட்ட உயிராற்றல்களுக்காகவும்”


புதுவகையான கான்ஸ்பிரைஸி தியரியாக இருந்தது.


“இப்பொழுதெல்லாம், போர்களில் வல்லரசுகள், புதுவகையான குண்டுகளைப் பயன்படுத்துகின்றன, அந்தக் குண்டு உடலில் பாயும்பொழுது, குண்டில் உயிராற்றல் சேகரிக்கப்பட்டுவிடும்”

நான் பதில் பேசவில்லை.

”பின்னர் அந்த ஆற்றலை, எரி சக்தியாகவோ, மின்னாற்றலாகவோ மாற்றிவிடுவோம்”

“எவ்வளவு நாட்களுக்கு ஓர் உயிராற்றல் வரும்”

“நல்ல கேள்வி, ஓர் இயந்திரத்திற்கு உயிராற்றலை ஆற்றல் மூலமாக கொடுத்துவிட்டால், முடிவிலா காலம் வரை அந்த இயந்திரம் தொடர்ந்து இயங்க, அந்த ஆற்றல் போதுமானது.  இந்த விமானம் கூட சோதனை ஓட்டமாக ஓர் ஆன்மாவின் ஆற்றலால் தான் முதன் முறையாக இயக்கப்படுகின்றது”

மல்டிலெவல் மார்க்கெட்டிங் அல்லேலூயா ஹரே கிருஷ்ணா அளவிற்கு பில்ட் அப் கொடுக்கின்றாரே என நினைத்துக் கொண்டேன்.

“யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு வல்லரசு ரகசியத்தை உன்னிடம் சொல்கின்றேன் , கவனமாகக் கேட்டுக்கொள்,  அடுத்தப் பத்து வருடங்களில், உலகத்தின் மக்கள் தொகையில் பாதி திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிடும், மக்களின் உயிர்கள் எல்லாம் எந்திரங்களுக்கு உயிராற்றல் மூலங்களாக மாற்றப்பட்டுவிடும்”

“ஏன் விலங்குகளின் உயிராற்றலை எடுத்துக் கொள்ளக்கூடாதா, எதற்கு சாமானிய மனிதர்களைக் கொல்ல வேண்டும்” எனக்குள் இருந்த மனிதாபிமானி விழித்துக் கொண்டான்.

“நல்ல கேள்வி, இயற்கைக்கு ஒவ்வாத ஓர் உயிரினம் எதுவென்றால், மனித இனம் மட்டுமே, மனித இனம் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும், இயற்கையின் சமனிலை பாதிக்கப்படாது...அதனால் தான் மனித உயிர்களை நாங்கள் எடுக்க முடிவு செய்தோம்”

அதன் பின்னர் நான் ஒன்றும் பேசவில்லை. சாப்பாடு வந்தது, சாப்பிட்டேன். அதன் பின்னர் அவரை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. கதைக் கேட்க சுவாரசியமாகவும் திகிலாகவும் இருந்தாலும் அது எல்லாம் சாத்தியப்படுமா எனக்கு நான் கேட்டுக்கொண்ட கேள்விக்கு , சாத்தியமில்லை என மனசாட்சி சொன்னது.கட்டுக்கதைகளைப் பரப்பிவிடும் கோஷ்டியைச் சேர்ந்தவராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
அவ்வப்பொழுது ஓரக்கண்ணால் பார்த்தபடி இருந்தார். சென்னை விமான நிலையத்தில் விமான தரை இறங்கியது.  விமானத்தை விட்டு வெளியேப்போகையில் தனடோஸ், விமானிகளிடம் இறுக்கமாக கைகளைக் குலுக்கி வெளியேறினார்.

--
எனது வீட்டின் புதுமனைப் புகுவிழா விற்கு வந்து இருந்த அனைவரும் கேட்டது, திருஷ்டிக்காக அந்த பழையை சைக்கிளை வைத்து இருக்கிறீர்களா என்பதுதான்.  அன்று மாலை அப்பாவிடம் அந்த சைக்கிளை யாரிடமாவது கொடுத்துவிடலாம எனக்கேட்டேன்.

“குன்றத்தூர் போகலாமா, வடபழனி போகலாமா” எனக்கேட்டார்.

“வடபழனி” என கார் சாவியை எடுத்தேன்.

“இல்லை சைக்கிளில் போகலாம் வா” எனக்கூப்பிட்டார்.

அந்த சைக்கிளில் தாத்தா இறப்பதற்கு அவருடன் கொரடாச்சேரி கிராமத் தெருக்களில் சுற்று போக சிறுவனாக இருக்கும்பொழுது ஏறியது. அதன் பின்னர் இன்றுதான் ஏறுகின்றேன்.

ஆற்காடு சாலை போக்குவரத்து நெரிசலில், என்னை பின்புறம் வைத்து சைக்கிளை எந்த சிரமமும் இன்றி அப்பா ஓட்டிக்கொண்டு வந்தார். சைக்கிளில் ஒரு மிதிக்கு கிட்டத்தட்ட நூறு மீட்டர்கள் தூரம் சர்வசாதாரணமாக ஓடியது.

“கார்த்தி, இந்த சைக்கிள் எனக்கு ஏன் முக்கியம் தெரியுமா, இந்த சைக்கிளுக்குள்ள என் அப்பாவோட உயிர் இருக்குன்னு நினைக்கிறேன், இப்போகூட நான் பெடல் பண்ணல, அவரே ஓட்டுறாருதான்னு எனக்கு ஒரு நம்பிக்கை, அவரோட ஆன்மா, இந்த சைக்கிளுக்குள்ள இருக்கு ... அந்த நம்பிக்கைக்காத்தான் இந்த சைக்கிள் வச்சிருக்கேன், உன் அம்மாவுக்குப் புரியாது, நீயாவது புரிஞ்சுக்கோ”

அப்பா சொன்ன  தாத்தா செண்டிமெண்ட் கதைக்குப் பின்னர் , அதில் இருந்த உணர்வுப் பூர்வ இழையையும் தாண்டி,  தனடோஸ் சொன்னது உண்மையாக இருக்குமோ என நம்பத் தொடங்கினேன்.

நான் மட்டும், ஏன் இப்படி?


கிருஷ்ணா என்றொரு அற்புதமான மனிதர், எழுத்தாளர், இளைஞர், வித்தியாசமானவர். அண்மையில் “ஒய் மீ?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம் ஆளுநர் கே. ரோசய்யாவால் வெளியிடப்பட்டது. “சரி…. இது என்ன புத்தக விமர்சனமா?’ என்ற கேள்வி உங்கள் கண்களில் எழுவது தெரிகிறது. விமர்சனம் இல்லை. வித்தியாசம். கிருஷ்ணாவுக்கு “ஆட்டிசம்’.
“ஆட்டிசம்’ என்ற சொல்லுக்கு “மன இறுக்கம்’ என்று தமிழாக்கியுள்ளார்கள். “மதியிறுக்கம்’ என்றும் கூறுகிறார்கள்.
ஆட்டிசத்தின் பாதிப்பு ஒருவரைத் தன்னுள்ளே அமிழ்ந்து போகவைக்கும், வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளவிடாது, நம் சிரிப்புக்குப் பதில் சிரிப்பு வராது. நம் பார்வைக்கு எதிர்பார்வை இராது, நம் கேள்விக்கு விடை கூற விடாது, திரும்பத் திரும்ப சில செயலைச் செய்யத் தூண்டும், அதீதமான மன இறுக்கம் இருக்கும்.
நமக்கும் வெளி உலகத்துக்கும் இருக்கும் தொடர்பை ஒரு சுவர் தடுத்தால் எப்படி இருக்கும்? அதுபோல என்று சொல்லலாம். புரிதல், உள்வாங்கிக் கொள்ளுதல் நடைபெறும். ஆனால் புரிந்தது என்று வெளி உலகத்திற்குத் தெரியாது.
புரியாமலா இந்தப் புத்தகத்தை கிருஷ்ணா எழுதினார்? உபநிஷத்துகள், தத்துவ நூல்கள் எல்லாவற்றையும் படித்த பின்னர்தான் இந்தப் புத்தகம் வடிவு பெற்றுள்ளது. சுகம் என்பது என்ன, துக்கம் என்ன, மகிழ்ச்சிக்குப் பிறப்பிடம் எது, துயரத்துக்குக் காரணம் எது என்ற ஆழமான தத்துவங்களை எளிதாக விளக்குகிறது.
“ஆட்டிசம்’ என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடு என்கிறார்கள். குறை என்பது என்ன? யாருடைய பார்வைக் குறை என்று எடை போடுவது? நாமே ஓர் அழுத்தமான சதுரத்தை வரைகிறோம். அதில் அடைபடாதவர்களை, குறைபாடுடையவர்கள் என்று ஒதுக்குகிறோம்.
இதனால் “ஆட்டிசம்’ உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குறைந்தவர்கள், மனநலிவுள்ளவர்கள், “டவுன்’ஸ் சின்ட்ரோம்’ உள்ளவர்கள், “செரிப்ரல் பால்ஸி’ உள்ளவர்கள் இப்படி எத்தனையோ பேர், செவ்வகங்கள், வட்டங்கள், முக்கோணங்கள் – நம்முடைய சதுரத்துக்குள் பொருந்துவதில்லை. இதனாலேயே வெளி உலகத்தின் பார்வைக்கு வெளியே வாழ்கிறார்கள்.
வட்டங்களின் பார்வையால் பார்த்தால், சதுரம் வித்தியாசமே. “”உருண்டையாக இல்லாமல் நாலு மூலைகள் கொண்ட குறைபாடு உடைய வடிவம்” என்று வட்டம் சொல்லலாமே! அப்பொழுது சதுரங்கள் குறைபாடு உடையனவா?
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்தது. உயர் நீதிமன்றத்தின் நூலகத்தின் நூலகர் பதவிக்குப் பலர் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் ஒருவருக்கு ஒரு கால் சற்று வித்தியாசமாக இருக்கும், நடப்பது எளிதல்ல. அவரை “ஊனம்’ என்று சொல்லி தேர்வுக்குழு தள்ளிவிட்டது.
அவர் “பேராண்மை மனு’ தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் கூறியது என்னவென்றால், “அவருக்கு ஊனம் என்று ஒதுக்கிய நம் மனங்களில்தான் ஊனம்; அவர் முற்றிலும் தகுதியுள்ளவர்’ என்பதுதான். அவர் வெற்றி பெற்றார். இது வட்டங்களின் பிழையன்று, முக்கோணங்களின் பிழையன்று, செவ்வகங்களின் பிழையன்று, இது நாமாகிய “சதுரங்களின்’ பிழையே.
மனிதநேயத்தின் அடையாளமே அனைத்து வித்தியாசங்களையும் உள்ளடக்கி சமமாகப் பார்ப்பதுதான். இதுவே ஜனநாயகத்தின் அடையாளமும் ஆகும். ஜனநாயகத்தில் அனைவரும் சமம், அனைவருக்குமானது ஜனநாயகம்.
ஜாவேத் அபிதி என்பவர் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக உழைப்பவர். எங்கும் சக்கர நாற்காலியில்தான் செல்வார். அவர் கூறுவார் “”நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் நாட்டு மக்கள் அனைவரின் திறமையும், அறிவுத்திறனும் ஒன்றாகத் திரண்டு செயல்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளைச் செயலற்ற கற்களாக இருக்க விட்டோமானால் நம் நாடு அந்தப் பயனில்லாத பாரங்களையும் அல்லவா இழுக்க வேண்டும்?” என்று.
மாறாக அவர்கள் ஒவ்வொருவரையும் சுதந்திரமாகப் பிறரைச் சாராது செயல்படும் மனிதர்களாக உருவாக்க நம் அரசமைப்புகளும் சமூகமும் ஒத்துழைக்க வேண்டும்.
அன்று அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், ஆட்டிசமுள்ள பல குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். விஷால் என்ற சிறுவன் “ஆடிஸ்டிக் சாவந்த்’ என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் “ஆட்டிசமுடையவர் – அறிவாளியும்கூட’. அதாவது ஒரு குறிப்பிட்ட கலையோ, திறமையோ அவர்களுக்கு எல்லோரையும்விட மிகக்கூடுதலாக இருக்கும்.
விஷாலுடைய தாயார், தன் மகன் எழுதிய புத்தகத்தை என்னிடம் பெருமையுடன் காட்டினார். முத்துமுத்தான கையெழுத்து. படிக்காமலே விஷாலுக்கு எவ்வளவோ விஷயங்கள் தெரியுமாம். எட்டு வயதுக்கு அப்பாற்பட்ட விஞ்ஞான அறிவு, ஏன் எண்பது வயதுக்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான அறிவு, விஷாலைப் போன்றவர்களைக் குறைபாடு உடையவர்கள் என்று எப்படி அழைக்க முடியும்? ஆனால், அவர்கள் நிச்சயமாக வித்தியாசமானவர்கள்.
ஐஸ்வர்யாவை அங்கு சந்தித்தேன். ஐஸ்வர்யாவுக்கு “ஜிக்சா பசில்கள்’ (குறுக்கெழுத்துப் புதிர்கள்) எவ்வளவு கடினமாக இருந்தாலும், அலட்சியமாக பூர்த்தி செய்ய முடியும். யோசிக்கக்கூட வேண்டாமாம், அவள் மூளையில் அந்த சிறுசிறு துண்டுகளை எப்படி இணைத்துப் படத்தை அமைக்க வேண்டும் என்று அப்படியே உதிக்குமாம். ஐஸ்வர்யாவின் பெற்றோர் சொல்கிறார்கள், “”ஐஸ்வர்யாவுக்குக் கடினமான புதிரெல்லாம்… பூ, ஆனால் ஐஸ்வர்யாவே ஒரு புதிர்” என்று.
“அய்ஷிஸ் பசில்ஸ்’ என்ற இணையதளத்துக்குச் சென்று பாருங்கள். ஐஸ்வர்யாவின் திறமை நம்மை வியக்க வைக்கிறது. இந்தத் திறமைசாலியான, அதீத அறிவுள்ள, அன்பான, அழகான ஐஸ்வர்யாவைச் சுற்றியும் ஆட்டிச சுவர் உள்ளது.
அன்று தன்னுடைய புத்தகத்தின் வெளியீட்டு விழா என்று கிருஷ்ணாவுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் ஆட்டிசத்தின் மன இறுக்கத்தின் காரணமாக அமைதியாக உட்கார முடியவில்லை. இருபுறமும் கிருஷ்ணாவின் பெற்றோர் கிருஷ்ணாவைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
விஷாலுடைய தாயார் என்னிடம் சொன்னார் “”அவனைத் தடவிக் கொடுத்தால் மிக அழகாக எழுதுவான்” என்று. அந்த அன்பான ஸ்பரிசம் ஆட்டிசத்தின் இறுக்கத்தைத் தளரச் செய்து அமைதிப்படுத்தும்போல் தெரிகிறது. பல பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியின்பொழுது தங்களுடைய குழந்தைகளைத் தடவிக் கொடுப்பதைப் பார்த்தேன்.
வந்தவர்கள் எல்லோரும் பளிச்சென்று உடையணிந்து அழகாக இருந்தார்கள். அவர்கள் சதுரங்களில்லை, உண்மைதான். ஆனால், அவர்களுக்கும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் ஆசை இருக்கும். அது அவர்கள் உரிமையும்கூட. வாழுவது என்பது வெறுமனே மூச்சுவிடுவது மட்டுமல்ல, அது “முழுமையாக வாழ்வது’ என்று நமது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன.
நம் அரசியல் சாசனத்தின் “21-ஆவது பிரிவு – வாழும் உரிமை’ என்பதை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உரிமையைப்பெற அரசு எல்லா உதவியும் செய்ய வேண்டும். அது சமூகத்தின் பொறுப்பும்கூட. ஆனால் இந்த உரிமை சதுரமல்லாதவர்களுக்குக் கிடைக்கப் பல தடைகள் உள்ளன. நம் கண்களில் அவர்கள் புலப்படுவதில்லை, மாறானவர்களை நம்முலகத்தில் இருப்பவர்களாகவே நாம் நினைப்பதில்லை.
அங்கு ஒரு தாயார் என்னிடம் சொன்னார் “”எங்களைப் பற்றியும் எழுதுங்கள்” என்று. இதோ எழுதுகிறேன். இந்த வித்தியாசமான குழந்தைகளின் பெற்றோருடைய வாழ்க்கையும் வித்தியாசமானதுதான்; “”எல்லோரையும்போல” என்ற சொற்கள் அவர்கள் அகராதியில் இல்லை.
ஆட்டிசம் உள்ள 15 வயது பிள்ளையின் தந்தை சொன்னார். “”ஒரு நாள் என் குழந்தை எனக்கு ஜுரம் என்றான். அன்று நாங்களிருவரும் அப்படி மகிழ்ந்தோம்” என்று, நான் தடுமாறிப் போனேன். ஜுரம் என்று குழந்தை சொன்னால் சந்தோஷமா? இல்லை, அதற்கில்லை. வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள விடாத மன இறுக்கச் சுவரில் ஒரு சிறு விரிசல், ஒரு துளி வெளிச்சம். அந்த வெளிச்சம் தெரிந்ததால் கூத்தாடுகிறார்கள் தந்தையும் தாயும்.
ஆட்டிசத்தின் தாக்கம் 1-2 வயதில்தான் தெரியும் என்கிறார்கள். அதன் பின் அந்தப் பெற்றோர்களின் வாழ்க்கை வேறு தடத்தில், வேறு தளத்தில் செல்லும். அவர்களும் கிருஷ்ணா கேட்ட கேள்வியை இறைவனிடம் கேட்பார்கள். “ஒய் மீ’ என்று. “”எனக்கு ஏன் இப்படி…?” பிறகு நம்மால் ஒரு வித்தியாசமான குழந்தையை வளர்க்க முடியுமா? என்ற சந்தேகத்துடன் அந்தப் பயணம் தொடங்கும். எங்களால் முடியும் என்கிற மனத்துணிவுடன் எல்லாம் என் குழந்தைதான் என்ற பாதையில் உறுதியுடன் நடக்கிறார்கள்.
அயராது முயற்சி செய்த பின் கிருஷ்ணா ஒரு நாள், “ஆப்பிள்’ என்று சொன்னது ஒரு சாதனை மைல்கல். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்தும் கிருஷ்ணாவுக்கு தாயார் படித்துக் காண்பித்தார்கள், கிருஷ்ணாவிடம் எதிரொலி எதிர்பார்க்காமல். பிரமிக்க வைக்கிறார்கள் அங்கு வந்த பெற்றோர்கள். அவர்களிடம் நான் கண்டது அசாத்திய உறுதி, உற்சாகம், மனோதிடம், ஆக்கப்பூர்வமான வீர்யம்.
கிருஷ்ணாவின் தாயார் “ஃப்ரம் எ மதர்ஸ் ஹார்ட்’ என்ற புத்தகத்தில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தன்னைப் போன்ற பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்று.
இந்தத் தளராத முயற்சி எல்லோருக்கும் வருமா என்று எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தபோது மூச்சை அடைத்தது. ஆனால், அன்று நான் சந்தித்த பெற்றோர் எல்லோரும் அப்படித்தான் இருந்தார்கள்.
ஆண்ட்ரூ சாலமன் என்பவர் “ஃபார் ஃபிரம் த ட்ரீ’ என்ற புத்தகத்தில் வித்தியாசமான குழந்தைகளைப் பற்றியும் பெற்றோரைப் பற்றியும் எழுதியுள்ளார். அவர் சொல்கிறார், இந்த வித்தியாசம் நிகழும் சில குடும்பங்களில் நெருக்கமான அன்பால் பிணைகின்றனர். சிலர் தம்மைப் போன்ற அனுபவமுடையவர்களுடன் சேர்ந்து ஒருவரையொருவர் தாங்குகிறார்கள். சிலர் தாங்களே “ஆர்வலர்கள்’ ஆக மாறி தன்னார்வ அமைப்புகள் நடத்துகிறார்கள். உலகத்தோருக்கு தங்கள் நிலைமை, தங்கள் உரிமைகளை, எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ள உழைக்கிறார்கள், போரிடுகிறார்கள். புரிதல் என்பது முதல்படி, பிறகு மற்றதெல்லாம் வரும்.
குவாங்க் என்று ஒரு மலேசியப் படம். 14 நிமிடம்தான். இணையதளத்தில் பார்க்கலாம். குவாங்க் என்பவருக்கு ஆட்டிசம். அவருடைய சகோதரர்தான் படத்தின் இயக்குநர். அவர் இப்படத்தை தன் சகோதரருக்கும் உலகில் உள்ள எல்லா ஆட்டிசம் உள்ளவர்களுக்கும் அர்ப்பணம் செய்துள்ளார்.
அந்த இரு சகோதரர்களைப் பற்றிதான் படம். இருவரும் அவரவர்களாகவே நடிக்கிறார்கள். குவாங்கிற்கு ஒலியும் இசையும் உயிர். அவர் செவிகளில் நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களின் அலைவரிசையும் (நாம் ஆறு கட்டை ஐந்து கட்டை என்று சொல்கிறோம் இல்லையா, அது) துல்லியமாகக் கேட்கும். ஒரு கண்ணாடிக் கோப்பையில் தட்டினால் “பி’ நோட்டு கேட்க வேண்டும். அந்தக் கோப்பையைத் தேடுகிறார் குவாங்க்.
அண்ணாவோ அரும்பாடுபட்டு ஒரு வேலைக்கு சிபாரிசு செய்து அவரை அங்கு அனுப்புகிறார். போகும் வழியில் ஒரு பெண்மணி ஒரு சாக்குமூட்டையை இழுத்துச்சென்று குப்பையில் போடுகிறார். அந்த மூட்டையில் ஒரு பொருள் அப்படி இழுக்கும்பொழுது “பி’ நோட்டை ஒலிக்கிறது. அவ்வளவுதான் நேர்காணல் காற்றோடு போகும். அந்த மூட்டையைத் தோண்டி துழாவி அந்தக் கோப்பையை பொக்கிஷம்போல எடுப்பார். முகத்தில் அப்படி ஒரு பரவசம், ‘பி’ “பி’ என்று கூவிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவார்.
அண்ணாவுக்குக் கோபம் கனல் தெறிக்கும். “அறிவு கெட்டவனே’, “தண்டச்சோறு’ எல்லாம் பிரவாகமாக வரும். குவாங்கிற்கு ஒன்றுமே கேட்காது. ம் ஹும். தன்னறைக்குச் செல்வார். அப்புறம் வெளிவரும் ஒரு தெய்வீக நாதம். அண்ணாவின் முகம் இளகும். உதடுகள் துடிக்கும். நமக்கும்தான். நம் மனதில் வலியும் உவகையும் சேர்ந்து பொங்கும்.
சுற்றி என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையில்லாமல் தன் கருமமே கண்ணாக இருப்பவரை “ஏகாக்ர’ சித்தன் என்கிறோம். அப்பொழுது “ஆட்டிசம்’ உள்ளவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களா? மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலையில் உள்ளவர்களா? அப்படியும் ஓர் ஆராய்ச்சிக்குழு கூறுகிறதாம்.
அவ்வளவு தொலைவுக்கு நாம் செல்வானேன்? எல்லா குழந்தைகளுக்கும் என்ன மனித உரிமைகளுண்டோ அது இவர்களுக்கும் வேண்டும். அது கிடைத்தால் போதும். ஐஸ்வர்யா, விஷால், கிருஷ்ணா போன்றோரைப் பார்த்தால் நமக்கு ஒன்று புரிகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அது வெளிவர வேண்டும்.
ஆட்டிசம் உள்ளவர்களும் பள்ளிக்கூடம் செல்ல, வேலைக்குச் செல்ல, பொது இடங்களுக்குச் செல்ல மற்றும் வாழ்க்கை என்னவெல்லாம் நமக்குக் கொடுக்கிறதோ அவை அனைத்தையும் அவர்களும் பெற வேண்டும். பெற்றோருக்கு நமக்குப்பின் என்ற கேள்வி உலுக்கும். அந்தக் கேள்விக்கு சமூகம் விடைபகர வேண்டும்.
இவர்களுக்காக “தேசிய அறக்கட்டளைச் சட்டம்’ என்ற சட்டம் உள்ளது. அது நன்றாகச் செயல்பட வேண்டும். அதைப்பற்றி நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலைநாடுகளில் வித்தியாசமான குழந்தைகளுக்குப் பலவிதமான ஆதரவு அமைப்புகள் உள்ளன.
ஆட்டிசத்தின் தாக்கம் ஒரே மாதிரி இல்லை என்று இந்தத் துறையின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது வெவ்வேறு மாதிரி வெளிப்படுகிறது. அதன் தீவிரமும் ஒன்றேபோல இல்லை. சிலருக்கு லேசான தாக்கம் இருக்கும். சிலருக்குக் கூடுதலாக இருக்கும். அவரவர்கள் திறமைக்கேற்ப வசதிகள் மேலைநாடுகளில் உள்ளன.
சிலர் பஸ்ஸில் வேலைக்குச் சென்று வருகிறார்கள். வீட்டில்கூட நிறைய வேலைகள் செய்ய முடியும். அவர்களுக்கு ஒரே சீரான பணிநிரல் முக்கியம். ஒரே சீராக இருக்காவிட்டால் இறுக்கம் கூடும். மேலைநாடுகளிலிருக்கும் வசதிகளைப் பார்க்கும்பொழுது சிறிது சிறிதாகவேனும் நம் நாட்டிலும் அதுபோல வரவேண்டும் என்று தோன்றும்.
ஆட்டிசம் பற்றி எல்லோரும் அறிந்துகொள்ளுவதற்கு அரசும் மருத்துவமனைகளும் சமூக அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோர்கள் காலதாமதமில்லாமல், ஆட்டிசமுள்ள குழந்தைகளுக்கு என்னவெல்லாம் உதவி, உந்துதல் கொடுக்க முடியுமோ அது நடக்கும்.
மருத்துவரீதியாக நான் ஆட்டிசத்தைப் பற்றி எழுதவில்லை. மனிதநேயரீதியாகச் சொல்கிறேன். நம் பார்வைக்குள், “யாவரும் கேளிர்’ என்று அனைவரையும் அடைக்க வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சிறு கற்களைச் சேர்த்து பாலங்களை அமைக்கலாம். வித்தியாசங்களின் பூங்கொத்து தானே ஓர் ஆரோக்கியமான சமுதாயம். அதில் யாரும் “”நான் மட்டும்… ஏன்” என்று ஏங்கக்கூடாது!
- நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்


வாழ்வே ஒரு போராட்டம்


துறவி ஒருவர் தன் சீடர்களுக்கு “வாழ்க்கை என்றால் என்ன?” என்பதை தெளிவாக சொல்லிக் கொடுக்க, சீடர்களை அழைத்தார். அப்போது அவர்களிடம் உதாரணத்திற்கு ஒரு பட்டாம்பூச்சி இந்த உலகை காண்பதற்கு முன் எவ்வாறு கஷ்டப்பட்டு வருகிறது என்ற ஒரு விஷயத்தை அவர்களுக்கு காண்பிக்க இருந்தார்.
அதனால் அவர்களிடம் பட்டாம்பூச்சியின் கூட்டினை காண்பித்து, இன்னும் சில நேரங்களில் இந்த பூச்சி நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியே வந்துவிடும் என்றும் அதற்கு யாரும் உதவக் கூடாது என்றும் கூறி மடாலயத்திற்குள் சென்று விட்டார்.
அதைப் பார்த்த ஒரு சீடன், அது ஓட்டை உடைக்க மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து, அந்த ஓட்டை லோசாக உடைத்துவிட்டான். ஆனால் அந்த பட்டாம் பூச்சி வெளியே வந்து இறந்துவிடுகிறது. இதனால் அவன் அந்த பட்டாம் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகிவிட்டான்.பின் துறவி வந்தார். ஊட்டை உடைத்த மாணவன் அழுதுக் கொண்டிருந்தான். எதற்கு அழுகிறாய் என்று பேட்ட போது, நடந்ததை சொன்னான்.
பின் குரு அவனிடம் பட்டாம்பூச்சி அத்தகைய போராட்டத்தை அனுபவிக்கக் காரணம், அதன் சிறகுகள் நன்கு வளர்வதற்கும், தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும் தான் காரணம் என்று சொன்னார்.
அதேப்போல் தான், நாமும் நமது வாழ்வில் இன்பமாக வாழ பல போராட்டங்களை சந்திக்க நேரிடும், அதற்காக மனமுடைந்துவிடக் கூடாது. போராட்டங்களை சந்திக்க சந்திக்கத் தான் நமது மனமும் வலுவடையும். பின் எதற்கும் துணிச்சலோடு போராடி, வாழ்வில் முன்னேறலாம் என்று கூறி, அவர்களுக்கு ஒரு நல்ல அறிவைப் புகுட்டினார்.

பலம் எது? பலவீனம் எது?


ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன.அனைத்து விலங்குகளும்ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும்எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக்கொண்டேஇருந்தது.
உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்,மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.இப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது.
அப்போது பாட ஆரம்பித்தமயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது.
மயில் தனது வருத்தத்தை மைனாவிடம்கூற,மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்,அதை நினைத்து நீ சந்தோஷபட்டிருக்கிறாயா என்றது, மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லைஎன்று பதில் கூறியது.
இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்,அது என்னஎன்பதைஉணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டுமே அன்றிஎது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது. தன் தவறைஉணர்ந்த மயில் மைனவிற்கு நன்றி தெரிவித்தது.
நம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தி நமது பலவீனத்தை எதிர்கொள்ள வேண்டுமென்பதே இக்கதையின் நீதியாகும்.