Sunday, November 23, 2014

ஓர் இளவெயில் மாலையில்...

கடற்கறையின் கிழக்கு பக்கம் திரும்பி நான்
மேற்கு பக்கம் திரும்பி அவள் - அருகருகே அமர்ந்திருந்தோம்...
பேசிக்கொள்ளாத உதடுகள் கூட சிரித்துக்கொண்டன.....
ஆணின் சிரிப்பில் ஓர் அர்த்தம்
பெண்ணிண் சிரிப்பிலோ ஆயிரம் அர்த்தம் - சில
அலாதி அர்த்தங்களை அன்று உணர்ந்தேன்.....
ஓர் பார்வையை வீசிவிட்டு அமைதியாக நின்று விட்டாள்
அலைகளை வீசிவிட்டு அமைதியாய் நிற்கும் கடலை போல...
உன்னை தீண்டி உப்புக்காற்று உன்னை தாண்டி என்னை
தீண்டும் போது கூட உப்புக்கற்றில் உன் வாசம் தானடி...
மறைந்து போகும் கதிரவன் மறந்து போய் என் கையை தீண்டும் முன்
என் விரல்களை தீண்டியது உன் கை விரல்கள்...
நேரெதிர் மோதிக்கொள்ளும் நம் முகத்திற்கிடையில் உன்
கடைவிழியில் எட்டிப்பார்க்கும் சிறு துளி கண்ணீர்...
உன் கடைவிழி கண்ணீருக்கும்
என் விரல்களில் பதிந்த அழுத்ததிற்கும்
வார்த்தை இல்லாத உன் பார்வக்கும்
அர்த்தம் தேடி அலைந்து சென்றோம் காதல் எனும் உலகிற்குள்......
# _தஞ்சைசத்யா_

Saturday, November 22, 2014

மூன்றாம் உலகம்

காதலும் நட்பும் பிரித்தெரிய தெரியா
அந்த ஒரு நிமிடத்தின் உலகம்....
நமக்கே தெரியாமல் ஆசையும் பேராசையாகும்
அந்த ஒரு நிமிடம்....
தனிமையிலும் துணையிருக்கும் சில நிமிடங்களின்
அந்த ஒரு நிமிடம்....
காரணமில்லாமல் காலங்கள் செல்லும்
அந்த ஒரு நிமிடம்....
வெற்றிகள் குவியும் போது வலிகள் மறையும்
அந்த ஒரு நிமிடம்....
வலியிலும் வாழ்த்து சொல்லும்
அந்த ஒரு நிமிடம்...
இரவும் பகலும் இணைந்திருக்கும்
இந்த ஒரு நிமிடம்.....
# மூன்றாம் உலகம் தொடரும்........

Monday, May 5, 2014

கோடை மழையின் குளிர்ந்த காற்றில்.....

கோடை மழையின் குளிர்ந்த காற்றில்.....
மொட்டை மாடியின் மழையின் சாரலில்
நினைவுபடுத்திக்கொண்டிருந்தோம்.....

உன் பிறந்தநாளில்.....
என் பிறந்தநாளில்.....
காதலர் தினத்தில்.....

நீ எனக்கு கொடுத்த கடிதங்களையும்.....

நான் உனக்கு கொடுத்த
முத்தங்களையும்.....

மீனின் ரணம்

விழுங்கிய மீனின் முள் தொண்டையில் குத்தும்போது உணர்கிறேன்.....

தூண்டிலில் மாட்டிய மீனின் ரணத்தை......

உன் அழகே தனிதானடி.......

ஒரு கோப்பை தேநீரும்
உன் புன்னகையும் போதுமடி...
உன் மடியில் தலை சாய்த்து
என் தலைக்கோதி
என் உச்சிமுகர்ந்து
அனிச்சையாய் நீ செய்யும்
அழகே தனிதானடி.......

யார் குருடன்?.....

வாசலில் நிற்கும் 
குருடனை 
கடந்து போய் 
கோவிலின்
உண்டியலில்
போடுகிறோம் பணம்....

இதில்

யார் குருடன்?.....

வேறொன்றும் இல்லை......

எத்தனையோ பல்லவி இருந்தும் உன்

"ச்சீ" போடா என்ற முனகலுக்கு
இணை வேறொன்றும் இல்லை......

எத்தனையோ இசையை நான் கேட்டிருந்தாலும் உன் 

சேலை சலசலப்பிற்கு இணையான இசை வேறொன்றும் இல்லை......

திகட்ட திகட்ட காதலிப்போம்....

பூமியை வானம் புனரும்
காலை மழையில்.....
மெல்லச்செத்து மெல்லச்செத்து
மீண்டும் வா 
திகட்ட திகட்ட காதலிப்போம்....

Friday, April 18, 2014

வாரிசு இல்லாத விவசாயம்.....

வாரிசு இல்லாத விவசாயம்.

பரம்பரையாய் வந்த வயல் காட்டில்
விவசாயம் செய்து வயலுக்கு வடக்கே
தெற்கபார்த்து வீட்டை கட்டி

வந்த வருமானத்தில் திருமனம் செய்து
ஆசைக்கும் அஸ்த்திக்கும் பிள்ளையை பெற்று
அரசு தரும் உதவி தொகையில் படிக்கவைத்தான் என் பாட்டன்...

பட்டனம் வந்து வேலை பார்த்து
படித்த படிப்பை பண்ணாட்டு
முதலாலியிடம் செலவு செய்து

வந்த வருமானத்தில் ஒரு வீட்டை பட்டனத்தில் வாங்க
என்னை வளர்த்த விவசாயத்தை மண்ணுக்குள் புதைத்தேன்.
என் வாரிசை இங்கே படிக்கவைத்துவிட்டு

எனக்கு சோறுபோட்ட விவசாயதிற்கு வாரிசு இல்லாமல்
வானம் பார்த்த பூமியாய் வரண்டு கிடக்கிறது.....

பன்னாட்டு முதலைக்கு இரையாகும் என் படிப்பை விட
இன்றும் விவசாயத்தை பாதுகாக்கும் ஒவ்வொறு
விவசாயியும் உலகத்தின் முதல் பணக்காரணும்
சிறந்த முதலாளியும் அவன் தான்...

நட்புடன்

சத்யா

Tuesday, April 8, 2014

என் இள மயிலே....

என்னை இளமையில் தவிக்கவிட்ட
என் இள மயிலே....

உன் நிழலை வரைந்தேன் கவிதை என்றார்கள்
உன்னையே வரந்திருந்தால் கவிதையாகியிருப்பேன் நான்...

அடியே வேதம் என்று ஆயிரம் உண்டு யாருக்கு தெரியும்
உன் மவுனம் என்றும் அழியா வேதம் என்று...

என் தேவதையே உன் அழகுக்கு நிகர் இல்லை
பவுர்ணமி நிலவலைகளும்....

என் ராட்சசியே செடிக்கு வலிக்காமல் பூக்கள் பரிக்க தெரிந்த உனக்கு
என் வலி தெரிந்தும் விலகியிருப்பதேனடி....

என்னவளே உன் விழிகளை ஒரு முறை பார்ப்பதற்கு
ஆயிரம் முறை துடிக்கிறது என் இதயம்....

உயிர் நீங்காது ஓராயிரம் ஆண்டுகள் உன்னோடு
வாழ்ந்திட எமனுக்கே லஞ்சம் கொடுப்பேனடி....

என் கவிதை ஒவ்வொன்றும் காத்துக்கிடக்கிறது உன்
இதலில் இருந்து வெளிப்பட்டு மோட்சமடய.........

Friday, April 4, 2014

வையத் தலைமைகொள் - வெ. இறையன்பு புதிய தலைமுறை

இறவாமை வேண்டும் என ஆசைப்படுவது ஆன்மிகம்.  மறவாமை வேண்டும் என விருப்பப்படுவது அரசியல்.  மக்கள் மனத்தில் நிலையாக இருக்கும் மறவாமையும் ஒருவித இறவாமை.

அன்றாட நிர்வாகம் மக்களால் மறக்கப்படும்.  ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்து நிற்கக் கூடிய பணியை, பயனைச் செய்து முடித்தால் அது எப்போதும் மக்களால் நினைக்கப்படும்.

இந்த ஆசை பல சாம்ராஜ்யங்களைக் கவிழ்த்ததுமுண்டு.  மக்களின் வரிப் பணத்தை ஆடம்பரமான மாளிகைகள் கட்டவும், பூங்காக்கள் அமைக்கவும் பயன்படுத்தி கஜானா திவாலாகி சூம்பிப்போன நாடுகள் உண்டு.  கிரேக்கமும், ரோமாபுரியும் அதற்குச் சான்று.  இந்தியாவிலேயே தாஜ்மஹாலை நிர்மாணிக்க செல்வத்தை விரயமடித்துவிட்டதாக தந்தையை நொந்தே ஔரங்கசீப் கலகம் செய்ததாக நாடகங்கள் உண்டு.

ஆடம்பரப் பணிகள் மறக்கப்படும்; அவசியமான பணி நினைந்து, நினைந்து இன்புற வைக்கும்.  ஆடம்பரப்பணி ஒருவனின் பதாகையை உயர்த்துவதற்கு.  அத்தியாவசியப் பணி மக்கள் என்றும் மகிழ்ச்சியாய் வாழ.

தமிழக மன்னர்கள் எளிமையாக இருந்தார்கள்.  அரியாசனம் கூட வைத்துக்கொள்ளவில்லை.  மகுடம் சூடவில்லை.  கவசம் அணியவில்லை.  அவர்கள் எளிமையைப் பற்றி மார்கோ போலோ சிலாகித்து எழுதியிருக்கிறார். அவர்கள் மக்கட்பணியே மகத்தான பணி என்று நாட்டைக் காப்பது பொறுப்பு வாய்ந்த செயல் எனக் கருதினார்கள்.  மழை பொய்த்தாலும் மன்னனே நிந்திக்கப்படுவான் என சேரன் செங்குட்டுவன் வஞ்சிக் காண்டத்தில் உரைப்பது சிலப்பதிகாரச் சிறப்பு.  அணைகள் கட்டப்படுவது ஒன்றும் அரிய செயல் அல்ல.

கிறிஸ்து பிறப்பதற்கு 2700 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் சட்-எல்-கட்பா என்கிற அணையைக் கட்டினர். அந்த அணை முதல் வெள்ளத்திலேயே உடைந்து விட்டதாம்.  அவர்கள் தொன்மையான இந்திய அணையைக் காண முகலாயப் பேரரசு இருந்தபோது தூதுக்குழு ஒன்றை அனுப்பினர்.  எகிப்தியக் குழுவினர் எழுப்பிய கேள்விக்கு தில்லி தர்பாரில் எந்தப் பதிலையும் அளிக்க முடியவில்லை.  இந்தியா முழுவதும் தேடிப் பார்த்ததும் அவர்கள் கண்டு அதிசயித்ததும் கல்லணையில்தான்.  

கங்கை கால்வாய்த் திட்டத்தை உருவாக்கிய பேயர்டு ஸ்மித் என்கிற ஆங்கிலேயர், கல்லணையைப் பார்வையிட்ட அந்த நொடியிலேயே, ‘மானுடத்தின் மிகப் பெரிய பொறியியல் சாதனை’ என்று மெய்மறந்து குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ‘கரிகாலன்’ என்கிற பெயரைக் கேட்ட உடனேயே நினைவுக்கு வருவது, ‘கல்லணையே’. தமிழக மக்கள் அணையைக் கட்டியவர்களை ஆண்டவனாகக் காண்பவர்கள்.  கரிகாலனானாலும் சரி, பென்னி குவிக் ஆனாலும் சரி.  ஆக்கப்பூர்வமான செயல்களையே மக்கள் போற்றுகிறார்கள் என்பதற்கு அத்தாட்சிகள்.

கரிகாலன் ஒன்றும் முழுநேரம் கல்லணையைக் கட்டிய பொதுப்பணித் துறைப் பொறியாளரோ, ஒப்பந்தக்காரரோ அல்லன்.  மன்னன்.  தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவன்.      

தமிழகம் யாராலும் துளைக்க முடியாத கோட்டையாக இருந்தது ஒரு காலம்.

அசோகருடைய பரந்த சாம்ராஜ்யத்தில் கூட தமிழகம் அடங்கவில்லை.  அவருடைய இரண்டாம் பாறை  சாசனத்தில், ‘சோழர்கள், பாண்டியர்கள் அரசை ஒட்டிய நம் ஆட்சிக்குட்பட்ட எல்லையில்’ என்று தெளிவாக மகத சாம்ராஜ்யத்தின் வரைபடம் குறிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெருமையுடன் திகழ்ந்த காலம் - சங்க காலமும், அதற்கு முந்தைய காலங்களும்.  வீரம், அறிவு, போர், மகிழ்ச்சி, இலக்கியம், எளிமை என்று தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த செறிவான காலம் அது.

கரிகாலன் என்று அழைக்கப்படும் கல்லணையைக் கட்டிய மன்னன் சங்க காலத்தில் வாழ்ந்தவன்.  ‘திருமாவளவன்’ ‘கரிகால் வளவன்’ என்கிற பெயர்களுக்கும் சொந்தக்காரன்.

பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை போன்ற சங்ககால இலக்கியங்களின் தலைமகன் பாத்திரம் அவனுக்கே. அவன் எத்தனாவது கரிகாலன் என்று நாம் இருக்கும் சிக்கல்களுக்கு நடுவே இன்னோர் இடியாப்பச் சிக்கலை இடைசெருகத் தேவையில்லை.

கரிகாலன், இளஞ்சேட் சென்னியின் மகன்.  தாய் கருவுற்றிருக்கும்போதே தந்தை இறந்ததால், ‘தாயம் எதிப் பிறந்த குழந்தை’ எனப் பெயர் பெற்றது.  வாரிசுப் போர் அப்போதும் நிகழ, குழந்தை பாதுகாப்பாக மறைத்து வளர்க்கப்பட்டது.  உறையூர் அப்போது  சோழர் தலைநகரம்.

உறையூர் கோழியூர் என்றும் அழைக்கப்படுவதற்கு வீரவரலாறு கர்ணவழிக் கதையாக உண்டு.  சோழ மன்னன் ஒருவன் பட்டத்து யானையின் மீது பவனி வந்தான்.  யானைக்கு திடீரென மதம் பிடித்தது.  யானைப் பாகன் செய்வதறியாது திகைத்து நின்றான்.  அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த கோழியொன்று, யானையின் தலை மீது அமர்ந்து அதன் மத்தகத்தின் மீது அலகால் கொத்தியது.  யானையின் மதம் மறைந்தது. கோழியும் விலகி மறைந்தது.

அவ்வளவு வீரம் செறிந்த மண் கோழியூர் என்கிற பெயரில் சோழப் பேரரசின் தலைநகரமானது.  மண்ணுக்கும், மன்னனுக்கும் மட்டுமல்ல; வீரத்திற்கும் தொடர்பு உண்டு. மண்ணும், மரபும், மக்களும், உணவும், சங்கிலித் தொடராகத் துணிவையும், எதிர்க்கும் ஆற்றலையும் நிர்ணயிக்கின்றன. வீரர்கள் சூழ வாழ்பவனும் வீரியமடைகிறான். கோழைகள் கும்பலில் மாட்டிக் கொள்பவன் வீரனாக இருந்தாலும் நாளடைவில் பயந்தாங்கொள்ளியாகி பந்தாடப்படுகிறான்.

மேலாண்மையில் ஒரு மொழியுண்டு... ‘நீங்கள் தொடர்ந்து புலியை பூனையைப் போலவே நடத்தினால் அது பூனையாகவே ஆகிவிடும்’ என்று.  அது மனிதர்களுக்கும் பொருந்தும்.

கரிகாலன் சின்னவயதிலேயே மன்னனாக ஆனதாகவும், பகைவர்கள் கடத்திச் சென்று சிறை வைத்ததாகவும் அந்தச் சிறையிலும் அவன் தொடர்ந்து கற்ற போர்ப் பயிற்சிகளை விடாது மேற்கொண்டதாகவும் தகவல்கள் உண்டு.  அவனை பகைவர்கள் சிறைப்பட்டிருந்த அறையை நெருப்பிட்டு அழிக்க நினைத்தனர்.  அங்கிருந்து தப்பினான் சிறுவன்.  அவன் சிங்கமா சிலிர்த்தெழுந்து தப்பியபோது கால்கள் கருகியதால், ‘கரிகாலன்’ என அழைக்கப்பட்டதாகவும், சிலர் யானையைப் போன்ற வலிமையான கால்களின் காரணமாக அவனைக் கரிகாலன் என்றதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இது குறித்த தகவல்களைப் பட்டினப்பாலை நூலில் படிக்கலாம்.

கரிகாலன் கால்கள் கறுப்பாக இருந்ததா என்பது பிரச்சினையல்ல; அவன் பெயர் அப்படி நிரந்தரமாகக் கறுப்பு வெள்ளையாக ஆனது என்பதே சிந்தனைக்குரியது.
பெரிய திட்டங்களை செயல்படுத்தப் பணம் வேண்டும். அதற்கு மக்களிடம் வருத்தாமல் வரி வசூலிக்க வேண்டும். புறநானூறு கூறுவது போல யானையை வயலை மேயவிட்டால் அது பயிர்களை மிதித்து பெருஞ்சேதமேற்படுத்தும்.  நாமாக அறுவடை செய்தால், அந்நிலத்தில் பத்து யானைகளுக்கு உணவு படைக்கலாம்.

ராஜ்யத்தின் எல்லைகளை விரிக்கும்போது பெறுகிற திரையும் ஒரு நாட்டை செழிப்பாக்கும். கரிகாலன் சோழ நாட்டுப் படைகளை அதிகரிக்கிறான் என்பது தெரிந்ததும் சேர மன்னன் சேரலாதனும், பதினோரு வேளிர் தலைவர்களும், பாண்டிய மன்னன் ஒருவனும் கரிகாலனை எதிர்ப்பதற்காக தஞ்சாவூருக்குக் கிழக்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெண்ணி என்கிற ஊரின் புறவெளியில் அவனை எதிர்கொண்டனர்.

இருதரப்பும் கடுமையாக மோதியது. கரிகாலன் வெற்றி பெற்றான். இது பற்றி அகநானூறு போன்ற தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. வெவ்வேறு இலக்கியங்கள் வெவ்வேறு தகவல்களை எதிரிகள் பற்றிக் குறிப்பிட்டாலும் வெண்ணிப்போர் நடந்ததும், கரிகாலன் வெற்றி பெற்றதும் நிலைநாட்டப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் வரலாற்றுக் குழு அறிக்கை ‘சங்க காலத்தில் வெண்ணியில் நடந்த போர் ஒன்றே ஒன்றுதான்.  அந்தப் போரில் ஈடுபட்டவன் கரிகால் பெருவளத்தான் என்று அழைக்கப்படுகிற கரிகாலன் ஒருவனே’ என டாக்டர் நிரஞ்சனா தேவி கூறுவது பொருத்தமாக உள்ளது.

கரிகாலனை எதிர்த்து மீண்டும் போர். சோழ நாட்டிற்குக் கப்பம் செலுத்தி வந்த ஒன்பது குறுநில மன்னர்களும் ஆந்திர நாட்டைச் சார்ந்தவர்கள்.  அவர்கள் வாகை என்கிற இடத்தில் முற்றுகையிட்டனர்.  கரிகாலன் ஆபத்துகளைத் தாயின் கருவில் இருக்கும்போதே சந்தித்தவன்.  எதிர்ப்புகளோடு வளர்பவர்களும், ஆபத்துகளோடு வாழ்பவர்களும் அசாத்திய துணிச்சலை வளர்த்துக் கொள்கிறார்கள்.  அவர்கள் நெருக்கடிகளை நேசிக்கிறார்கள்.  அப்படி சிறுவயதிலேயே சிறைப்பட்டு, தீயைத் தாண்டி, தீமையை எதிர்த்துப் பழக்கப்பட்ட கரிகாலன் பலம் வாய்ந்த அவனுடைய குதிரைப் படையுடன் வாகைப் புறந்தலையில் போரிட்டான்.  கம்பீரமாகவும், புயலைப் போல் விரைவாகவும் வருகிற அவனுடைய சேனையைக் கண்டதும் எதிரிகள் அச்சத்தில் பின்வாங்கி ஓடி ஒளிந்தனர்.

கரிகாலன் இமயப் படையெடுப்பு பற்றி குடவாயில் பாலசுப்ரமணியன், மு. இராகவ ஐயங்காரை நமக்கு மேற்கோள் காட்டுகிறார்.

சிக்கிம் மாநிலத்திலிருந்த திபெத் நாட்டின் சீனப் பகுதிக்குச் செல்கிற சூம்பிப் பள்ளத்தாக்கை ஒட்டி அமைந்துள்ள, ‘சோழக் கணவாய்’, ‘சோழ மலைத் தொடர்’ ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதியே கரிகாலன் இமயத்தில் புலிச் சின்னம் பொறித்த இடம்".

ஒரிஸாவிற்குச் சென்றபோது, புவனேஷ்வர் நகரில் குலோத்துங்கனால் கட்டப்பட்ட சிலவற்றையும், நிர்மாணித்த குளத்தையும் சோழர்கள் பெயரால்
சொல்லி வருவதையறிந்தேன்.  அப்போது கலிங்கத்துப் பரணி தகவல்கள் எவ்வளவு உண்மை என்பது அந்தச் சின்ன வயதில் எனக்குப் புரிந்தது.  அதைப் போலத்தான் இடங்களின் பெயர்களும் வரலாற்றை மெய்ப்பிக்கும் ஆதாரங்கள்.

தமிழகத்தில்  நாவாய் படையை வலிமையானதாக உருவாக்கியவனும் கரிகாலனே! அவன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் வர்த்தக மையமாக விளங்குவதற்கு அவனுடைய நாவாய்ப்படையும் காரணம். கடற் கொள்ளையர்கள் வணிகக் கப்பல்களைச் சூறையாடா வண்ணம் பாதுகாப்பு அளிக்கிற இடத்தில்தான் வர்த்தகம் பெருகும். ‘நனியிரு முந்நீர் நாவாய் ஓட்டி’ என்கிற புறநானூற்றுப் பாடல் அவனுடைய கப்பற்படையை பற்றிப் பேசுகிறது.  தமிழில் கடலுக்கு இருக்கும் ஏகப்பட்ட பெயர்கள் எவ்வளவு தூரம் தமிழர்கள் கடலோடு ஒன்றி வாழ்வை நடத்தினார்கள் எனத் தெளிவுபடுத்துகிறது.

கடற்படையை வலிமையாக்கி கரிகாலன் கடல் கடந்து இலங்கையின் மீது போரிட்டு வென்றான்.  அவனுடைய படைத் தளபதியை இலங்கையில் ஆட்சி புரிய அமர்த்தினான். பன்னிரண்டாயிரம்  சிங்கள வீரர்களைக் கைதியாக சோழநாட்டுக்கு அழைத்து வந்தான்.  அவர்களையே கல்லணை கட்டும் பணியில் அமர்த்தினான். இலங்கையின் வரலாற்றைக் கூறும் ‘மகாவம்சம்’ என்கிற நூலில் இது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

கடுமையான பாதுகாப்புடன் இயங்கி வந்த சுங்கக் சாவடிக்கு அளந்து கணக்கிட முடியாத அளவு கப்பலிலிருந்து சரக்குகள் கொண்டுவரப்பட்டன.  சுங்கச் சாவடியில் சரக்குகள் மீது புலிச்சின்ன முத்திரை பொறித்து அனுப்பப்பட்டது.  இத்தகவல்களை பட்டினப்பாலையில் பார்க்கும்போது எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் கரிகாலனுடைய ஆட்சி நடந்தது என்பது புரிகிறது; பெருமிதம் ஏற்படுகிறது.

கரிகாலன் அவைக்கு வழக்கு கொண்டு வந்த இருவர் அவனுடைய தோற்றத்தைப் பார்த்துத் தயங்கியபோது, ‘பெரியவர் ஒருவரை அனுப்பி வைப்பதாகச் சொல்லி உள்ளே சென்ற கரிகாலன் அவனே முதியவர் தோற்றத்துடன் வந்து அவர்களுடைய வழக்கை விசாரித்து இருவருக்கும் திருப்திகரமாக தீர்ப்பு வழங்கியதையும், பின்னர் வேடத்தைக் கலைத்து உண்மை வடிவத்தை வெளிப்படுத்தியதையும் ‘பழமொழி’ ஒன்று பகர்கிறது.  அது கரிகாலனுடைய உளவியல் பார்வையையும், நுண்ணறிவையும் வெளிப்படுத்தும் நிகழ்வு.

கரிகாலன் பல்வேறு ஆட்சித் திறன்களைப் பெற்றிருந்ததாலும், அதிக நிதியாதாரத்தைப் பெறும் வழிகளைக் கையாண்டிருந்ததாலும் அவனால், ‘கல்லணை’ என்கிற ஒன்றை கனவு காண முடிந்தது. வேளாண்மையே முக்கிய தொழிலாக இருந்தபோது, பயிர்களின் மீது செலுத்தும் கவனமும் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்கிற கட்டத்தில் காவிரி நீர் சிந்தாமல் சிதறாமல் பயன்படும் வழியை அவன் காட்சிப்படுத்தினான்.   அதுவே இன்றும் அவன் பேர் சொல்கிறது.  கிருஷ்ணராஜ சாகரோ, மேட்டூர் அணையோ கட்டப்படாத காலம்.

பொறியியல் அறிஞர் ஆர்தர் காட்டன் அச்சூழலில் கல்லணையின் பங்கு பற்றி யோசித்தார். கரை புரளும் காவிரி, திருச்சி முக்கொம்புக்கு அருகே காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிவதைப் பார்த்து வியப்புற்றார்.  கொள்ளிடம் ஓடும் பாதை, காவிரியை விட ஆறடி தாழ்வாக இயற்கையிலேயே அமைந்துள்ளதைப் புரிந்து கொண்டார்.  இதன் மூலம் கல்லணை பிறப்பின் ரகசியத்தை அறிந்தார்; அதிசயித்தார்.

இயற்கை அமைத்துக் கொடுத்த வெள்ள வடிகால்தான் கொள்ளிடம்.  காவிரியின் நீர் அனைத்தும் கொள்ளிடம் வழியாகப் பள்ளத்தில் ஓடி கடலில் விழுந்து விரயமானது.  அத்தனை நீரையும் பயன்படுத்தி சோழநாட்டை வளப்படுத்தும் அரிய யோசனையே இந்த கல்லணை தோன்றக் காரணமானது.  

ஆர்தர் காட்டன் கல்லணையின் அடித்தளம் பற்றி அறிந்துகொள்ளும் தணியாத ஆர்வம் கொண்டார்.  ஒரு கோடையில், காவிரி வறண்டிருந்தபோது, அணையின் அடிப்பகுதியைப் பிரித்துப் பார்த்தார். பன்னிரண்டு அடி ஆழம் தோண்டப்பட்டது. கற்கள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டு இருப்பதைக் கண்டார். அவற்றை இணைக்க எந்தக் கலவையும் பயன்படுத்தப்படவில்லை.  அடித்தளம் பெருங்கற்களால் மட்டும் அமைந்துள்ளது என அறிந்தார்.  ஓடும் நீரில் அணையைக் கட்டுவதற்கான இந்தத் தொழில்நுட்பம் உலகில் வேறெங்கும் இருந்திருக்க முடியாது என நம்பினார்.

அவர் ஆழ யோசித்து அந்த நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.

ஓடும்  நீரில் மிகுந்த எடையுள்ள கல்லைப் போட வேண்டும்.  அந்தக் கல் நீரால் புரட்ட முடியாமல், மண்ணுக்குள் அமிழ்ந்து விடும்.  கல்லின் எடை அதிகமாக இருப்பதன் காரணமாக, மணலுக்குள் சென்று,  அடி  ஆழத்தில் அது அணையின் அடித்தளமாகவே அமைந்து விடுகிறது.  இவ்வாறு சில ஆண்டுகள் கற்களைப் போட்டுக் கட்டியதுதான் கல்லணை என்று அவர் புரிந்து கொண்டார்.  ஆழங்காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்கிற தொழில்நுட்பத்தைக் கல்லணை கட்டிய கரிகால் வளவனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.  1874-ஆம் ஆண்டு, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தௌலீஸ்வரம் அணையை கோதாவரி நதியில் அவரே கட்டினார்.  இன்றும் அது அந்த சமவெளிப் பகுதியில் மரகதப் போர்வையைப் பருவம் தவறாமல் பரப்பிவருகிறது.

கல்லணையின் நீளம் 1,080 அடி அகலம் :  40 முதல் 60 அடி. பாம்பு போல வளைந்து நெளிந்து செல்கிறது.

சுற்றுலாத் துறையில் இருக்கும்போது கல்லணையைச் சுற்றிப் பார்க்க நேரிட்டது.  சுற்றுலா என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்க வேண்டும்.  வயோதிகர்களுக்கு ஆலயம், வாலிபர்களுக்குப் பூங்கா, இளைஞர்களுக்கு சாகசம், சிறுவர்களுக்கு உயிரியல், அறிஞர்களுக்கு சரித்திரம் என அனைத்தையும் பரிமாறக்கூடிய இடமே எப்போதும் மக்களை ஈர்க்கும்.

சுற்றுலாவைப் பெருக்க மூன்று தங்க விதிகள் இருக்கின்றன. முதலாவது, நிறைய பயணிகளை ஈர்க்க வேண்டும். அடுத்ததாக, அவர்கள் அதிக நாட்கள் தங்கும்படி செய்ய வேண்டும்.  மூன்றாவதாக அவர்கள் நிறைய பணம் செலவு செய்யும்படி வசதிகள் வேண்டும்.  அப்போதுதான், நம் பொருளாதார நிலை மேற்படும். சுற்றுலாவால் உருவாகும் மனித நாட்கள் அதிகம். படித்தவர் முதல் பாமரர் வரை அனைவருக்கும் பணி வழங்கி வயிறு நிறைக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது சுற்றுலா மட்டுமே.

கல்லணையில், வருபவர்கள் அணையைப் பார்த்து அதற்குப் பிறகு என்ன செய்வது என்று சிந்திக்காமல் இருப்பதை நான் பார்த்தேன்.  பின்னர் அரசு மூலம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி அங்கே அழகான பூங்கா ஒன்று பயணிகள் இளைப்பாறும் வசதிகளுடன் அமைக்கப்பட்டது.   

காவிரி தொடங்கும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை அதன் ஓட்டம், சிறப்பு, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை ஒளி-ஒலிக் காட்சியாக அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினோம்.  அப்போது ‘நடந்தாய் வாழி காவிரி’ என்று சிட்டி- தி. ஜானகிராமன் எழுதிய புத்தகத்தை ஒரு தமிழ்ப் பேராசிரியர் எனக்கு அனுப்பி வைத்தார். காவிரியுடன் பயணம் செய்த சுவையான அனுபவங்களையும், அங்குள்ள மக்களின் வாழ்வையும் சித்தரிக்கும் அற்புதமான பயண நூல் அது.

காவிரி பற்றிய காட்சிக் கூடத்தை அப்புத்தகத்தைத் தழுவி அமைப்பது என முடிவு செய்து அதற்காக ஐந்து கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை வடிவமைத்து முன்மொழிவுகளை அனுப்பினோம்.  இப்போது தமிழக அரசு கரிகாலனுக்கு அங்கு கட்டிய மணி மண்டபம் கூடுதல் பயண ஈர்ப்பு மையம்.

கரிகாலனுடைய தலைமைப் பண்பு இன்று நமக்கெல்லாம் ஒரு மிகப் பெரிய வழிகாட்டி.  பரபரப்புடன் ஆட்சி செய்த பல மன்னர்கள் இந்தியாவில் இருந்தார்கள்.  ஆடம்பரமாகவும், டாம்பீகமாகவும் இருந்த அவர்கள் இன்றும் அவர்களுடைய அட்டகாசங்களுக்காகவும், அத்துமீறல்களுக்காகவும்  விமர்சிக்கப்படுகிறார்கள்.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கரிகாலன் அவனைப் பற்றி புகழ்ந்து எங்கும் கல்வெட்டுகளை எழுதவில்லை.  அவனைப் பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு மட்டும் கல்மண்டபம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தான்.  மாறவர்ம சுந்தரபாண்டியன் தஞ்சையையும், சோழ அரசையும் சூறையாடியபோது, ‘கவிஞருக்குச் செய்த மரியாதை’ என்பதால் அந்தக் கல்மண்டபத்தில் ஒரு கல்லைக் கூட அகற்றவில்லை.  தம்மைத் தாமே புகழ்ந்து எழுதிக் கொண்ட கல்வெட்டுகள் மறைந்து விடும்.

ஆனால் கல்லணை எப்போதும் நிமிர்ந்து நிற்கும். தொடர்ந்து அதை யார் புதுப்பித்தாலும், வலுப்படுத்தினாலும் அதைத் தொடங்கிய கரிகாலன் பெயரே எப்போதும் நிலைத்து நிற்கும்.

செயல்களே சொற்களைவிட முக்கியமானவை.  நாம் எந்த நிறுவனத்தில் எவ்வளவு காலம் பணியாற்றினாலும், அங்கு ஏதேனும் ஒரு நினைத்து மகிழத்தக்க, அடுத்து வருபவர்களும் போற்றத்தக்க மாற்றத்தைச் செய்ய வேண்டும்.  நம் பெயர் மறையலாம்.  ஆனால் நாம் கொண்டுவருகிற மாற்றம், இனிய முன்னேற்றம் எப்போதும் பயனுடையதாக இருக்கும். அது பலருடைய வாழ்வை மேன்மைப் படுத்துவதாக இருக்கும்.

போர், எதிரிகள், இலக்கியம், நீதி பரிபாலனம் என அனைத்திலும் அக்கறை செலுத்திய பின்னரும், கரிகாலன் நிரந்தரமான ஒன்றை நிறுவ நினைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் கோப்புகள் தேங்கிக்கிடக்க விளம்பர வெளிச்சம் விழுகிற நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.  ஆனால் அன்றாடப் பணிகளைத் தாண்டி யார் புதுமையை விளைவிக்கிறார்களோ அவர்களே அந்த நிறுவனத்தை விட்டுச்சென்ற பிறகு போற்றப் படுகிறார்கள்.

கரிகாலன் என்பது பெயர் அல்ல; ஆளுமை.  ஆட்சியாளன் அல்ல; குறியீடு.  நாம் இப்போது ஆற்றும் பணியில் நமக்குப் பின்னும் தொடர்கிற எந்த ஆக்கப்பணியைச் செய்யப் போகிறோம் என்பதையே அந்த ஆளுமை சிந்திக்கத் தூண்டுகிறது.

(தலைமை  கொள்வோம்)

ஒரு சிறுவன் குருகுலத்தில் கல்வி பயிலச் சென்றான். அப்போது கைரேகையும், சாமுத்ரிகா லட்சணமும் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

அவனுக்கு அனுமதியளிக்கும் முன் ஆசான் அச்சிறுவனின் உள்ளங்கையைக் காண்பிக்கச் சொன்னார்.  

நன்றாகப் பரிசோதித்தார் ஆசான்.

‘உன் உள்ளங்கையில் கல்வி ரேகை இல்லை.  எனவே உனக்குப் படிப்பு வராது.’

‘உள்ளங்கையில் எந்த இடத்தில் படிப்பு ரேகை ஓட வேண்டும்?’

ஆசான் அவனுடைய உள்ளங்கையில் படிப்பு ரேகை எங்கேயிருந்திருக்க வேண்டும் என்று வரைந்து காண்பித்தார்.   

ஒரு கக்தியை எடுத்து அந்த இடத்தில் ஆழமாகக் கீறிய அந்தச் சிறுவன் ரத்தம் வழியும் உள்ளங்கையோடு,

‘இப்போது எனக்கு அந்தக் கோடு உள்ளது’ கல்வியை ஆரம்பியுங்கள்’ என்றான்.

அந்தச் சிறுவனின் பெயர் சாணக்கியன்.

வையத் தலைமைகொள் ! – வெ. இறையன்பு புதிய தலைமுறை

கூண்டில் இருந்த சிங்கத்திற்கு, ‘நானும் மற்ற சிங்கங்கள் போல, காட்டிலே ஆனந்தமாகச் சுற்றித் திரிய முடியவில்லையே’ என்று வருத்தமாக இருந்தது.

கூண்டு திறந்திருக்கும் சமயம் பார்த்து காட்டுக்குள் புகுந்தது. காட்டில் மகிழ்ச்சியாக உலாவிய அதற்குப் பசி எடுத்தது. சர்க்கஸில் இருந்தபோது அதற்கு இறைச்சி, கூண்டுக்கே வரும்.  இப்போது..? காட்டுச் சிங்கங்கள் சாமர்த்தியமாக வேட்டையாடி மற்ற மிருகங்களை அடித்துச் சாப்பிட்டன.  

சின்ன வயதிலிருந்தே வேட்டையாடிப் பழக்கமற்ற சர்க்கஸ் சிங்கத்திற்கு எந்த மிருகமும் சிக்கவில்லை.  பசி மயக்கத்தால் துவண்ட சிங்கம் தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் கூண்டுக்கே திரும்பியது.

‘பாசமுள்ள சிங்கம்’ என்று சர்க்கஸ்காரர்கள் சந்தோஷப்பட்டனர். ‘நமக்கு இந்தக் கூண்டுப் பிழைப்பைத் தவிர வேறு வழியில்லை’ என எண்ணியது சிங்கம்.

சுகமாக வாழப் பழகுபவர்களால் ஒருபோதும் சுமக்க முடியாது. சொகுசை எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். சங்கடங்களையும்  நெருக்கடிகளையும் சகிக்கவும், ஏற்கவும், சமாளிக்கவுமே பயிற்சி தேவை.

சிக்கல்களை சந்திக்க, சந்திக்கவே மனிதன் மெருகேறுகிறான்; மெனக்கெடுபவனே மேன்மையாகிறான்.

ராஜநீதியில் மேற்குக்கு எப்படி மாக்கியவல்லியோ, அப்படி சீனத்திற்கு ஜூஜ் லியாங்.  தளபதியாகவும், தந்திரசாலியாகவும் இருந்த அவரை, ‘பதுங்கும் டிராகன்’ என்றே சீனம் அழைத்தது.  டாங் யுகத்தின் காரணகர்த்தாவாக விளங்கிய அவர் பற்றிய புனைவுகள் சுவாரசியமும், பிரமாண்டமும் நிறைந்தவை.  

நுண்ணறிவு, திறமை, விசுவாசம், ராஜதந்திரம், படிப்பறிவு, வானியல் நிபுணத்துவம் என்று பல்வேறு நுட்பங்களில் அவர்  சக்கைப்போடு போட்டதாக, ‘மூன்று நாடுகளின் நேசம்’  என்கிற சரித்திரப் புதினத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தூங்குவது போன்ற கண்ணமைப்பு கொண்ட சீனர்களே ஒரு காலத்தில் அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பது உலகப் பிரசித்தம்.  

க்சூ ஷூ என்கிற நிபுணர் லியூ பெய் என்பவரிடம் லியாங்கை உத்திகளுக்காக அவருடைய படையில் சேர்க்கும்படி அறிவுரை வழங்கினார்.  லியூ பெய் அவருடைய சொந்த ஊருக்குப் பயணம் செய்தார்.  அங்கு லியாங் ஒரு சின்னக் கூரை வீட்டில் வசித்தது தெரிந்தது.  லியாங்கின் பணியாளர், ‘எஜமான் இல்லை’ என்று சொல்லி விட்டார். லியூ பெய், தான் வந்த சேதியை லியாங்கிடம் தெரிவிக்கும்படி கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்.  ஆனால் லியாங் அவர் எதிர்பார்த்தபடி ஓடோடிச் சென்று சலாமிடவில்லை.  இரண்டாவது முறை பயணம் செய்தபோதும், லியாங்கை சந்திக்க முடியவில்லை.  மூன்றாம் முறை சென்றபோது லியாங் தூங்கிக் கொண்டிருந்தார்.  அவர் விழிக்கும் வரை காத்திருந்த லியூ பெய், லியாங் எழுந்ததும் அவரிடம் சேதியைச் சொன்னார்.  சில நிமிடங்களில் லாங்ஜாங் திட்டத்தின் வரைவைத் தயாரித்த லியாங், லியூ பெயிடம் அவருடைய உத்திசாலியாக இருக்க ஒப்புக் கொண்டார்.  
           
தகுதியும், திறமையும் உள்ளவர்கள் சிபாரிசுக்கு அலைவதில்லை.  அவரைத் தேடி அனைவரும் வருகிறார்கள்.  அவர்கள் கவிஞர்கள் போல;  தவமிருக்கும் எல்லாச் சொற்களையும் அங்கீகரித்து விடுவதில்லை.    

லியாங், சீனத்தின் ராணுவத் தொழில்நுட்பத்தை அடுத்த உயரத்திற்கு எடுத்துச் சென்ற மேதாவி.  அவருடைய கண்டுபிடிப்புகள் முக்கியமானவை.  தளவாடங்கள், கண்ணிவெடி, வீல் பேரோ என்கிற போக்குவரத்துக் கருவி போன்றவை அவருடைய நாட்டின் பலத்தை உறுதிப்படுத்தியது.  அவருடைய போர்க்களத்தை ஸ்திரப்படுத்தும் திமிசுக் கட்டைகளாக அவை இருந்தன.  அவர் காலாட்படை, குதிரைப்படை பற்றிய நுணுக்கங்களை தாவோ தத்துவங்களைச் சார்ந்து வடிவமைத்தார்.

அவர் தந்திரங்களில் கில்லாடி.

வேறோர் அதிகாரிக்கு எப்போதும் லியாங் மீது பொறாமை. அவர், ‘இன்னும் ஒரே வாரத்தில்  நீ 10,000 அம்புகள் தயாரிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் தூக்கிலிடப்படுவாய்’ என்று ஆணை பிறப்பித்தார். ஆனால் லியாங் சிறிதும் அசரவில்லை.  ‘மூன்றே நாட்கள் போதும்.  ஒரு வாரம் எதற்கு? முடித்துக் காட்டுகிறேன்’ என்று கட்டைவிரலை உயர்த்திக் கட்டளையை ஏற்றார்.

லியாங் 20 படகுகளைத் தயாரித்தார்.  ஒன்றிரண்டு சிப்பாய்கள் அவற்றை இயக்குவார்கள்.  மற்றபடி படகு முழுவதும் மனித உருவில் கச்சிதமாக வைக்கோல் பொம்மைகள்.  தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வேறுபாடு எதுவும் தெரியாது.  விடியும்போது, பனிமூட்டம் எக்கச்சக்கமாக இருக்கும்போது, எதிரி மன்னன் கோகோ பாசறையிட்டு முகாமிட்டிருக்கும் நதியில் அந்த ஓடங்களை ஓடவிடுகிறார்.  லியாங் முரசுகளை அறைந்து, படைவீரர்களைக் கரையிலிருந்து முழங்கச் செய்து தாக்குதல் நடத்துவது போல,  ‘பாவ்லா’ காட்டச் சொல்லுகிறார்.

கனமான முரசு ஓசை.  ஆர்ப்பரிக்கும் எதிரிப்படை. நதியில் வரிசையாகப் படகுகள்.   பார்வை துல்லியமாகத் தெரியாத பனிமூட்டம். படகுகள் இருபதா, இருநூறா என்று கூடப் புரியவில்லை.  கோகோவின் படைவீரர்கள் சரமாரியாக படகுகளை நோக்கி அம்பு எய்த வண்ணம் இருந்தனர்.  முரசு சத்தமோ கூடிக் கொண்டேயிருந்தது.  அந்த அம்புகள் அனைத்தும் வைக்கோல் மனிதர்களின் உடம்பில் குத்தி நின்றன.  எக்கச்சக்கமாக அம்புகள் சேர்ந்து படகே மூழ்குமளவு எடை கூடியதும் எச்சரிக்கையுடன் கரைக்குத் திரும்பின.  அந்த அம்புகள் வைக்கோல் மனிதர்களிடமிருந்து கவனமாக உருவி எடுக்கப்பட்டபோது, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அம்புகள் கிடைத்தன.  ஆணையிட்ட அதிகாரி அதிர்ச்சியில் அசந்து போனான்.

சீனம் இன்றிருப்பது போன்று ஒரே பிரதேசமாக இருக்கவில்லை.  ஹன் சாம்ராஜ்யம் கி.பி. 220-ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்தது.  அது பலவீனமானவர்களுடைய  அரசாட்சியாலும், பிரிவினைகளாலும், இயற்கை இடர்பாடுகளாலும் குறுகத் தொடங்கியது.  கிழக்குச் சீனத்தில் மஞ்சள் தலைப்பாகையுடன் 3,50,000 கிளர்ச்சியாளர்கள் தலைவலி தந்தனர்.  மேற்கிலிருந்த புரட்சியாளர்கள் அவர்களாகவே சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தனர்.  

மன்னர் லிங்டி 189-ஆம் ஆண்டு மண்டையைப் போட்டதும், வாரிசு அரசியலில் வம்சம் மண்டை காய்ந்தது.  ஒரு தளபதி தலைநகரைச் சூறையாடி அவையிலிருந்த 2,000 அரவாணிகளைக் கொன்று குவித்து எட்டு வயது பாலகன் ஒருவனை பொம்மை அரசனாக்கினான்.  அவனே உயிருக்குப் பயந்து ஓடிப்போனான்.  

லியாங்கிற்கு அப்போது வயது 19.  கிழக்குப் பிரதேசத்தில் பிறப்பு.  அவர் தாய் இறக்கும்போது வயது 9.  தந்தை தவறியபோது 12. ‘ஏழைத் தந்தைக்குப் பிறப்பது விதி; ஏழை மாமனாரைத் தேர்ந்தெடுப்பது முட்டாள்தனம்’ என்று  நகைச்சுவை மொழி ஆங்கிலத்தில் உண்டு.  லியாங் மிகப் பெரிய படிப்பாளி ஒருவரின் மகளை மணம் செய்தார்.  அவரோ கூலிப்படைகளின் தலைவனான லியூ பெய் என்பவரின் குரு.  

லியூ பெய் வாழ்வு ஏற்ற இறக்கமாக இருந்தது.  கோகோ என்கிற வீ நாட்டுத் தளபதியைக் கொல்ல முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அவர் அந்த அரசவையிலிருந்து அவசர ஓட்டம் எடுத்தார்.  அவர் அந்த நேரத்தில்தான் லியாங்கை சந்திக்க மூன்று முறை பயணம் செய்தார்.

கி.பி. 207-ஆம் ஆண்டு லியாங், லியூ பெய்  வசம் ஹன் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த பெரிய திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.  அதற்குப் பெயர், ‘லாங்ஜாங் திட்டம்’.  வனப்பிரதேசமாகவும், மலைகளால் சூழ்ந்ததாகவும், வளம் கொழிப்பதாகவும் இருந்த சிசுவான் பகுதியில் ஷீ அரசை நிர்மாணிக்க அளிக்கப்பட்ட யோசனையே  அது.  நிர்வாகப் பொருளாதார சட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்துவதன் மூலம் அது வலிமை வாய்ந்த நாடாக வளம் பெறும்.  தெற்குப் பகுதியில் உள்ள வம்சாவளியினரைத் திரட்டி ஹன் எதிர்ப்பை முறியடிக்க வேண்டும்.  இவையே லியாங் திட்டத்தின் சாராம்சம்.  

அந்த நேரத்தில் சீனத்தில் பலம் வாய்ந்த இரண்டு அரசாங்கங்கள் மோதிக்கொண்டன.  வூ என்கிற நாடு எதிரி நாட்டிடம் சரணடைவதாக ஒப்புக் கொண்டது.  பத்து கப்பல்கள் முழுவதும் உணவுப் பொருட்களை நிரப்பி ஒப்படைப்பதாக வாக்குக் கொடுத்து, அவற்றை வூ தளபதி எதிரி முகாமிற்கு அனுப்பினான்.  அதிலிருந்த வெடிபொருட்கள் எரிந்து சிதற... பலத்த சேதம்.  மறுமுனையிலோ சரணடைவதாகச் சொன்ன வூவின் படையுடைய முற்றுகை.  திரும்ப வரும் வழியெங்கும் கொரில்லாத் தாக்குதல்கள்.  அப்போது, ‘காற்று எப்படி வீசும், எப்போது வூ நாட்டிற்கு சாதகமாக இருக்கும்’ என்றெல்லாம் வூ நாட்டு மன்னனுக்குத் தக்க ஆலோசனைகளை லியாங் வழங்கி வந்தார்.  அவருக்கு மாந்திரிகம் தெரியும், அவர் காற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவர் என்றெல்லாம் எண்ணுமளவிற்கு அவருடைய பிம்பம் நம்மூர், ‘கட்அவுட்’ போல் பிரமாண்டமானது.  உண்மையைவிட பிம்பங்களே வேகமாக ஊர் சுற்றுகின்றன.

வூ மன்னன் நன்றியுணர்வுடன் லியூ பெய் சிசுவான் பகுதியில் இயங்க அனுமதியளித்தான்.  கி.பி. 220-ஆம் ஆண்டு கோகோ இறந்தான்.  ஹன் அரசு தடுமாறியது.  லியூ தன்னை சீனத்தின் ஹன் வாரிசு என சில ஆதாரங்களை முன் வைத்து, தானே சீனத்தின் உண்மையான அரசன் என அறிவித்தான்.

ஆதரவை அளித்த வூ நாடு சும்மாயிருக்கவில்லை.  லியூ பெயின் தளபதி ஒருவனின் தலையை வெட்டி அனுப்பியது.  உணவுப் பொருட்களின் வரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் கசப்புணர்வு கசிந்தது.  வூ நாடு இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தி லியூ பெயின் முகாம்களுக்குத் தீ வைத்தது.  வேறு வழியின்றி லியூ கோட்டையுடன் கூடிய பாதுகாப்பான நகரத்தில் அடைக்கலம் புகுந்து ஆதங்கத்திலேயே இறந்து போனான்.  மரணப்படுக்கையில்  அவன் ஜூஜ் லியாங்கை அழைத்து, ‘என் மகனே என் வாரிசு.  அவனுக்குப் போதாது.  நீயே பாதுகாக்க வேண்டும்’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு கடைசி மூச்சை நிம்மதியாக விட்டான்.

லியாங் அவனை, அவருடைய சிறகுகளை விரித்துப் பாதுகாத்தார்.  அந்த நாட்டின் முக்கிய சக்தியாக அவரே திகழ வேண்டிய கட்டாயம்.

அப்போது பலசாலியாக இருந்தவை வூ, வீ இரண்டு நாடுகளே! அவர் வூ நாட்டு மன்னருடன் நேசக்கரம் நீட்டி உறவு ஏற்படுத்திக் கொண்டார்.  அது வலுவான கூட்டணியாக இருந்தது.

சாம்ராஜ்யத்தின் எல்லைப் பகுதியோ அமைதியின்றி இருந்தது.  காரணம், அங்கிருந்த மலைப் பகுதிகளின் மரபுவழி மக்கள்.  அவர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவன்.  அவன் ஆள்காட்டி விரலின் அசைவுக்கே அங்கிருந்த அத்தனை மக்களும் கட்டுப்பட்டனர்.  லியாங் அவனை 7 முறை தோற்கடித்தார்.  ஒவ்வொரு முறை அவன் பிடிபட்டபோதும், கொல்லாமல் மன்னித்து அனுப்பினார். ஏழாவது முறையும் தோற்றவுடன் அவனுக்கே வெட்கம் ஏற்பட்டது.  ‘இனி நான் உங்கள் விசுவாசி. தெற்குப் பகுதி இனி ஒருபோதும் கிளர்ச்சியில் ஈடுபடாது.  நீங்களே எங்கள் அரசர்’ என்று சத்தியம் செய்தான்.  அந்த மரபுவழித் தலைவன் பெயர் மெங்.  அவனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அப்பகுதிகளின் நிர்வாகிகளாக்கி நிரந்தரத் தலைவலியை நீக்கினார்.  அந்த மரபுவழி மக்கள் தேர்ந்த குதிரைகளை அளித்து முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்தனர்.

எதிரி நாடு படையெடுத்து வந்தது.  பலம் வாய்ந்த நாடு. வீ என்றால், ‘வீல்’ என்று கத்துமளவு அச்சத்தைப் பரப்பிய வீரர்கள் கொண்ட நாடு.  அதன் மீது நேரடியாக மோதினால் நெற்றி வீங்க நேரிடும் என்பதை அறிந்த லியாங் இரண்டு சிறு பிரிவுகளை மட்டும் நேரடியாக மோத அனுப்பிவிட்டு, பின்புறமாக மற்ற துருப்புகளை அனுப்பி முற்றுகையைத் தகர்த்தார்.  அடுத்த ஆண்டு, யூ, வீ இரு நாடுகளின் மோதலைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடுத்தார்.  ஆனால் மூன்றாம் முறையே கணிசமான முன்னேற்றம்.  இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக பகுதிகளை எச்சரிக்கையுடன் கையாண்ட அவர், சக்தி வாய்ந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பிறகே ஓய்ந்தார்.  

திடீரென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குவது என்பது எளிதல்ல.  வெறும் கையால் முழம் போட வீரம் மட்டும் போதாது, விவேகமும் வேண்டும்; சண்டை மட்டும் போதாது, சாதுரியமும் வேண்டும்.  அவற்றையெல்லாம் தொழில்நுட்பத்துடன் பொருத்தி, அசைக்க முடியாத சக்தியாக உருவாக்கியவர் லியாங்.

மெங் வம்சாவளியினருடன் மோதும்போது, வெற்றி பெறும் நேரத்தில் திடீரெனப் படையைப் பின்வாங்கினார் லியாங்.  அவர்கள் உத்வேகத்துடனும், பெருமிதத்துடனும் முன்னேறியபோது ஏற்கெனவே வெட்டிய, இலை-தழைகளால் மறைக்கப்பட்டிருந்த குழிகளில் அவர்கள் தொப்-தொப் என்று வரிசையாக விழுந்து மாட்டிக்கொண்டனர்.  அவர்களை சிறிதும் சிரமப்படாமல் சென்று சிறை பிடித்தனர் லியாங் படையினர்.

இன்னொரு முறை யானைகளையும், சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட புலிகளையும் எதிரிகள் மலைப் பிரதேசத்தில் பயன்படுத்தினர்.  ஆனால் சிறிதும் அசராத லியாங், நெருப்பைக் கக்கும் எந்திரங்களை முன்னிறுத்தினார்.  மனிதனுக்குக் கிடைத்த மாபெரும் சக்தி நெருப்பு.  அத்தனை விலங்குகளுக்குமே நெருப்பு என்றால் பயம்.

கிரேக்கப் புனைவு ஒன்று உண்டு.  தேவர்கள் மட்டுமே நெருப்பைப் பயன்படுத்தி வந்தார்களாம்.  அப்போது புரோமதியஸ் என்கிற தேவன்,  கடவுளர் உலகத்திலிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டுவந்து மனித இனத்திற்குத் தந்து விட்டானாம்.  ‘இனி மனிதர்களும் நமக்குச் சமமாக ஆகி விடுவார்களே’ என்று கோபப்பட்ட ஜூபிடர் தேவன், புரோமதியஸை தண்டித்தான்.அதன்படி சங்கிலிகளால் பிணைக்கப்பட்டான் புரோமதியஸ். பகலில் கழுகால் சின்னாபின்னமாக்கப்பட்ட அவன் இதயம் இரவில் மறுபடி வளரும்.  மறுநாள் வல்லூறு காலையில் மீண்டும் கொத்தத் தொடங்கும்.  தீராத வலி; ஆராத காயம்.  

விலகிச் சென்றதற்காக வருந்துகிறேன்...

மெங், இறுதிப் போரின்போது புதிய தொழில்நுட்பத்தைக் கையாண்டான்.  அவன் வேறொரு நாட்டிடம் இருந்து கடுமை வாந்த கேடயங்களைத் தருவித்தான்.  அவற்றை வாளால் துளைக்க முடியாது.  ஈட்டிகளால் ஊடுருவ முடியாது.  அப்படிப்பட்ட கேடயங்களுடன் ஆக்ரோஷமாக மோத வந்தது மெங்கின் படை. ஏற்கெனவே மலைப் பகுதியில் வாழ்ந்தவர்கள்.  ஆபத்துகளுடன் இருப்பவர்கள்.  சவால்களோடு கைகுலுக்குபவர்கள்.  அப்படிப்பட்ட அவர்கள் உயிரை துச்சமாக எண்ணி வருவதைப் பார்த்ததும் சட்டென லியாங்கின் படை, ‘ஜகா’ வாங்கியது.  அது ஒரு பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றது.  அங்கே புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் மெங்கின் குதிரைக் குளம்புகள் பட்டதும் அவர்களை எரித்து அழித்தன.  எளிதில் லியாங்கின் மடியில் வந்து விழுந்தது வெற்றி.

லியாங் சிரமப்படாமல், சிராய்ப்பு அடையாமல் சிறப்பான வெற்றியைப் பெற்றவர். அவர் மலைப்பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல சக்கரங்கள் கொண்ட வண்டிகளைப் பயன்படுத்தினார். அதனால் அவருடைய படைவீரர்களும், குதிரைகளும் களைப்படையாமல் எளிதில் பொருட்களைக் கொண்டு செல்ல முடிந்தன.  பிறகு மற்றவர்களும் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

மலைப்பகுதிகளை அதிரடித் தாக்குதலுக்குத் தோதாகப் பயன்படுத்தியவரும் அவரே. சிசுவான் கரடுமுரடான பகுதி. எதிரிகளை அவர்கள் முகாம்களிலிருந்து கவர்ந்து இழுத்து, ஆங்காங்கே மரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வீரர்களைக் கொண்டு சரமாரியான அம்புகளால் தாக்குவதுதான் அவரது அணுகுமுறை. அம்புகளும், ஈட்டிகளும், பாறைகளும் எந்தத் திசையிலிருந்து ஓடி வருகின்றன, பாய்ந்து வருகின்றன என்று அறிவதற்கு முன்பே தாக்குதலில் எதிரிகள் கலகலத்துப் போவார்கள்.

லியாங் பயன்படுத்திய உத்திகளிலேயே உயர்ந்தது காலிக்கோட்டை உத்தி. புத்திசாலியாகவும், உத்திசாலியாகவும் இருக்கும் லியாங் எதற்கும் அசராதவர் என்கிற அபிப்ராயத்தை எதிரிகளிடம் ஆழமாக வேரூன்ற வைத்தார்.  ஒருமுறை அவர் படை வேறு பக்கம் போயிருந்தது. சொற்ப சிப்பாய்களுடன் ஒரு கோட்டையில் அவர் தங்க நேரிட்டது. அதே நேரம் பார்த்து, எதிரி ஒருவன் படை வருகிற தகவல்கள் வந்து சேர்ந்தன.

பொதுமக்களும், குடிமக்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால் லியாங் பயப்படவில்லை.  சிப்பாய்களையெல்லாம் சிப்பந்திகள் போல சிவிலியன் உடையில் நகரின் தெருக்களை சுத்தம் செய்யச் சொன்னார்.  துப்பாக்கி  ஏந்த வேண்டிய கைகள் துடைப்பத்துடன் நகரின் தெருக்களைத் துப்புரவு செய்தன. மக்களோ அச்சத்தின் மடியில் அமர்ந்திருந்தனர்.  

லியாங் சாவகாசமாக சிறிதும் பதற்றமின்றி கோட்டைக் கொத்தளத்தில் இரண்டு குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தார்.  படை நடத்தி வந்த தளபதி, ‘இதில் ஏதோ சூது இருக்கிறது’ என எண்ணி தாக்குதல் நடத்தாமல் தப்பி ஓடினான்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பதற்றமடையக் கூடாது.  பொறுமையுடன், எதிரியின் அசைவுகளைக் கவனித்து அவற்றிற்குத் தகுந்தவாறு காய் நகர்த்த வேண்டும்.  போர்க்களத்தில் மட்டுமல்ல, நிறுவனத்திலும் நாம் ஏற்படுத்தும் பிம்பங்கள் முக்கியம்.  எந்த மிகப் பெரிய பிரச்சினைக்கும் தீர்வு உண்டு.  கொஞ்சம் ஆற அமர யோசித்தால் எந்த நெருக்கடியையும் மதி யூகத்தால் சந்திக்க முடியும்.  அவற்றைப் பக்கவாட்டுச் சிந்தனைகள் என்று மேற்கு இப்போது அழைக்கிறது. ஆனால் பெயரிடாமல் அப்போதே கிழக்கு செய்து முடித்தது.

தலைமை கொள்பவர்கள் ஒவ்வொரு நெருக்கடியையும் அவர்களை பலப்பரீட்சை செய்துகொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பாகக் கருதுவார்கள்.  அவர்களுடைய அறிவு, சாணை தீட்டப்பட்ட கூர்மையுடன் இதுவரை யாரும் எண்ணியிராத தீர்வைக் காணும்.  இதுவே எளிய முறையில் வாழ்வைத் தொடங்கிய லியாங் காட்டும் வழி.

பிடிபடத் தொடங்குகிறதா பிரபஞ்ச ரகசியம்? பத்ரி சேஷாத்ரி - புதிய தலைமுறை

பிரபஞ்சத்தில் நாம் இன்னும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. அதே நேரம் இந்தப் பிரபஞ்ச ரகசியங்களைப் புரிந்துகொள்ள, பல்வேறு இயற்பியல் அறிஞர்கள் கடுமையான ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

2012-இல் ஹிக்ஸ் போசான் என்கிற துகள் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி ஒரு துகள் இருக்கவேண்டும்; அப்படி ஒன்று இருந்தால்தான் உலகில் உள்ள பருப்பொருள்களுக்கு நிறை (எடை) என்கிற குணம் ஏற்படும் என்று சிலர் ஏற்கெனவே கோட்பாட்டு ரீதியாகச் சொல்லியிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு துகள் உண்மையிலேயே இருக்கிறதா என்பதைக் கண்டறிய, லார்ஜ் ஹேட்ரான் கொலைடர் என்கிற கருவி உருவாக்கப்பட்டு, பரிசோதனைகள் நடந்தன. ஹிக்ஸ் போசான் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் விளைவாக பீட்டர் ஹிக்ஸ் முதலான மூவருக்கு 2013-ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு தரப்பட்டது.

கிட்டத்தட்ட அதேபோன்றதொரு கண்டுபிடிப்பு பற்றிய அறிவிப்புதான் கடந்த வாரம் வெளியானது. இந்த அறிவிப்பு சிறு துகள்களைப் பற்றியதல்ல; மாபெரும் பிரபஞ்சத்தைப் பற்றியது.

நாம் வாழும் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது; அந்தப் பிரபஞ்சம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்பவை குறித்த செறிவான கருத்துகள் இருபதாம் நூற்றாண்டில்தான் வெளியாகின. அதுவரையில் இந்தப் பிரபஞ்சம் என்பது சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ஒருவரால் படைக்கப்பட்டது, இந்தப் பிரபஞ்சம் மாறாது இருப்பது என்றே மக்கள் கருதிவந்தனர்.

ஆனால் பிரபஞ்சமானது உண்மையில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்கிற கருத்தை 1927-ஆம் ஆண்டில் ஜார்ஜ் லெமைத்ரே முன்வைத்தார். 1929-இல், எட்வின் ஹப்பிள், இது உண்மைதான் என்பதை தொலைநோக்கிகள் மூலம் நீண்டதூர நட்சத்திரங்கள் எவ்வளவு வேகமாக நம்மிடமிருந்து விலகிச் செல்கின்றன என்பதைக் கணக்கிடுவதன்மூலம் நிறுவினார்.

இதற்குமுன்னதாகவே ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பொதுச் சார்பியல் கொள்கை என்கிற மாபெரும் அறிவியல் உண்மையை வெளியிட்டிருந்தார். ஐசக் நியூட்டன், நிறையுள்ள பொருள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன என்பதை 17-ஆம் நூற்றாண்டிலேயே நிறுவியிருந்தார். ஐன்ஸ்டைன், இந்த ஈர்ப்பு விசை என்பது, காலவெளி (Space&time) என்பதன் அடிப்படைக் குணம் என்றார். இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு புள்ளியும் ஈர்ப்பினால் வளைந்திருக்கிறது. எந்தப் புள்ளியில் நிறை அதிகமாக உள்ளதோ அந்த இடத்தில் காலவெளி அதிகமாக வளைகிறது. அந்த வளைவுக்கு ஏற்றார்போல அந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் பொருள்களும் ஒளி போன்றவையும் வளைந்து செல்கின்றன.

இதை ஒரு சமன்பாடாக ஐன்ஸ்டைன் 1916-இல் எழுதும்போது அவருக்கு ஒரு சிக்கல் எழுந்தது. அந்தச் சமன்பாட்டின்படி பிரபஞ்சம் விரிந்துகொண்டே செல்லும். ஆனால் 1916-இல் பிரபஞ்சம் விரியும் என்று யாருமே நம்பவில்லை. எனவே பிரபஞ்சம் விரியாமல் இருக்க ஐன்ஸ்டைன், தன் சமன்பாட்டில் பிரபஞ்ச மாறிலி என்கிற ஒன்றைச் சேர்த்தார். பின்னர் எட்வின் ஹப்பிள், பிரபஞ்சம் உண்மையிலேயே விரிவடைகிறது என்று 1929-இல் கண்டுபிடித்துச் சொன்னபோது, ஐன்ஸ்டைன், பிரபஞ்ச மாறிலி என்கிற ஒன்றை பொதுச் சார்பியல் சமன்பாட்டில் சேர்த்தது தன் மிகப்பெரிய முட்டாள்தனம் என்று சொன்னார்.

பிரபஞ்சம் விரிவாகிக்கொண்டே போகிறது என்பது மட்டுமல்ல, தற்போது, அதன் விரிவாக்க வேகம் மேலும் கூடிக்கொண்டே இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் முன்னொரு காலத்தில் பிரபஞ்சம் என்பது மிகச் சிறியதாக, அடர்த்தி மிகுந்ததாக இருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. அதன் நீட்சியாகத்தான் பெருவெடிப்புக் கொள்கை என்கிற ஒன்று முன்வைக்கப்பட்டது.

இப்படியே பின்னோக்கிப் போனால், சுமார் 1380 கோடி ஆண்டுகளுக்குமுன் பிரபஞ்சமானது, இன்று இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்து நிறைகளையும் உள்ளடக்கியதாக, ஆனால் ஓர் அணுவைவிடவும்  சிறியதான இடத்தைக் கொண்டதாக இருந்திருக்கவேண்டும். அந்த நேரத்தில் அழுத்தம் தாங்கமுடியாமல் அது வெடித்துச்  சிதறியிருக்கவேண்டும். அப்படிப்பட்ட சிதறல் விரிவாகிக் கொண்டே போய், அண்டங்கள் உருவாகி, நட்சத்திரங்கள் உருவாகி, கோள்கள் உருவாகின என்கிறது ஒரு கோட்பாடு. இதற்குப் பெயர்தான் பெருவெடிப்புக் கொள்கை.

இந்தப் பெருவெடிப்பு என்பதற்கு என்ன அத்தாட்சி? பெருவெடிப்புக்குப் பின் என்ன ஆனது? இதுபோன்ற பல கேள்விகளுக்குப் பல ஆண்டுகள் விடை இருக்கவில்லை. ஆனால் 1964-இல் முற்றிலும் எதிர்பாராத இடத்திலிருந்து ஒரு பதில் கிடைத்தது. பென்ஸியாஸ், வில்சன் என்கிற இருவர், 20 அடியில் ஒரு மிகப்பெரிய டிஷ் ஆண்ட்டெனாவை உருவாக்கியிருந்தனர். அதைக் கொண்டு சிக்னலைச் சேகரிக்கும் முன்னர் அதில் தோன்றும் இரைச்சலை நீக்கவேண்டும்.

என்ன செய்தாலும் ஒரு குறிப்பிட்ட இரைச்சல் போகவே இல்லை. இந்த இரைச்சல் எல்லாத் திசைகளிலிருந்தும் ஒரே மாதிரியாக வந்துகொண்டிருந்தது. சூரியன் இருக்கும்போதும் சரி, இரவு நேரத்திலும் சரி, வானத்தை நோக்கியிருந்தாலும் சரி, வேறு திசையில் வைத்திருந்தாலும் சரி... இரைச்சல் ஒரே மாதிரியாகவே இருந்தது.

இந்த இரைச்சலின் காரணம் என்ன என்று தேடியபோது, பெருவெடிப்புக் கொள்கையின் ஒரு விளைவுதான் இது என்பது புலனானது. பெருவெடிப்புக்குப் பின் சுமார் 3.8 லட்சம் ஆண்டுகள் கழித்து, நட்சத்திரங்களும் கோள்களும் உருவாவதற்கு முன்பாக, பிரபஞ்சமே கொழகொழவென்ற ஒரு சூப் போல இருக்கும்போது சூட்டின் மிகுதியால் வெப்ப அலைகள் உருவாகின. அந்த அலைகள் அப்போதிலிருந்து அப்படியே பரவியபடி உள்ளன. பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய, இந்த வெப்ப அலைகள் மிக மிகச்  சிறியதாகிக்கொண்டே வந்தன. 20 அடி டிஷ் ஆண்ட்டெனா உருவாக்கப்பட்ட போதுதான் அவற்றைக் கண்டுபிடிக்கவே முடிந்தது. இந்த மைக்ரோவேவ் அலைகளுக்கு காஸ்மிக் மைக்ரோவேவ் பேக்ரவுண்ட் (CMB) ரேடியேஷன் என்று பெயர்.

சி.எம்.பி. அலைகள் கண்டுபிடிக்கப்பட்டது, பெருவெடிப்புக் கொள்கையை உறுதி செய்தது. ஆனால் மேலும் பல கேள்விகள் தொடர்ந்தபடியே இருந்தன. உதாரணமாக ஒரு கேள்வி, என் பிரபஞ்சத்தில் எல்லாத் திசைகளுமே பார்க்க ஒரே சீராக உள்ளன என்பது. இரண்டாவது கேள்வி, பிரபஞ்சத்தில் ஆங்காங்கு மட்டும் ஏன் அண்டங்களும்  நட்சத்திரங்களும் உருவாகின; ஏன் ரொட்டியில் வெண்ணெயை வாகாகத் தடவினால் இருப்பதுபோல பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் பொருள்கள் இல்லை; விட்டுவிட்டு இருக்கின்றன என்பது.

இதனை எதிர்கொள்ளும் விதமாக உருவானதுதான் பெரு விரிவுக் கொள்கை. ஆலன் குத் என்பவர் முன்வைத்து, பின் பிறரால் மேலும் சீராக்கப்பட்டது. இதன்படி, பிரபஞ்சம் உருவாகி, 10-35 விநாடிகள் கழித்து (அதாவது ஒரு விநாடியில் மிக மிகச் சிறிய ஓர் அளவு), பிரபஞ்சம் மிக மிக வேகமாக விரிவடைந்தது. அதாவது 10-32 விநாடிகளுக்குள் அது 1,050 மடங்கு பெரிதாக ஆனது. இந்தக் கட்டத்தில் விரிவான பகுதி முழுமைக்கும் வெற்றிட ஆற்றல் ஒன்று ஏற்பட்டு அது பிரபஞ்சம் முழுதையும் நிறைத்தது. இந்தக் கட்டம் முடிவடைந்தபின், பிரபஞ்சம் மீண்டும் ஆற அமர, பொறுமையாக மீண்டும் விரிவடையத் தொடங்கியது.

இந்தக் கொள்கைக்கு,  பிரபஞ்சத்தின் பெரும் விரிவுக் கொள்கை (inflation theory of cosmos) என்று பெயர். இந்தக் கோட்பாட்டால், பெருவெடிப்புக் கொள்கையில் பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். மேலும் ஏன் சில இடங்களில் மட்டும் பொருள்கள் ஒன்றுசேர்ந்து அண்டங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை உருவாயின என்றும் விளக்க முடியும்.

சரி, எப்படி காஸ்மிக் மைக்ரோவேவ் பேக்ரவுண்ட் அலைகள் கண்டுபிடிக்கப்பட்டனவோ, அதேபோல், பெரும் விரிவுக் கொள்கையை நிரூபிக்க ஏதேனும் சாட்சியம் உள்ளதா? இல்லாவிட்டால் ஆளுக்கு ஒரு கோட்பாட்டை முன்வைத்து நான் முன்வைத்ததுதான் சரி என்று சொல்லிக் கொண்டிருப்பார்களே? காஸ்மிக் மைக்ரோவேவ் உருவான காலகட்டம், பிரபஞ்சம் தோன்றி 3.8 லட்சம் ஆண்டுகள் என்று பார்த்தோம். அதற்குமுன் மின்காந்த ஒளி அலைகள் உருவாகியிருக்கவே முடியாது. ஆனால் மிக வேகமாக பிரபஞ்சம் விரிவடைந்ததால், ஐன்ஸ்டைனின் காலவெளியில் சில அலைகள் தோன்றியிருக்கவேண்டும்.

குளத்தில் ஒரு கல்லைப் போட்டால், அலைகள் தோன்றுகின்றன அல்லவா? நம் அருகே ஒரு பைக் படுவேகமாகச் சென்றால் காற்றில் ஒலி அலைகள் ஏற்படுகின்றன அல்லவா? அதுபோல.

இந்த அலைகளுக்கு கிராவிடேஷனல் வேவ்ஸ் (ஈர்ப்பலைகள்) என்று பெயர். காஸ்மிக் மைக்ரோவேவைவிட மிக மெலிதானவை. கண்டுபிடிக்கக் கடினமானவை. இவை இருப்பது உண்மை என்றால், காஸ்மிக் மைக்ரோவேவிலிருந்து இவற்றைப் பிரித்துக் கண்டுபிடிக்கவேண்டும். இதனைத் தேடித்தான் விஞ்ஞானிகள் அலைந்துகொண்டிருந்தனர். இறுதியாக சென்ற வாரம், அமெரிக்காவின் ஒரு குழு BICEP2 என்கிற கருவியின் துணையோடு அண்டார்டிகாவில் நடத்திய ஆய்வில் மிகத் துல்லியமாக இந்த ஈர்ப்பலைகளைக் கண்டுபிடித்துள்ளது.

இனி என்ன?

இந்தக் கோட்பாட்டை முன்வைத்த ஆலன் குத், ஆண்ட்ரெய் லிண்டே ஆகியோருக்கு வரும் ஆண்டுகளில் நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெருவெடிப்பு, பெரும் விரிவு ஆகியவை உண்மை என்றால் அடுத்து வெற்றிட ஆற்றல் என்பது குறித்து மேலும் சில புரிதல்களை நோக்கி நம் ஆய்வுகள் நகரும். இருள் பொருள், இருள் ஆற்றல் ஆகியவை குறித்த ஆராய்ச்சிகள் வலுப்பெறும். இவைதான் நாம் இன்னும் கண்டுபிடிக்கவேண்டிய மிகப்பெரிய விஷயங்கள். இவை பற்றி நாம் அறிந்துகொண்டால்தான் பிரபஞ்சத்தின் பல ரகசியங்கள் புலனாகும்.

Sunday, February 23, 2014

தோற்றவனின் ரொட்டி துண்டுகள்....

தோற்றவனின் ரொட்டி துண்டுகள்
பறிக்கபடுகின்றன
கயவர்களால் அல்ல காரியக்காரர்களால்.....

தோற்றவன் தேடுகிறான்
தோற்றது எங்கே என்று
அவன் அதிகாரத்திற்கு துதி பாடவில்லை
ஆனாலும் தோற்கிறான்
அதிகார துதிபாடுபவர்களிடம்.....

தோற்றவன்
வேட்டை மிருகத்தை தவறவிடவில்லை
தடுமாறினான் துதிபாடியவனின்
காய் நகர்த்தலில்....

தோற்றவன் வலிகளை வர்ணிக்க வேண்டுமானால்
தோற்றது அவன் திறமையின் வெளிப்பாடு
அவன் திறமையில்லை.....

தோற்றவன் களைத்து போகவில்லை
அவன் திறமையும் தூங்கவில்லை
காரணம்
பத்தவில்லை இந்த ரொட்டி துண்டுகள்............

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

  • உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு
  • உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு
  • தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை
  • தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை
  • விழவது நம் வாடிக்கை
  • வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை
  • தொழுவது நம் நம்பிக்கை
  • நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை
  • மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான்
  • முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே தோற்கிறான்
  • கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே  தெய்வம் உண்டு
  • கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
  • வெற்றி நிச்சயம் என்ற எண்ணமே வெற்றிக்கு முதல் இரகசியம்
  • தோல்வி நிச்சயம் என்ற அச்சமே தோல்விக்கு மூல காரணம்
  • உங்களது சந்தேகங்களையே சந்தேகித்து விரட்டுங்கள்
  • உங்களின் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை வையுங்கள்
  • என்னாலும் செய்ய முடியும் என்பது நம்பிக்கை
  • என்னால்தான் செய்யமுடியும் என்பது அகந்தை
  • பறக்கத் துணிந்தவருக்கு இறகுகள் பாரமில்லை
  • இறக்கத் துணிந்தவருக்கு மரணம் ஒரு பயமில்லை.                                 

போராட்டம்

  • விமர்சனம் என்பது கடல் பயணத்தின் தடை கல் விலகிச்செல்ல முடியும்
  • வீண்பகை என்பது சாலை பயணத்தின் தடை கல் தகர்த்தே செல்ல முடியும்
  • உரிமை மேல் ஆண்மை பாராட்டாதவர் சாந்தம்
  • பெருமை இல்லாத பிணத்தில் பிறந்ததோர் சாந்தக்குளிரே
  • உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு
  • உன் சுயபுத்தியே உனது ஆசான் அஞ்சாமல் போராடு
  • மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
  • தயங்குபவர் தலைவராக இருப்பதில்லை
  • கலங்குபவர் கலைகளில் சிறப்பதில்லை
  • கசங்குபவர் முண்ணனியில் வருவதில்லை
  • எடை இல்லாது விலையில்லை
  • நடை இல்லாது நாட்டியமில்லை
  • படை இல்லாது போருமில்லை
  • தடை இல்லாது வெற்றியுமில்லை
  • காவியினால் மட்டுமே வறுமைக்கு சாவி கிடைக்காது
  • கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
  • துடுப்பு இலொலாமல் தோனியில்லை
  • துணை இல்லாமல் பயணமில்லை
  • படி இல்லாமல் ஏணியில்லை
  • அடி வாங்காது ஏற்றமில்லை
  • கடல்கள் மையத்திலிருந்து பல புயல்கள் புறப்படுகின்றன‌
  • இதயத்திலிருந்து பல புரட்சிகள் புறப்படுகின்றன,

மனோசக்தி
  • தண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட வறட்சி வரும்
  • கண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட துயரம் வரும்
  • ஒரு நொடி அழும் போது மரணம் ஓரடி முன்னோறுகிறது
  • ஒரு நொடி சிரிக்கும் போது மரணம் ஒரடி பின்னேறுகிறது
  • கவ்விய கவலையும் துயரும் விட்டு விட்டால்
  • உலகு எல்லாம் சேரினும் நம் முன் தீயிலிட்ட பங்சே
  • சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
  • புதைப்படும் கணைக்கும் புறம் கொடாது யாணை
  • அண்டத்தையே பிண்டமாக்கும் அழிவு சக்தி அனுவுக்குள்ளே
  • பிண்டத்தையே அண்டமாக்கும் ஆக்க சக்தி ஆன்மாவுக்குள்ளே
  • உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
  • உடலிலே உழைப்பிருந்தால் காலன் பயமும் மறைந்து போய்விடும்
  • வீரமுள்ள மனிதனை கொல்ல முடியும் தோற்கடிக்க முடியாது
  • விவேகமுள் அறிஞனை விரட்ட முடியும் வீழ்த்த முடியாது
  • நல்ல தொழிலாளியிடம் கடின வேலை தருகிறார் முதலாளி
  • நல்ல இருதயத்திடம் தனது வேலையைத்தருகிறான் இறைவன்
  • தீராத பசியை விட ஒயாத உணவால் மாண்டவர் பலர்
  • ஒயாத உழைப்பை விட தீராத உறக்கத்தில் அழிந்தவர் பலர்
  • துயரத்தின் தீயில் இருந்தே பல மாமேதைகள் கருவானர்கள்
  • துன்பத்தின் சாம்பலில் இருந்தே பல மாமனிதர்கள் உருவானர்கள்

மனோதிடம்

  • குளிரிலும் கோடையிலும் சமமாக இருப்பது உடலின் வெப்பம்
  • குறையிலும் நிறையினும் சமமாக வாழ்வது மனிதின் நுட்பம்
  • துயரங்கள் சிலரை சுட்ட எஃகு போல உறுதியாக்குகிறது
  • தோல்விகள் சிலரை சுட்ட கடுகு போல சிதைத்து விடுகிறது
  • உடல் தளர்வது தோலில் ஏற்படும் காயம் போல‌
  • உளம் தளர்வது எலும்பில் ஏற்படும் முறிவு போல‌
  • பலமில்லாதவர்கள் பாதையின் கற்கள் தடைக்கற்கள்
  • பலமுள்ளவர்கள் பாதையின் தடைகள் படிக்கற்கள்
  • இத்தனி உலகிலே எத்தனை துயர் கண்டாலும் அத்தனையும்
  • நம் அழுக்கையெரித்து நல் சுவர்ணமாக சோதிக்கத்தானே
  • பிறவிக்குருடனின் பால் நிறம் கொக்கு போல என்றாணம் ஒரு மூடன்
  • சற்றே பாதையாதிருந்து பாரும் எதிலும் பேரின்பமே திகழும்
  • துயரென்பது நரி போல ஒடதுடத்துரத்தும் நின்றதும் நின்று விடும்
  • துன்பமென்பது நிழழ்போல ஒட ஒடத் தொடரும் நின்றதும் நின்று விடும்
  • கையகலமே அவன் கொடை
  • கருணை மனத்தின் அகலமே மாண்பு
  • கண்ண கலமே அவள் கல்வி
  • கலங்காத இதயத்தின் அகலமே அவன் வாழ்வு
  • திறமையான வாளுக்குத் தேவை உறுதியான கைப்பிடி
  • வலிமையான கைகளுக்குத் தேவை உறுதியான இருதயம்

அஞ்சாமை
  • தங்கத்தை தீயிட்டாலும் அதன் தரம் குணம் மாறுவதில்லை
  • அங்கத்தை தீயிட்டாலும் ஆன்றோர் பொய் பேசுவதில்லை
  • இழப்பு இல்லாமல் ஒரு லாபம் அடைய முடியாது
  • ஆபத்து இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது
  • அஞ்சாமை என்பது தெளிந்த அறிவின் விளைவாகும்
  • துஞ்சாமை என்பது துணிந்த துணிவின் விளைவாகும்
  • அஞ்சாமையுடன் நெஞ்சிலிருந்து வீரத்திருமகள் கட்டியனைப்பான்
  • துஞ்சாமையுன் விழியிலிருந்தால் வெற்றித்திருமகள் வீட்டிலிருப்பான்
  • உழைப்பதற்கு முதுகு வளை
  • எதிர்ப்பவர்க்கு முதுகு வளைக்காதே
  • அறிஞருக்கு தலை வணங்கு
  • அறிவானுக்கு தலை குணியாதே
  • வளைந்து நெளிந்து குழைந்து தளர்ந்து வாழ்வது புழுவின் வாழ்க்கை
  • நிமிர்ந்து துணிந்து பாய்ந்து வளர்ந்து வெல்வது புலியின் வாழ்க்கை
  • கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாத கால்கள் ஊர் போய்ச் சேரும்
  • வில்லுக்கும் சொல்லுக்கு அஞ்சாத காதுக்கு புகழ் வந்து சேரும்
  • வளைந்து கொடுப்பவர் எந்தக் கதவுக்குள்ளும் நுழைந்து விடுவார்
  • நிமிர்ந்து நடப்பவர் எந்தத் தடையையும் தாண்டிவிடுவார்
  • அஞ்சாமை என்பது ஆண் முகத்தில் மீசை
  • ஆணவம் என்பது பெண் முகத்தில் மீசை

கொள்கை
  • பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொள்கை வைக்கிறான்
  • பிறக்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு செய்தி அனுப்புகிறான்
  • அற்புதமான இலட்சியத்திற்காக உதவியை உதறி விடு
  • அற்பனுன இலட்சியத்துக்காக இலட்சியத்தை உதறி விடாதே
  • அற்ப தூசுகள் காற்று வரும் போது பறக்கலாம் என காத்திருப்பார்கள்
  • அற்ப மனிதரும் அதிட்டம் வரும் போது ஆடலாம் என காத்திருப்பார்கள்
  • ஆடையை விட்டபின் கிடைத்தது வெற்றியுமல்ல‌
  • கொள்கையை விட்ட பின் அடைந்தது கோட்டையுமல்ல‌
  • கொள்கை என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையே தடையாகக் கூடாது
  • குறிக்கொள் என்பது பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக வேண்டும்
  • துக்கத்துக்கு அழுவது முகம் துடைப்பது போல ஒரு பழக்கமாகி விட்டது
  • கொள்கையை பேசுவது மூக்கு சிந்துவது போல ஒரு வழக்கமாகி விட்டது
  • வெற்றி தொடர்ந்த போது பாதை மாறாதே
  • தோல்வி தொடர்ந்த போதும் கொள்கை மாறாதே
  • கொள்கை பிடிப்புள்ளவர் வாழ்வு நெடும் பயணத்தின் நீளம்
  • குரங்கு பிடிப்புள்ளவர் வாழ்வு செக்கு மாட்டின் வட்டம்
  • ஆடையை அவிழ்த்தவருக்கு பரிசு என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • கொள்கையை விட்டவருக்கு பதவி என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • இலக்கு இல்லாத கப்பல்கள் கரை சேர்வதில்லை
  • இலட்சியம் இல்லாத மனிதர்கள் வெற்றி காண்பதில்லை