Tuesday, January 24, 2017

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள 10 வழிகள்! - விகடன்

 

வாசிப்புப் பழக்கம், புத்தகம், 10 வழிகள், படிப்பு
“எனக்கும் புத்தகங்கள் படிக்க ஆசை தான். ஆனா,இருக்குற நேரம் பூரா வாட்ஸ்ஆப், பேஸ்புக் பார்க்கவே சரியா இருக்கு. டிவி பார்க்ககூட நேரம் இல்ல  இதுல எங்க இருந்து புக்கு படிக்கிறது”என்கிற மனிதரா  நீங்கள் ..?  வாசிப்புப் பழக்கம் இல்லையே என்று ஏங்குபவரா..  அப்போ உங்களுக்கு இந்த முத்தான பத்து வழிகள் கண்டிப்பாக பயன்தரும்.
வழிமுறைகளை பார்ப்பதற்கு முன்,”புத்தகங்கள் படிப்பது இனிமையான அனுபவம்” என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்.புத்தக வாசிப்பு என்பது மனது ஒன்றிச் செய்ய வேண்டிய செயல்.இல்லையெனில் நீங்கள் படிக்க தேர்ந்தெடுத்திருக்கும் புத்தகம் எவ்வளவு தான் எளிமையான பொருளடக்கத்தைக் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக படிக்க முடியாது. அப்படி உங்களால் எவ்வளவு முயன்றும் படிக்கும் மனநிலை வரவில்லை எனில் புத்தகங்களை மூட்டை கட்டிவைத்து விட்டு, உங்கள் விருப்ப வேலைகள் எதையாவது செய்யலாம் 
சரி,பாயிண்ட்களுக்குக்கு வருவோம்,
டைம் ப்ளீஸ்!
நாம் சாப்பிட, தூங்க நேரம் ஒதுக்குவது போலவே புத்தக வாசிப்பிற்கும் ஒரு நாளில் குறிப்பிட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரங்களில் படித்தே தீருவது என்று உறுதி எடுத்துகொள்ளுங்கள்.காலையில் தேநீர் அருந்தும் நேரத்தில் அன்றைய செய்தித்தாள்கள் பார்ப்பதுபோல,காலை,மதியம் மற்றும் இரவு உணவு உண்ணும் நேரங்களில் படிக்க முயற்சி செய்யுங்கள். இதுவே கிட்டத்தட்ட ஒரு நாளில் ஒரு மணிநேர வாசிப்பாக ஆகிவிடும்! இது ஒரு நல்ல தொடக்கமாக மட்டுமே இருக்கும். இதற்கு மேலும் நீங்கள் நேரம் ஒதுக்கலாம்!
புத்தகமும் கையுமாக அலையுங்கள்!
கையோடு ஒட்டிபிறந்த ரெட்டை பிறவியாய் இருக்கும் மொபைல் போன்களுடன் ஒரு புத்தகத்தையும் வைத்திருங்கள். ’இதென்ன எல்லா எடத்துக்கும் புக்கு எடுத்துட்டு அலைய முடியுமா?’என யோசிக்காதீர்கள்.நாம் வாழும் இந்த காலத்தில் பெரும்பாலான நேரம்  யாருக்கோ காத்திருத்தலிலே கழிகின்றது.எப்போதும் கையில் புத்தகம் இருப்பது இந்த நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க பயன்படும். உதாரணமாக, பேருந்துக்கோ அல்லது ரயிலுக்கோ காத்திருக்கும் நேரம். ஆர்வக்கோளாறில் படம் பார்க்க செல்லும் தியேட்டர்களுக்கு எல்லாம் எடுத்து செல்லாதீர்கள். சற்றேனும் படிக்க நேரம், இடம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டும் எடுத்து செல்லுங்கள்.

புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்,
பட்டியல் போடுங்கள்
என்னென்ன புத்தங்கங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் கைவசம் இருப்பது நல்லது. அதில் எந்த புத்தகங்கள் உங்களிடம் உள்ளன என குறித்து கொள்ளலாம்.ஒரு புத்தகத்தை படித்து முடித்தவுடன் அதனை அடித்து விடுங்கள், அல்லது படித்து முடித்ததற்கு எதாவது அடையாளம் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பட்டியலை உங்கள் மொபைல் போன், அல்லது மெயிலிலோ கூட வைத்துக்கொள்ளலாம். பட்டியலில் புத்தகங்கள் படித்து முடித்து எண்ணிக்கை குறைய குறைய புதிய புத்தகங்களை சேர்த்தக்கொண்டே இருப்பதை கவனித்து கொள்ளுங்கள்.
இடம் முக்கியம் ஜி!
நாம் எந்த மாதிரியான புத்தகங்கள் படிக்கிறோம் என்பதை போலவே எந்த இடத்தில் இருந்து படிக்கிறோம் என்பதும் முக்கியம்! உங்களை சுற்றி எந்த இடையூறுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.மிகவும் இரைச்சல் மிகுந்த இடத்தில அமர்ந்து படிப்பது வீண். அதனால் அமைதியான இடமாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.அமர்ந்து படிப்பது தான் சரியான முறை.  அப்படி படித்தால் தான் முழு கவனத்துடன் படிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மறந்தும் கூட படுத்தபடி படிக்க வேண்டாம். இல்லையெனில் தூங்கி எழுந்தவுடன் உங்கள் புத்தகத்தை உங்கள் முதுகின் கீழே கசங்கிய நிலையிலோ அல்லது தரையிலோதான் கண்டெடுப்பீர்கள்.

புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்
டிவி, இன்டர்நெட்க்கு போடுங்கள் தடா!
மற்ற எல்லாவற்றையும் விட இது சற்று கடினம் தான். ஆனால் இதனால் விளையும் பயன் ரொம்பவே அதிகம்.தினமும் டிவி மற்றும் இன்டர்நெட்டில் செலவழிக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.படிக்கும் நேரம் தானாக அதிகமாகும்.”இப்போதெல்லாம் மக்கள் சமூக வலைதளங்களில் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் மேல் படிக்கிறார்கள்” என்கிறார் எழுத்தாளர்.ஜெயமோகன். இதில் பாதி நேரத்தை புத்தகங்கள் படிக்க ஒதுக்கினாலே போதுமானது.
கதை சொல்ல கத்துக் கொள்ளுங்கள்
இதுதான் நமக்கு கை வந்த கலையாச்சேன்னு கிளம்பிடாதீங்க. ஒரு புத்தகத்தை படித்து அந்த புத்தக கருத்துகளையோ அல்லது கதையையோ மற்றவரிடம் பேசும்போது மேற்கோள் காட்டி பேசி பழகுங்கள்.வீட்டில் சிறுவர் சிறுமியர் இருந்தால் இரவு நேரங்களில், அவர்கள் தூங்கப் போகும்முன் ஏதாவது ஒரு சிறுவர் புத்தகத்தை படித்து காட்ட பழகுங்கள். இதனால் சிறு வயதிலேயே வாசிப்பின் மீது அந்தக் குழந்தைகளுக்கும் ஈர்ப்பு வரும்,நமக்கும் படித்தது போல் இருக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!
புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்
பழைய புத்தகக் கடைகளை நாடுங்கள்!
புத்தகங்களின் விலையை பார்த்தவுடனே மயக்கம் போட்டு விழுநதுவிட வேண்டாம்.புது புத்தகங்கள் தான் படிக்க வேண்டும் என்பது இல்லை.நமக்காகவே உள்ளன பழைய புத்தக நிலையங்கள்.”பல சமயங்கள் பழைய புத்தக கடைகளில் தான் மாணிக்கங்கள் கிடக்கும்”என எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி கூறுவதுண்டு. சோ,மாணிக்கங்களைப் பொறுக்க எடுக்க பழகிக்கொள்ளுங்கள்.அருகிலுள்ள நூலகங்களை பயன்படுத்துவது இன்னும் நலம்! திருப்பி கடுக்க வேண்டிய அவசியத்தால் நிச்சயம் படித்து விடுவீர்கள்.  
ஈஸி! ஈஸி!
என்னதான் தமிழ் நம் தாய் மொழியாக  இருந்தாலும், புதிதாகப் படிக்க ஆரம்பிக்கும் பொது கொஞ்சம் எளிமையான புத்தகங்களை படிப்பதே நல்ல வாசகருக்கு அழகு. இல்லையெனில் தற்போதுள்ள சூழலில் பயன்படுத்தும் சிக்கலான வார்த்தைகளைப் பார்த்து தெறித்து விடுவீர்கள். ஒவ்வொரு வருட சென்னை புத்தககக் கண்காட்சியிலும் மாறாத ஒரே விஷயம், தமிழின் பெஸ்ட் செல்லர் நம்ம சுஜாதா சார் தான். படிக்க எளிமையாகவும்,சுவாரஸியமாகவும்  இருப்பதால் இவரது புதினங்கள் நிச்சயம் ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கும்.
புத்தகம், வாசிப்பு, 10 வழிகள்
கேங் லீடர் ஆகுங்கள்!
நீங்கள் படிக்கத் தொடங்கியுள்ள புத்தகம் பற்றி உங்கள் முகநூல் பக்கம் அல்லது வாட்ஸ்அப் நிலைத் தகவலில் எழுதுங்கள். அப்படியே படிக்கும் போது அந்த புத்தகத்தில் இருந்து சில வாக்கியங்கள் அல்லது கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுங்கள்.அதைப்பற்றி யாரேனும் உங்களிடம் நிச்சயம் கேட்பார்கள். அவர்களுக்கு நீங்கள் புத்தகங்கள் சிபாரிசு செய்யலாம்! அப்படியே படிக்கும் புத்தகம் பற்றி விவாதிக்கவும் ஆள் கிடைத்தாற் போலும் இருக்கும்.நீங்கள் கேங்லீடர் ஆவதற்கும் வாய்புகள் இருக்கு பாஸ்!
லட்சியம் முக்கியம்!
புதுவருடம் பிறக்கும்போதெல்லாம் “குடியை விடணும்”,”ஜிம்முக்கு போகணும்”  என்று உறுதிமொழிகள் எடுப்பதுபோல,  ‘இந்த வருஷம் கண்டிப்பா இத்தனை புத்தகங்கள் படிக்கணும்’ என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த உறுதிமொழியை  பாதியில் விட்டுவிடாமல் நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இதே உறுதிமொழியை மாதம் இத்தனை புத்தகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதே போல் யார் எழுதிய புத்தகம், என்னென்ன புத்தகம் என சேர்த்து சபதம் எடுத்தால் கொஞ்சம் வெற்றிபெற வாய்ப்பு அதிகம் ஆகும்.

No comments:

Post a Comment