Saturday, July 18, 2015

சந்தோஷப்படு! சந்தோஷப்படுத்துவாய் - டாக்டர். ஆர். கார்த்திகேயன் - தி இந்து

நம் எண்ணம்தான் பேச்சைத் தீர்மானிக்கிறது. பேச்சும் செயலும்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. இது உலகம் ஒப்புக்கொள்ளும் உண்மை.
வாழ்க்கையை மாற்றுவதற்கு பேச்சும் செயலும் மாற வேண்டும் என்றால் முதலில் எண்ணம் மாற வேண்டும். எப்படி மாற்றுவது என்று சொல்லித்தருவதுதான் அஃபர்மேஷன் முறை.
தமிழர்கள் மத்தியில் லூயிஸ் ஹேயையும் அஃபர்மேஷனையும் கொண்டுசேர்த்த திருப்தி, வந்து குவிந்த மின்னஞ்சல்களைக் கண்டதும் ஏற்பட்டது. தீராத வலி, பிடிவாதம் பிடிக்கும் மகன், மண முறிவு, கடன் தொல்லை, ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி, வேலை உயர்வு என எல்லாப் பிரச்சினைகளுக்கும் அஃபர்மேஷன் கேட்டு எழுதியிருந்தனர்.
நம் மனசு மாறினால் எல்லாம் மாறும் என்று நம்புகிறவர்கள் இத்தனை பேரா?
என்ன எழுத வேண்டும்? எத்தனை முறை எழுத வேண்டும்? மற்றவர்களுக்காக நான் எழுத முடியுமா? எல்லாருக்கும் வேலை செய்யுமா? இதனுடன் மற்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாமா? எல்லா விஷயங்களுக்கும் இது உதவுமா? குடும்பத்தில் அனைவரும் எழுத முடியுமா? எந்தப் பிரச்சினைக்கு என்ன எழுத வேண்டும் என்று எப்படிக் கற்றுக்கொள்வது? என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மன நிலைகள்
அஃபர்மேஷன் என்பது நேர்மறை வாக்கியம். உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொள்ளும் உரையாடல் இது. ஆழ்மனதில் தர்க்கச் சிக்கல்கள் இல்லாமல் ஒரு தியானம் போலத் தொடர்ந்து ஒரு நேர்மறை எண்ணம் ஓதப்பட அது வலுப்பெறுகிறது. இது நாள் வரை பீடித்திருந்த எதிர்மறை எண்ணத்தின் தாக்கத்தைத் தகர்க்கிறது. வேரூன்றியிருக்கும் எதிர்மறை எண்ணத்தைப் பலவீனப்படுத்துகிறது. இவை அனைத்தும் சூட்சுமமாக அளவிட முடியாத வடிவில் நிகழ்கின்றன. அதனால்தான் இறுதியில் ஏற்படும் மாற்றம் மாயாஜாலம் போலத் தெரிகிறது!
இது தியானம், ஜபம், ஆழ்நிலை மனோவசியம் போலத்தான்! ருத்திராட்ச மாலை உருட்டும்போதும்,  ராம ஜெயம் எழுதும்போதும், கூட்டுப் பிரார்த்தனை செய்யும்போதும், மவுன விரதம், உண்ணா விரதம் இருக்கும்போதும், மனம் உருகிப் பிரார்த்திக்கும்போதும், தன்னிலை மறந்து இசையில், நடனத்தில், பக்தியில் கரையும் போதும், தன்னலம் கருதாச் சேவையில் உள்ள போதும் ஏற்படும் மனநிலைகள் அஃபர்மேஷன் எழுதும் போதும் ஏற்படும் மன நிலைக்கு ஒப்பானவை!
சுய அன்பு
லூயிஸ் ஹே போன்றவர்கள் எந்தப் பிரச்சினைக்கு, எந்த நோய்க்கு எதெல்லாம் ஆதாரச் சிந்தனைகள் என்பதை ஆராய்ந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அஃபர்மேஷன்கள் அமைத்தார்கள். மொழி பேதமில்லாமல் இவை வேலை செய்தன. தவிர, இந்த வழிமுறையைப் பல பெயர்களில் பல யுத்திகளாகப் பிரபலப்படுத்தினார்கள் பலர். கவர்ச்சி விதி, மனக்காட்சி அமைத்தல், ஆழ் நிலை ஆலோசனை என்று பல பெயர்களில் பயன்படுத்தப்படுவது அஃபர்மேஷன் முறை தான்.
உங்கள் எண்ண ஓட்டத்தை அறிந்து, உறைந்து கிடக்கும் எதிர்மறை எண்ணங்களைக் கண்டுபிடித்து அதற்கேற்ப நேர்மறை வாக்கியங்கள் அமைத்துக் கொடுப்பது அவசியம். மாற்றுக் கரத்தால் எழுதும்போது அதுவும் ஒரு தியான அனுபவமாகிறது. தவிர, உங்களை உள்நோக்கிப் பார்க்க வைக்கிறது. இப்படித்தான் வேலை செய்கிறது அஃபர்மேஷன்.
எல்லோருக்கும் பயன்படும் வாக்கியம் ஒன்றைக் கொடுங்கள் என்று என்னைக் கேட்டால் நான் பரிந்துரைப்பது இதைத்தான்:
“நான் என் மீது அன்பு செலுத்தி என்னை ஏற்றுக்கொள்கிறேன்!” (I love and accept myself ). என் பயிலரங்குகளில் இதை basic affirmation என்று குறிப்பிடக் காரணம் இது எல்லோருக்கும் தேவை. நீங்கள் முதன்முதலில் ஒரு அஃபர்மேஷன் எழுத வேண்டும் என்றால் இதிலிருந்து ஆரம்பியுங்கள்.
தன்னிறைவு, தன்னம்பிக்கை, உறவுகள் சீராகுதல், தலைவலியிலிருந்து நிவாரணம் எனப் பல நன்மைகள் அளிக்க வல்லது இது.
அன்பும் ஏற்றுக்கொள்ளுதலும்
நாம் நம் மீதும் பிறர் மீதும் செலுத்தும் வன்முறைக்கு ஆதாரமான காரணம் அன்பு பற்றாக்குறைதான். பிறரைக் குற்றம் சொல்வோர் முதலில் தங்களையே கடிந்துகொள்கின்றனர். குறைபட்ட சுய மதிப்பு உள்ளவர்கள்தான் பிறரின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவந்தனர். உள்ளே அவமானப்படும்போது பிறரை அவமானப்படுத்துவார்கள்.
பிறரை சந்தோஷமாக வைத்திருக்கத் தெரியாதவர் தன்னை முதலில் சந்தோஷமாக வைத்திருக்கத் தெரிந்திருக்க மாட்டார். பிறரின் தன்னம்பிக்கையை நசுக்குபவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகத் தான் இருப்பர். ஆதலால், இந்த வாக்கியம் உங்களை நீங்கள் பரிவுடன் அன்புடன் நடத்த வழி செய்யும்.
ஏற்றுக்கொள்ளுதல்தான் உறவுகளின் சாரம். சொல்லப்போனால் வாழ்க்கையின் சாரம். நம் எதிர்பார்ப்புகளும் நிதர்சனங்களும் வேறுபடும்போதுதான் மனம் ஏமாற்றம் அடைகிறது. பின் எதிர்மறையான எல்லாக் குப்பைகளையும் உள்ளே கொட்ட ஆரம்பிக்கிறது. தன்னைச் சார்ந்த மனிதர்களையும் சூழலையும்கூடச் சீர் கெட வைக்கிறது. தன்னை விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனிதர் அடுத்த கட்ட உள்மனப் பரிமாணத்துக்குத் தயாராகிறார்.
அன்பும் ஏற்றுக்கொள்ளுதலும் கொண்ட வாழ்க்கையில் தோல்வியில்லை. ஏமாற்றமில்லை. இதைத் தர்க்கரீதியாகப் பேசிப் புரிய வைப்பதை விட இந்த ஆழ் நிலை சுய வாக்கியங்கள் அமைதியாக இந்த அற்புதத்தை நிகழ்த்துகின்றன.
90 சதவீதப் பிரச்சினைகள் நாமே ஏற்படுத்திக்கொண்டவை. வெளிக் காரணங்களால் ஏற்பட்ட மிச்சம் 10 சதவீதப் பிரச்சினைகளிலும் நம் முடிவுகள் சார்ந்துதான் அமைதியும் வெற்றியும் கிடைக்கின்றன.
குரங்கின் பிடி
ஆப்பிரிக்காவில் குரங்குகளைப் பிடிக்க ஒரு வழிமுறையைக் கையாளுவார்கள். அகன்ற அடித்தளமும் குறுகிய திறப்பும் கொண்ட கண்ணாடிக் குடுவையில் பாதிக்கு மேல் வேர்க்கடலையைக் கொட்டி வைப்பார்களாம். கடலை தின்னும் ஆசையில் கையை உள்ளே குறுக்கிவிட்டுக் கடலையை அள்ளியவுடன் முஷ்டி பெருத்துக் கையை வெளியே எடுக்க முடியாமல் போகும்.
கையில் உள்ள கடலையைக் கொட்டி விட்டால் கையை எடுத்துவிடலாம். ஆனால் கடலை ஆசை தடுக்கும். கடலையோடு எவ்வளவு முயன்றாலும் வலிதான் மிஞ்சும். கடலையும் கிடைக்காது. கையும் வெளியே வராது. இப்படிச் சிக்கித் தவிக்கையில் வேட்டைக்காரர்கள் வந்து குரங்குகளைப் பிடித்துச் செல்வார்களாம்!
நம் வாழ்க்கையிலும் இப்படிக் கையை வைத்துவிட்டு, எடுக்க மனம் இல்லாமல் வலியோடும் நிராசையோடும் எத்தனை போராட்டங்களை இறுதி வரை நடத்துகிறோம்?

மனசு போல வாழ்க்கை - கடந்த காலத்தை வெளியேற்றுங்கள் - டாக்டர். ஆர். கார்த்திகேயன் தி இந்து

வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட, வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடு கிறோம். கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்... இப்படி நிறைய ‘வேண்டாம்’கள் உண்டு. நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்வோம்: “எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது!” வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்!
வேண்டாத வெளிநாடு
என் உறவினர் ஒருவர் தன் ஒரே பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் போது ஒரே நிபந்தனை தான் வைத்தார்: “பையன் வெளிநாடு போகக் கூடாது. உள்ளூரிலேயே வேலை இருக்கணும்.” காரணம், கடைசிக் காலத்தில் தன் பெண் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம். நல்ல பணக்காரரான அவர் அமெரிக்க மாப்பிளைகள் பலரை நிராகரித்தார். கடைசியில் ஒரு உள்ளூர் பையனாகப் பார்த்து மணம் முடித்தார்.
சில ஆண்டுகளிலேயே எதேச்சையாக ஒரு பெரிய வேலை அமெரிக்காவில் கிடைக்க, அவரது மாப்பிள்ளை மனைவியுடன் பிடிவாதமாய் அமெரிக்கா போய்விட்டார். 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரும்பவில்லை. “எது நடக்கக் கூடாதுன்னு காலம் பூரா பிரார்த்தனை பண்ணினேனோ அதையே இறைவன் எனக்கு கொடுத்துட்டான்!” என்பார் விரக்தியாக.
அருகிலேயே மகள் இருக்க வேண்டும் என நினைத்து வேண்டியிருந்தால் பலித்திருக்கும். ஆனால், மகள் அமெரிக்கா போகக் கூடாது என்றே அவர் வேண்டியுள்ளார். அவரின் உள்மனப் பிரார்த்தனையில் அமெரிக்கா மட்டும்தான் வலிமையாக இருந்திருக்கிறது.
நேற்றைய சங்கிலி
கடவுள் என்பது உள் மனம்தான். பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான். நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி. நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது. காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.
அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம். நோய் வேண்டாம் என்று எண்ணுவதைவிட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம். சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.
“கடங்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெறிப்பான். எப்படி செல்வம் வரும் என நம்புவது?” என்று கேட்கலாம். “எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை. எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது?” என்பதும் நியாயமான கேள்வி. “என்ன பேசினாலும் சண்டையில்தான் முடிகிறது. எப்படி சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது?” வாஸ்தவம்தான். எல்லாமே சரியான கேள்விகள்தான்
உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும். எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்.
பட்டியலிடுங்கள்
அம்பேத்கர், பாரதியார், மார்க்ஸ் என யாருடைய செயல்பாட்டை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். தன்னைச் சுற்றி நடக்கும் நிதர்சனங்களில் நீர்த்துவிடாமல் அதற்கு மாற்றான செயல்பாடுகளில் நம்பிக்கையோடு செயல்பட்டதால்தான் அவர்கள் சரித்திர நாயகர்கள் ஆனார்கள்.
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விட நீங்கள் வலிமையானவர் என்று நம்புகிறீர்களா? அப்படி என்றால் நம்பிக்கையோடு எதிர்வினையைத் துவங்குங்கள்.
எங்கிருந்து துவங்கலாம்? இப்படி ஆரம்பிக்கலாம்... உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதற்கு நீங்களும் ஒரு முக்கியமான காரணம் அல்லவா? உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் என உங்களால் நிகழ்ந்தவை என்னென்ன என்று யோசித்துப் பட்டியலிடுங்கள்.
ரிலீஸ் செய்யுங்கள்
குற்ற உணர்ச்சியில்லாமல், அவற்றுக்காக வருந்தாமல் அவற்றை வெளியேற்றுங்கள். “இந்த கடனுக்குக் காரணமான என் அனைத்து எண்ணங்களையும் உணர்வு களையும் நான் முழுமையாக வெளியேற்றுகிறேன்!”
இதைத் தொடர்ந்து ஜபிக்கும்போது, எழுதும்போது உங்கள் எண்ணம்-செயல்-பிரச்சினை என்ற முறையில் நீங்கள் வடித்துள்ள வடிவம் உடையத் தொடங்கும். இதற்கு “Release technique” என்று பெயர்.
“இந்த வலிக்குக் காரணமான என் அனைத்து எண்ணங்களையும் உணர்வு களையும் நான் முழுமையாக வெளியேற்றுகிறேன்!”
‘வேண்டாம்’ என்று நினைக்கிற விஷயங்கள் அனைத்துக்கும் இந்த ரிலீஸ் டெக்னிக்குடன் கூடிய அஃபர்மேஷனைப் பயன்படுத்தலாம்.
இதில் முக்கியமான விஷயம்: நடந்ததற்கு வருத்தம் அல்லது குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை. அது நடந்தபோது உங்களுக்குத் தெரிந்ததை, உங்களுக்கு முடிந்ததைச் செய்தீர்கள். இன்று இந்தப் புதிய கற்றல் மூலம் புதிய எண்ணத்தோடு புதிய செயல் புரிய நினைக்கிறீர்கள். அவ்வளவு தான்.
நாமே மாற்றலாம்
எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது. விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத்தான்.
நீங்கள் உருவாக்கிய நோயையும், நீங்கள் உருவாக்கிய உறவுப் பிரச்சினையையும், நீங்கள் உருவாக்கிய நிதிப் பிரச்சினையையும், நீங்கள் உருவாக்கிய மனக் கஷ்டங்களையும் நீங்களே சரி செய்துகொள்ளலாம் என்பதை விட வேறு நல்ல செய்தி இருக்கிறதா?