Wednesday, March 9, 2016

`@' குறியீடு பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது எப்படி?

மின்அஞ்சல் மற்றும் இணைய தளங்களிலும் `@' குறியீட்டின் பயன்பாடு முக்கியமானது. இந்த குறியீடு எங்கிருந்து, எப்படி பயன்பாட்டிற்கு வந்தது?

மின் அஞ்சல் மற்றும் இணையதளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் `@' குறியீடு, 1971க்குப் பிறகே இணையத்தில் புழக்கத்திற்கு வந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த குறி, ஒரு காலத்தில் தெளிவற்ற சின்னமாக இருந்தது. அப்போது கணக்கேட்டுப் பதிவாளர்களால் மட்டுமே இந்த @ குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த நிலையை மாற்றி, இந்த எலெக்ட்ரானிக் யுகத்தில் அதனை அனைவர் மத்தியிலும் புழக்கத்துக்கு கொண்டுவந்தவர் மின் அஞ்சலைக் கண்டுபிடித்தவர் என தெரிவிக்கப்படும் றே டொம்லின்சன் ஆவார்.
தனது அலுவலகத்தில் மின் அஞ்சலை பரிமாற்றிக் கொள்வதற்கு, அவர் 1971ல் இந்த @ குறியை பயன்படுத்தினார். மின் அஞ்சல் அனுப்புபவரின் பெயருக்கும் சென்றடையும் விலாசத்திற்கும் இடையே இது அப்போது இடப்பட்டுள்ளது.
முன்னர் கணிணி தொழில்நுட்பத்தில் @ குறியீட்டின் பயன்பாடு மிகவும் அரிதாகவே இருந்ததால், கணிணியில் பயன்படுத்தப்பட்ட புரொகிராம் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றில் @ இன் பயன்பாடு சிக்கலை தோற்றுவித்திருக்கவில்லை.
19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதிக்கு முன்னதாகவே தட்டச்சு இயந்திரங்களின் பயன்பாட்டில் @ இருந்துள்ளது என நூலாசிரியர் ஹெய்த் ஹவுஸ்டன் தெரிவிக்கிறார். பின்னர் அது முறையான கணிணி விசைப் பலகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் அவர்.
வர்த்தக கணக்குகளில், எத்தனை பொருள், என்ன விலையில் என்பதை சுருக்கமாக தெரிவிக்கும் ஒரு குறியீடாக, @ பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த ஹெய்த், முன்னர் கணிணி வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதால், அதில் @ குறியீடும் உள்வாங்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை அளித்துள்ளார்.
ஆனாலும் @ குறியின் வடிவமைப்பைக் கொண்டு, அனேக நாடுகள் வெவ்வேறு விடயங்களை குறிக்கும் குறியீடாக பயன்படுத்துகிறார்கள் என்ற விளக்கத்தை அளித்துள்ளார் இத்தாலி கல்வியாளரான ஜோர்ஜியோ ஸ்டாபிள்.
துருக்கியில், @ குறியீடு ரோஜாமலரைக் குறிக்கிறது.
நார்வேயில், @ குறியீடு பன்றியின் வாலைக் குறிக்கிறது.
கிரேக்கத்தில், @ குறியீடு தாராக் குஞ்சைக் குறிக்கிறது.
ஹங்கேரியில், @ புழுவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
பிரான்ஸ், இத்தாலி போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் அது அரோபா எனப்படும் எடையை அளவீடு செய்யும் அலகாகக் கருதப்படுகிறது.
இத்தாலியில் அது அம்போரா என அழைக்கப்படுவதுடன், பண்டைய காலம் முதல் பயன்படுத்தப்படும் நீண்ட கழுத்துடனான மட்பாட்ட ஜாடிகளை குறிப்பதாகவும் உள்ளது.
15 ஆம் நூற்றாண்டில் இது வர்த்தகப் பயன்பாட்டில் பாவிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளதாக இத்தாலி கல்வியாளரான ஜோர்ஜியோ ஸ்டாபிள் தெரிவித்துள்ளார்.