Friday, January 15, 2016

தமிழ்ப் புத்தாண்டு....

"தமிழ்ப் புத்தாண்டு" ங்கிற ஒன்னே கிடையாது!

பந்தல் வாசகர்களுக்கு இனிய (தமிழ்???) புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

இன்னிக்கி, தமிழின் அடிப்படைக்கே சென்று பாக்கப் போறோம் = எது புத்தாண்டு-ன்னு? போய்ப் பார்த்தா.....
"தமிழ்ப் புத்தாண்டு"-ங்கிற ஒன்னே கிடையாது போல இருக்கே!:) அடி ஆத்தீ....மேல வாசிங்க:)
--------------------------------

எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?
ன்னு பல விவாதங்கள்/ சண்டைகள் எழுந்து.....ஓரளவு ஓய்ந்தும் விட்டன! தமிழக அரசியலில் ஜெ.அரசாணைகளும் மாறி விட்டன!

இப்போது மீண்டும் ஜெ - கலைஞர் போர்:)
"சித்திரையில் முத்திரை" -ன்னு ஒரு கட்சி!
"சித்திரையில் நித்திரை" -ன்னு இன்னொரு கட்சி!
முத்திரையோ, நித்திரையோ....அளப்பறை மட்டும் இருக்கு:)

2007 இல் கலைஞரே..."பரவாயில்லை, தமிழனுக்கு இரண்டு புத்தாண்டுகள் இருந்துட்டுப் போகட்டுமே " ன்னு சொன்னவரு தான்!:)
கழகத் தொலைக்காட்சி - நிகழ்ச்சி வரும்படி - அதை நிறுத்திடுவாங்களா என்ன?:)

தமிழ்....பாவம்!
= இவங்க போதைக்கு, ஊறுகாயாகப் போய்விட்டது:(

இது ஏதோ கருணாநிதி ஆரம்பித்து வைத்தது -ன்னு சிலர் நினைத்துக் கொண்டு அதற்காகவே எதிர்க்கிறார்கள், விவரம் புரியாமல்:(

ஆனா, கருணாநிதிக்கும் முன்னமேயே...
* மென்மையே உருவான திரு.வி.க போன்ற அப்பழுக்கில்லாத் தமிழறிஞர்கள் துவக்கி வைத்தது;
* ஈழத்தில்.....அப்போது புலிகள் கோலோச்சிய யாழ்ப்பாணத்திலே, இது நடைமுறைக்கு வந்தது தான்!

ஒரு வேளை, அண்ணா முதலமைச்சராய் இருந்த போதே, மதறாஸ்->தமிழ்நாடு பெயர் மாற்றம் போல்,
இந்தப் புத்தாண்டு மாற்றமும் வந்திருந்தால், இன்னிக்கி இம்புட்டு பேச்சு இருந்திருக்காதோ? என்னமோ?:)

எது எப்படியோ.....இது karunanidhi formula அல்ல! இது tamizh aRignar formula!

1. இதெல்லாம் அரசாங்கச் சட்டம் போட்டு, மக்களைக் "கொண்டாட" வைக்க முடியாது! இது என்ன ஹர்ஷவர்த்தனர் காலமா?:)
2. மக்களிடம் - விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்!! - இதை நல்ல தலைவர்களால் / தொடர்ந்த முயற்சிகளால் மட்டுமே ஏற்படுத்த இயலும்.

பின்பு எதற்கு இந்தக் கட்டுரை? ன்னு கேக்குறீங்களா?
= அதே விழிப்புணர்வுக்குத் தான்!
அரசியலை ஒதுக்கிட்டு, "உண்மை" ஆவல்! பதிவின் நீளம் அதனால் தான்!

சற்று, உன்னிப்பா நோக்குங்க:
* தை என்பவர்கள் = தனித் தமிழ்க் கொள்கை உடையவர்கள் (அ) பகுத்தறிவு இயக்க வழி வந்தவர்கள்!
* சித்திரை என்பவர்கள் = பெரும்பாலும் ஹிந்து மதப் பற்று கொண்டவர்கள் (அ) வடமொழியோடு ’அனுசரித்து’ போகிறவர்கள் (அ) மடாதிபதிகள்

ஆக, இரண்டு கட்சிகள்!
எந்தக் கட்சி சரி? ன்னு புகுந்தால், புலி வாலைப் பிடித்த கதை தான்! முடிவே இல்லை!:)
தங்களுக்குச் சாதகம் இல்லாதவற்றை மறைத்தும்,
தங்களுக்குச் சாதகமானதை "ஆதாரம் போல்" காட்டியும்...
அவர் சொன்னார்/ இவர் சொன்னார் என்று வெட்டிப் பேச்சுக்கள்!

ஆனால்...
தமிழ் இலக்கியம் = அது என்ன சொல்கிறது?
"அடிப்படைக்கே" சென்று பார்த்தால்??? = அதுவே இந்தக் கட்டுரை!


*நமக்கு "விருப்பமான உண்மைகள்" என்பது வேறு!
*"உண்மையான உண்மைகள்" என்பது வேறு!
சில நேரம் இரண்டும் ஒன்றுபடலாம்! சில நேரம் மாறுபடலாம்!

ஆனா.....நம் "விருப்பத்துக்கு" மாறாகவே அமைந்தாலும்....
* தமிழ் = தொன்மம்!
* தொன்மத்தில், நம் சுய விருப்பு-வெறுப்புகளை ஏற்றி விடக் கூடாது!
(முன்பு - "யார் தமிழ்க் கடவுள்?" என்று வந்த பதிவும், இந்த எண்ணத்தில் தான்!)

* இன்று இன்றாக இருக்கட்டும்!
* தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!

அதுக்காக...விருப்பு வெறுப்பே கூடாது-ன்னு சொல்லலை! விருப்பு-வெறுப்பு உள்ளவன் தான் மனிதன்!
அதை நம் சொந்த வாழ்வில் வச்சிக்கணும்! அனைவருக்கும் பொதுவான இலக்கியத்தில் அல்ல!
(*** இலக்கியத்தில் மட்டுமே கொள்கை, என் சொந்த வாழ்வில் bye bye-ங்கிற "koLgai kundrus" தனி:))

தமிழைத் தமிழாக அணுகும் முயற்சி
எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?


முன் குறிப்பு:

1) தமிழறிஞர்கள் பலர் 1935 இல், பச்சையப்பன் கல்லூரியில் (அதன் பின்பு திருச்சியில்) ஒருங்கே கூடினார்கள்...
வள்ளுவர் காலம் பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்!

= யார் யார் இந்த முயற்சியில்?
மறைமலை அடிகள், திரு.வி. க,
ந.மு. வேங்கடசாமி நாட்டார், சோம. சுந்தர பாரதியார்,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர்!

ஆனா, அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? = இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை!
இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அது என்ன சொல்கிறது?

* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே தமிழ் ஆண்டு என இனிக் கொள்ள வேண்டும்!
* திருவள்ளுவர் காலம் கி.மு. 31 = எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!

நல்லாக் கவனிங்க:
வள்ளுவர் ஆண்டு முறை தான் பேச்சே ஒழிய, சித்திரையா? தையா?ன்னு பேசினாங்களா? = இல்லை (அ) குறிப்பு கிடைப்பதில்லை!
தரவு: (Scanned Copy) பச்சையப்பன் கல்லூரி அறிக்கை: 1935 செந்தமிழ்ச் செல்வி இதழ் =http://muelangovan.blogspot.com/2012/04/blog-post_14.html

------------

ஆனா, பின்னாளில்... மறைமலை அடிகளின் மாணவரான நாவலர் சோமசுந்தர பாரதியார்...
வள்ளுவர் ஆண்டை உறுதி செய்ததோடு, தை-02 ஆம் நாளை = வள்ளுவர் திருநாள் - எனவும் வகுத்து அளித்தார்!

அதற்குத் தமிழறிஞர்களும் இசைவு தந்தனர்; அதுவே 1971இல் அரசு விழாவாகவும் ஆனது!
தரவு: (Scanned Copies) : நாவலர் சோமசுந்தர பாரதியார் : தை-02 குறிப்பு =http://www.vallamai.com/literature/articles/19155/

முது பெரும் தமிழ் அறிஞர்கள் = ஏன் இப்படிச் செஞ்சாங்க?
அதைத் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்!
---------------


2) பிரபவ-விபவ என்னும் 60 ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளே அல்ல! அத்தனையும்சம்ஸ்கிருதப் பெயர்கள்!
வராஹமிஹிரர் பயன்படுத்திய சுழற்சி முறை =60 சம்வத்ஸரங்கள்

அவற்றுக்கு ஆபாசக் கதைகளை, ’புராணம்’ என்ற பெயரில் கோர்த்துச் சொல்வாரும் உண்டு!
அபிதான சிந்தாமணி (எ) பின்னாள் ’கலைக் களஞ்சியமும்’ உறுதி செய்கிறது!

ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி ன்னுல்லாம் பேரு வரும்!
= டேய், இதெல்லாம் தமிழா?:))

(ஆமாம்....தமிழ் தான்!
தோஷம், கோஷம் = "பரிசுத்தமான" தமிழே-ன்னு பேசும் இணையக் கொத்தனார்-நாத்தனார்கள் நம்மிடையே உண்டு! இங்கு பேச்சில்லை!:)

Please Note: ஜ-ஷ புகுந்து பரவலாகி விட்டாலும், அவை உயிர்-மெய் எழுத்துக்கள் அல்ல! They are just "add-ons"

=>அவற்றைத் "தமிழ் எழுத்துக்கள்" ன்னு யாரும் சொல்வதில்லை! = அவை "கிரந்த எழுத்துக்கள்"
=> அதே போல்: ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி = தமிழ் ஆண்டுகள் அல்ல! = அவை ஹிந்து ஆண்டுகள்!

Hindu Calendar! or Salivahana Sagam or Vikarama Sagam...whatever!
http://en.wikipedia.org/wiki/Hindu_calendar
= But Dont call them "Tamil Years" | Tamizh is not only Hindu; It is Much More!

மதம் மதமாக இருக்கட்டும்!
அதை மொழி அமைப்பில் புகுத்தி, திணிக்க வேண்டாமே!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!


3) சரிப்பா, பிரபவ - விபவ-ன்னு 60 ஆண்டுப் பெயர்கள் வேணாம்; ஆனா "சித்திரை" தானே புத்தாண்டுப் பிறப்பு?
அதை எதுக்கு தை மாசத்தில் மாத்தி வைக்கணும்? -ன்னு சிலர் "வேறு ரூபத்தில்" கேட்கத் தலைப்பட்டு இருக்கிறார்கள்!:)

இவர்களின் வாதம் = சோதிட அடிப்படையில் அமைந்துள்ளது;
மேஷம் (Aries) தான் முதல் ராசி!
சூரியன், மேஷ ராசிக் கட்டத்தில் புகுவது = சித்திரை!
எனவே அது தான் புத்தாண்டு-ன்னு இவர்கள் வாதம்!

Okay, Agreed! சித்திரை = மேஷம் புகும் மாதம் தான்!
ஆனால் மேஷம் புகுந்தாத் தான் = "ஆண்டின் துவக்கம்" என்பதற்கு என்ன ஆதாரம்? ன்னு கேட்டா....பதில் இல்லை!:)

ஒரு இனத்தின்/ பண்பாட்டின் ஆண்டுப் பிறப்பு
= ஜோதிட அடிப்படையில் தான் இருக்கணுமா?

பொதுவா, சித்திரை = வசந்த காலம் (இளவேனில்)!
"வசந்தத்தில்" துவங்குதல் தானே ’மரபு’?-ன்னு இவங்களாச் சொல்ல ஆரம்பிச்சிருவாங்க!:) ஆனா தரவு? ஆதாரம்??:))


சரி, சம்ஸ்கிருதம்/ ஜோஸ்யம் = இதெல்லாம் வேணாம்!
நாம, அடிப்படையிலேயே கையை வைப்போம், வாங்க! :))
"புத்தாண்டு நாள்" ங்கிற ஒன்னு..
தமிழ் இலக்கியத்தில் இருக்குதா?-ன்னு பார்ப்போமா?

1. தொல்காப்பியம்:

தொல்காப்பியம் - அதானே முதல் நூல் - அங்கிருந்தே துவங்குவோம்!
** புத்தாண்டு = தொல்காப்பியத்தில் இல்லை!
ஆனால், எதை முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது?

மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
....
காரும் மாலையும் = முல்லை 
குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!

கார் காலம் (மழைக் காலம்) தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!

பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே"
= முதன்மையாக/ மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

இது திணை வரிசை மட்டுமே!
ஆனா, இதான் புத்தாண்டு நாள்-ன்னு வெளிப்படையாக் குறிக்கலை!

ஆனா, இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்... கார்காலமே ஆண்டின் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் காட்டிச் செல்வார்!

(நச்சினார்க்கினியர் உரை:
ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை (ஆவணி)முதலாக,
தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக..
வந்து முடியுந் துணை ஓர் ஆண்டாம்)

இந்த உரையே எனக்குச் சாதகமா எடுத்துக்கலாம்; ஆனா எடுத்துக்க மாட்டேன்;
ஏன்-ன்னா...
இது தொல்காப்பியரின் கூற்று அல்ல; உரையாசிரியரின் கூற்று மட்டுமே;

உரையாசிரியர்கள் காலம் 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே;
பல உரைகளில், அக்காலச் சமய/ சாதி அரசியலும் கலந்து இருக்கும்; நமக்கு மூலப் பாடலே முக்கியம்;
-----------------------


2. சங்க காலம் - எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுக்கு வருவோம்!

பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன!
அதையே பல தமிழ் அன்பர்களும், "தைஇத் திங்கள், தைஇத் திங்கள்" -ன்னு இணையத்தில் ரொம்ப எழுதுறாங்க;

ஆனா அதான் "ஆண்டின் துவக்கம்" -ன்னு சங்கத் தமிழ் சொல்லுதா?
= இல்லை!
= தமிழ் என்பதற்காக, நான் Raw Data-வை மறைக்க/ மாற்ற மாட்டேன்:)

நற்றிணை =தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள்

குறுந்தொகை = தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

புறநானூறு = தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்

ஐங்குறுநூறு = நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் போல

கலித்தொகை = தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?

ஒரு மாசத்தோட பேரு, இம்புட்டு அதிகமா இலக்கியங்களில் வருவது
= தை மாதம் மட்டுமே!
ஆனா, தை = "ஆண்டின் துவக்கம்" -ன்னு எங்கும் நேரடியாச் சொல்லலை!

தையொரு திங்களும் தரை விளக்கி
ஐயநுண் மணற் கொண்டு தெருவணிந்து
-ன்னு, அதே சங்கத் தமிழ் மரபில், பின்னாளில் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்!

தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாசம்! அவ்வளவே!
-----------------------

3. அடுத்து... ஜெ-வுக்கு அறிக்கை எழுதிக் குடுக்கும் "அறிஞர்" முதற்கொண்டு வேறு சிலரும் காட்டுவது:
"ஆடு தலை" = நக்கீரர் எழுதியநெடுநல்வாடை!

ஆடு தலை = ஏதோ ஆட்டுக் கறி/ தட்டி உறிஞ்சும் மூளைப் பகுதி-ன்னு நினைச்சிக்காதீக:))
தலை = தலையாய/ முதன்மையான

திண் நிலை மருப்பின் "ஆடு தலை" யாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
.....
ஆடு தலை = மேஷம் தான் முதல்;
நக்கீரரே சொல்லிப்புட்டாரு! எல்லாரும் ஜோராக் கைத்தட்டுங்க!:))
Wait Wait Wait.....

மேஷம் தான் முதல்-ன்னு சொல்றாரு! ஆனா எதுக்கு "முதல்"?
* ஆண்டுக்கு முதல்??? = இல்லை!
* ராசி மண்டலத்துக்கு முதல்! = "வீங்கு செலல் மண்டிலத்து"

அடங்கொப்புரானே! இது எனக்கே தெரியுமே! எல்லாப் பத்திரிகை/ ராசி பலன்-லயும் ஆடு தானே மொதல்ல போடுவாய்ங்க!!:)
இதைப் போயி, நக்கீரர் சொன்னதா ஏத்தி வுட்டு...

அடேய், பாட்டு குடுத்தாலே ஆதாரம் ஆயிடாதுடா! மொதல்ல, பாட்டின் பொருள் பொருந்துதா? -ன்னு பாத்துட்டு, பொய் சொல்லுங்க:)
பாவம் நக்கீரர்! திருவிளையாடற் புருடாணம் போல், ஒரு மானமிகு சங்கப் புலவன் மேல் எத்தினி தான் ஏத்தி வுடறது? = விவ'ஸ்'தையே இல்லீயா? :)

சித்திரை = இதர "ஆதார"ங்களாக ஜோடிக்கப்படுபவை:

1) சிலப்பதிகாரம் - இந்திர விழா
இது இளவேனில் காலத்தில் நடந்தது; உண்மை தான்; சிலப்பதிகாரமே சொல்லுது!

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,

ஆனா, சித்திரையில், காமவேள் விழா/ காதல் விழா -ன்னு தான் சொல்லுதே தவிர....
"புத்தாண்டு"-ன்னு சொல்லலையே! ஆண்டின் முதல் மாசம்-ன்னும் சொல்லலையே!

ஏதோ, சித்திரை-ன்னு வரும் ரெண்டு வரியைச் சொல்லிட்டா, அப்பாவிப் பொதுமக்கள் பயந்துருவாங்களா?
சிலம்பின் வரிகள் ஒன்னும் "சகஸ்ரநாம" வரிகள் அல்ல:)

2) பிரபவ-விபவ = 60 ஆண்டுகளின் sanskrit names, சோழர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருக்குப்பா!

இப்பல்லாம் கல்வெட்டை வச்சி நடக்கும் காமெடிக்குப் பஞ்சமே இல்ல:)
23ஆம் புலிகேசி தனக்குத் தானே வெட்டிய கல்வெட்டு ஞாபகம் வருதா? - வரலாறு முக்கியம் அமைச்சரே!:)

நல்ல தொல்லியல் அறிஞர்கள், ஆய்ந்து சொல்வதே கல்வெட்டு முடிவுகள்! அதுவும் விவாதத்துக்கு உட்பட்டே!
சோழர் கல்வெட்டில் இருந்தாலும், அவை = மிகவும் "பிற்காலம்" தான்! சங்க காலம் அல்ல!

சோழர் கல்வெட்டு பலவும், கிரந்தத்தில் தான் வெட்டப்பட்டு இருக்கு!
ஒடனே, "பாத்தீங்களா? பாத்தீங்களா? அப்பவே எல்லாப் பொது மக்களும் Grantha Alphabet இல் தான் எழுதினாங்க;
அம்மா வை = சம்மா" -ன்னு எழுதினாங்களா?:) | அ = சd in grantham notation; that shape

பிற்காலச் சோழர் காலத்தில், கலப்புகள் பல நிகழ்ந்து விட்டன!
சோழ அரசாங்கத்தில் வேலை பார்த்த "உயர்சாதிப் பண்டிதாள்", வருஷ - சம்வத்ஸரங்களின் பேரை,
அவா Style-இல், "ஸ்வஸ்திஸ்ரீ" -ன்னு பொறிக்கச் செய்தார்கள்! அவ்வளவே!

3) புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று இருக்கிறது
பேருலயே தெரியலையா? = பு"ஷ்"ப விதி! :) இதெல்லாம் தரவாகாது!

இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடி தான்!
பலருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு!

இவர் சமயம் சார்ந்து சொல்வதே, ஒட்டுமொத்த தமிழினத்தின் "ஆண்டு" ஆகி விடாது!
ஆழ்வார்கள் = கலியுகத்துக்கும் முன்னால்- ன்னு கூடத் தான் சில வைணவ மடங்கள் புராணம் எழுதி வச்சிருக்காய்ங்க!:)

அப்பிடிப் பாத்தா ஆண்டாளுக்கு அப்பறம் தான் வள்ளுவரே வருவாரு:)
நான் ஆண்டாளின் ரசிகன் என்பதற்காக... அது உண்மையாகி விடுமா என்ன?:))
வள்ளுவரே = தலைமகன்; பின்பே = ஆண்டாள்!


முடிப்புரை - Final Inference:

1. தமிழ் இலக்கியங்களில் = இது தான் "புத்தாண்டு"-ன்னு நேரடியாக இல்லை!

* சித்திரை = "மதம்" சார்ந்த படியால்... பய+பக்தியோடு, பரப்பப்பட்டு ஊன்றுகிறது!
* ஆனா, மழை துவங்கும் "கார் காலம்" (அ) "பனி முடங்கல்" எனும் தை = முதன்மைக் காலமாகக் கொள்ளும் திணை மரபு, தொல் தமிழில் உள்ளது!

2. பண்டைத் தமிழர்கள் - ஆண்டுக்கென்று எந்தப் பெயரோ/ எண்ணோ வைக்கலை!
= கண்டிப்பாக பிரபவ-விபவ-ருத்ரோத்காரி ன்னு வைக்கல:)

ஒவ்வொரு ஆண்டுக்கும், தொடர்ச்சியா, எண்ணைக் குறிக்கும் வழக்கம் இருந்ததாத் தெரியலை!
ஒரு பெரிய தலைவரின் பிறப்பை ஒட்டி, எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்பு எழுந்ததே!

அதுக்காக, தமிழர்களுக்குக் கால அளவே தெரியாது-ன்னு முடிவு கட்டிறாதீங்கோ...

* Tamil Season Measurements/ பெரும்பொழுது
= கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில், முதுவேனில் = 2 months each*6 = 12 months!
* Tamil Daily Measurements/ சிறுபொழுது
= மாலை, யாமம், வைகறை, காலை, பகல், எற்பாடு = 4 hrs each*6 = 24 hours!

*ஆண்டுப் பெயர் தான் தமிழில் இல்லை!
(கிரேக்கம் முதலான வேறு பல பண்பாடுகளிலும் இப்படியே பெயரில்லை)

3. தமிழ் மரபில் & இலக்கியங்களில், மிகச் சிறப்பாக/ அதிகமாகப் பேசப்படும் மாதம் = தை!
"தைஇத் திங்கள்" பாடல்களைப் பார்த்தோம்; புத்தாண்டு -ன்னு அல்ல! சிறப்பான மாதமாய்!

4. ஒரு ஆண்டு, ஜோதிட அடிப்படையில் தான் துவங்கணும்/ மேஷம் புகும் போதே துவங்கணும் = இதுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை!
எனவே சித்திரையே = தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பதற்கும் கிஞ்சித்தும் தரவுகள் இல்லை!
-----------------------


5. சரி, பிரபவ-விபவ ன்னு சம்ஸ்கிருதப் பேரு மட்டும் வேணாம்பா;
ஆனா சித்திரையிலேயே இருந்துட்டுப் போகட்டுமே, என்பவர்களுக்கு...

சித்திரை-ன்னாலே....இந்த 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன!
*This is Hindu Calendar! = நந்தன, ரக்தாக்ஷி, ருத்ரோத்காரி
*இதே போல் Islamic Calendar கூட உண்டு! = ஜமாதில்-அவ்வல்!
*சமண சமய Calendar உம் உண்டு = சமண சம்வத்சரி!

ஆனா, தமிழ்-இஸ்லாமிய சமூகத்தினர் யாரும்,
* தமிழ் ஆண்டின் முதல் நாளா, ஹிஜ்ரி நாளை வைங்கோ, நாங்களும் தமிழர்கள் தானே? -ன்னு கேக்குறாங்களா?:) இல்லையே!
நாம மட்டும் ஏன், மொழியில் மதத்தைப் புகுத்தி, அடாவடி அடிக்கிறோம்?? :)

இது இன்று நேற்றல்ல! பல காலங்களாய்!
இல்லீன்னா, சமயம் சாராத சங்கப் பாடல்களுக்கு, கடவுள் வாழ்த்து-ன்னு பின்னாளில் எழுதிச் சொருகி வைப்போமா?:)
டேய் செல்லம்...முருகா, இதெல்லாம் நீ கண்டுக்கவே மாட்டீயாடா?:))

* மொழியில், சமய இலக்கியங்கள் வரட்டும்! ஆனா சமய இலக்கியமே = மொழி -ன்னு "வகுத்து" விடக் கூடாது!
* அதே போல் தான் புத்தாண்டும்! சமய ஆண்டே = மொழி ஆண்டு ன்னு "வகுத்து" விடக் கூடாது!

மதம், மதமாக இருக்கட்டும்! மொழி அமைப்பில் திணிக்க வேண்டாம்!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது -ன்னே கருதுகிறேன்!
-----------------------

6. தமிழறிஞர்கள், மறைமலை அடிகள் தலைமையில் கூடிச் சொன்னது
= Tamil Year Standardization மட்டுமே;
= புத்தாண்டு துவங்கும் மாதத்தை அல்ல!

இதில் தையா? சித்திரையா? என்பது பற்றிய முடிவுகள் இல்லை! ஆனால்,
* இந்த 60 ஆண்டு அசிங்கத்தில் இருந்து ஒழியவும்
* தொடர்ச்சியான எண் முறைக்கும் (Continuous Numbering Scheme) வித்திட்டது;

நிச்சயமா.....இது "புதிய" முறை தான்!
ஆனால் நம் தமிழினத் தலைமகன் வள்ளுவரை அடிப்படையாக வைத்து....ஒரு புதிய கணக்கிடும் முறை!
This is only a "notation" for Tamizh related stds; But Common Era (2012 CE) applies for all of us!


7. ஒரே கேள்வி தான் மிச்சம் இருக்கு
= வெட்டு 1, துண்டு 2 -ன்னு சொல்லு = தையா? சித்திரையா?:)

தை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை;
சித்திரை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை! ஆனா...

* சித்திரை = வேண்டாம்! (என்னைப் பொறுத்த வரை)
* சித்திரை-ன்னாலே, மதம் வந்து ஒட்டிக் கொள்ளும்! சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்!

* தை = தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும் சிறப்பு மாதம்!
* தை -ன்னாலே....மதம் கலவாமல்....தமிழ் மட்டும் தனித்துத் தெரியும்!

When it comes to "defining a notation" for Tamizh = Let Tamizh be the focal point & NOT religion!
For that......Thai wud be the best!
* Starting Year = based on Valluvar (Great Tamizh Person) &
* Starting Month = based on Thai (Great Tamizh Month) - gotcha?:)

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு = இதுவே தமிழுக்கு நலம்!!

உங்க ஆத்துல / வீட்டுல....பஞ்சாங்கம் வச்சி, வர்ஷ ஆரம்ப பூஜை பண்ணனும்-ன்னா, சித்திரையில் தாராளமாப் பண்ணிக்கோங்கோ!
ஆனா உங்க தனிப்பட்ட பூஜையை = "தமிழ்ப்" புத்தாண்டு ன்னு ஒட்டுமொத்தம் ஆக்காதீக! Please...
-----------------------

8. இல்லவே இல்லை! ஆதாரம் இருக்கோ/ இல்லீயோ....
சித்திரையே = தமிழ் "வருஷப்" பிறப்பு -ன்னு பிடிவாதம் பிடிச்சா?.....

Okay, நானே இறங்கி வரட்டுமா?
சித்திரை-க்கே ஒத்துக்கட்டுமா? .... but two small conditions!

a) "வருஷப்" பிறப்பு -ன்னு சொல்லாதீங்க; ஆண்டுப் பிறப்பு ன்னு சொல்லுங்கோ:))
b) ருத்ரோத்காரி -ன்னு அசிங்கம் புடிச்ச புராணக் கதை | 60 சம்ஸ்கிருதப் பெயர்களை, அறவே நீக்கி விடுங்கள்;

தினத்தாள், Calendar, Marriage Invitations.. எல்லாக் குறிப்பில் இருந்தும் நீக்குவீங்களா?

அதெல்லாம் நீக்க மாட்டேன்; அதான் "தமிழ்" வருஷப் பிறப்பு!
சம்ஸ்கிருதமே = தமிழ்! -ன்னு நீங்க சொன்னா..
= this is called போங்கு!
= போங்கடா டோய்:))))

9. வரும் Apr-13, 2012 = நந்தன வருஷம்.....

அனைவருக்கும் "ஹிந்துப்" புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(அ) இனிய நந்தன "வருஷ" வாழ்த்துக்கள்!
(அ) just....விழாக்கால வாழ்த்துக்கள் :))

உசாத் துணை: (References)

1. தமிழறிஞர், இராம. கி. ஐயா - தமிழர் திருநாள் = http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
2. சமூக ஆய்வாளர், திரு. எஸ். இராமச்சந்திரன் ஐயா - சித்திரையே புத்தாண்டு =http://www.sishri.org/puthandufull.html

3. சங்க இலக்கிய வரலாறு & தமிழர் மதம் = மொழிஞாயிறு, ஞா. தேவநேயப் பாவாணர்
4. பாட்டும் தொகையும் (பத்துப் பாட்டு - எட்டுத் தொகை உரை) = டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர்
5. தெய்வங்களும் சமூக மரபுகளும் = பேரா. தொ. பரமசிவன்

6. Jayashree Saranathan (writer at tamilhindu.com) - (She is a known person to me by way of blogs, but I was "SHOCKED" to see her line //only those who continue to stick to Hinduism can be considered as Tamils//)
http://jayasreesaranathan.blogspot.com/2011/08/big-thanks-to-ms-jayalalithaa-for.html