Monday, December 21, 2020

அவள் தேவதையா! யட்சியா!!

சண்டைகளின் போது

சமாதானம் செய் என

உட்காரும் போதுதான் 

அவள் 
தேவதையா
யட்சியா
பேயா
குழந்தையா
காளியா

எனும் உக்கிரமான கேரக்டர்  வெளிப்படும்!

அது அவளை சமாதானம் செய்ய போகிறவனுக்கு மட்டுமே காட்சியும் தரும்!

Sunday, December 6, 2020

ரூஹ் - லக்ஷ்மி சரவணகுமார்

 

’ஒவ்வொரு மனுஷருக்கும் ஒரு குணம் இருக்குடா. அதுதான் அவங்க. அவங்கள அப்படியேதான் நாம ஏத்துக்கனும். ஒரு மனுஷனுக்காக இன்னொரு மனுஷன் தன்ன மாத்திக்கக் கூடாது. ஒவ்வொரு மனுஷனுக்கும் வழி கடவுள் குடுத்தது. அவருக்குத் தெரியும் நாம செய்ற நல்லது கெட்டது என்னன்னு.’

ரூஹ் - லக்ஷ்மி சரவணகுமார்

அஹமத்ங்கற மாலுமி தொலைச்ச ஒரு அற்புதம் தன் வாழ்நாள்ல ஒரு அற்புதம் நிகழ்ந்து  நம்ம வாழ்க்கை மாறாதன்னு தவிச்சிட்டு இருக்குற ஜோதிக்கு கிடைக்கும் போது என்னவாச்சி இந்த ரூஹ் நாவாலோட one line.

ராபியா - ஜோதிலிங்கம் ரெண்டு பேருக்குமான  வயசு வித்யாசம் அதிகமா இருந்தாலும் , ரெண்டு பேரும் இன்னொருத்தங்களுக்கு  என்னவா இருந்தாங்க ,  என்னவா நெனச்சாங்க,  கடைசியா என்னவா  மாறுனுங்க தான் நாவலோட  காட்சிகள்.

ஜோதியாய்  நம்மை நினைக்க  வைக்கும் சில சந்தர்ப்பங்கள்  இந்த நாவல்ல இருக்கு, அதுவும் ஏதோ ஒரு விஷயத்துக்காக குற்றயுணர்ச்சி இருக்குறவங்களுக்கு கதையோடு ஒன்றிணைய  பல இடங்கள்  இருக்கு.. ராபியா எல்லோருக்கும் நன்மை நெனைக்குற நிபந்தனையற்ற அன்பை கொடுக்குற தேவதை.

சுருக்கமா சொல்லனம்ன்னா ராபியா மாறி ஒருத்தர் நம்ம வாழ்க்கையில இருந்தா அது அன்பு நெரஞ்சதா இருக்கும்.

 "அப்டி இருக்குற ராபியாவுக்கு கஷ்டம் கொடுக்குற மாறி ஜோதி பண்றான்.

லக்ஷ்மி சரவணகுமாரோட மொழியில சொன்னா

அள்ளிக்குடிக்க முடியுமென்பதற்காக மனிதன் கடலைக் குடித்துவிடத் துடிப்பது பேதமை. அவள் அன்பின் கடல்" 

வாழ்க்கையில யாரோட அன்பும் கிடைக்காம வெறுப்பும் , தாழ்வு மனப்பான்மையும் , வெறுமையில ஒருத்தன் தன் மேல அன்பா இருக்குறவங்க கிட்டவே தாக்கறதுக்கு காரணம் தன்னோட தாக்குதலை தடுக்க முடியா திராணியற்ற மனுசனா அவங்கள நெனைக்குறது தான்.

அற்புதங்கள் நடந்துட்டு தான் நாம அதை கவனிக்காம வேற எதையோ அற்புதம்னு நினைச்சிட்டு தேடிட்டு இருக்கோம். படிச்சி முடிக்கும் போது ஒரு பாவ மன்னிப்பு கிடைச்ச திருப்தி .லட்சுமி சரவணகுமாரோட உப்பு நாய்கள் மாறி பர பரன்னு ராவ்வான காட்சிகளா இல்லேனாலும் ,மனசுக்கு நெருக்கமான நாவல் ♥️

கதையிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல். அகமது, ராபியா, ரசூல், அன்வர், ஆங்கிரே, ஜோதி இப்படி எல்லோரும் ஏதோ ஒன்றைத் தேடி அலைகிறார்கள்.

அமைதி வேண்டுவோர் தனக்கான தேடலை மறக்கின்றனர். அகமதுவை போல. ஜோதியைப் போல. ஒரு வகையில் இருவரும் வேறல்லர் என்றே தோன்றுகிறது. உண்மை கண்டார் இறுதியில் உண்மையான இலக்கை சென்றடைகின்றனர்.

அன்பே அசல் தேடல். அன்பே அசல் இலக்கு.

அன்பை ஆராயும் எவரும் வாசிக்க வேண்டிய புதினம்

இப்படிக்கு இவன்

கடக்கும் 

நொடிகளிலும் நிமிடங்களிலும்

கிடைக்கும்

அனுபவங்களில் 

என்னை செதுக்கி

விடை தேடி ஓடுகிறேன்

கேள்விகளையும் சுமந்துகொண்டு!


எல்லைக்கோடுகளை 

உடைத்து விட்டு

எல்லையற்ற வானத்தில்

திரியும் பறவை இவன்!


இந்த உலகம் என்னிடம்

எதையோ நிரூபிக்க 

முயன்று கொண்டிருக்க

நான் 

அதனிடம் தோற்று போகிறேன்...!


இதுதான் என் 

கடைசி முயற்சி என்று,

ஒவ்வொரு முறை தோற்கும்போதும்,

மீண்டு எழுவதற்கு பழகியிருந்தேன்..!


இருள் விலகி ஒளி பிறக்கும் 

என நம்பிக்கையில்

இல்லையெனில்

இருளையே ஒளியாக்கி 

பயணங்களை தொடர்கிறேன்!


எல்லா வெளிச்சங்களும்

இருளின் பிரதிபலிப்பாக 

இருக்கும்போது இவன் மட்டும்

விதிவிலக்கா என்ன!


- சத்யா...

Friday, February 21, 2020

பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்- ஆர். அபிலாஷ்

 

aesthetic-friendship-guy-best-friend-Fav

ஒரு பாய் பெஸ்டிக்கு வேண்டிய முதல் தகுதி பொறுமை. நிதானமாக நீண்ட நேரம் செவிமடுக்கும் திறன் வேண்டும். என்னால் குறுக்கிடாமல் மதிப்பிடாமல் பெண்கள் பேசுவதை கேட்டிருக்க முடியும் என்பதாலே பதின்வயதில் இருந்தே நான் ஒரு நல்ல பெஸ்டியாக பெண்களுக்கு இருந்திருக்கிறேன். என்னுடைய தனிமை நாட்டம் காரணமாய் நான் தொடர்ந்து எல்லாரிடமும் உறவைப் பேண முயன்றதில்லை என்பதால் நான் இந்த பெண்கள் பட்டியலை வளர விட்டதில்லை. இருந்தாலும் பாய் பெஸ்டிகள் சார்பில் பேசும் தகுதி எனக்கு உண்டென்றே நம்புகிறேன்.
பாய் பெஸ்டிகள் குறித்த மனுஷ்ய புத்திரனின் கவிதை “பாய் பெஸ்டிகளின் கதை” எனக்கு மிகவும் பிடித்திருந்தது (அவர் என் நண்பரால் மட்டும் அல்ல நான் இதை சொல்வது) – கவிதை சற்று அதிகம் நீண்டு விட்டிருந்தது என்றாலும் கச்சிதமாக முடித்திருந்தார். அதாவது பாய் பெஸ்டியாக இருப்பதன் அவலங்களை நகைமுரணுடன் சொல்லி வந்து விட்டு
“யாரும் பிறக்கும் போதே
பாய் பெஸ்டியாக பிறப்பதில்லை
விதி எங்கோ தடம் மாற்றி விடுகிறது
பசித்த மனிதர்களின் கையில்
ஒரு மலரைக் கொடுத்து அனுப்பி
வைக்கிறது”
என முத்தாய்ப்பாக முடிக்கும் போது பாய் பெஸ்டியின் நிலையை உலகில் உள்ள மொத்த மனிதர்களின் இருத்தலியல் அவலமாக மாற்றி விடுகிறார். இது பாய் பெஸ்டியின் கைவிடப்படலாக அல்லாமல் பசித்தவர்களுக்கு கையில் மலரைக் கொடுத்து அனுப்பின் கடவுள் மீதான ஒரு சாடலாக முடிகிறது; இந்த பசி அன்பின் பசியாக, வாய்ப்புகளுக்கான பசியாக, சமத்துவத்துக்கான பசியாக, கௌரவத்துக்கான பசியாக எப்படி வேண்டுமெனிலும் இருக்கலாம். ஒரு நல்ல கவிதையின் பண்பு என்பது அது பேசுபொருளை குறிப்பிட்ட சந்தர்பத்தில் இருந்து ஒரு பெரிய விசயத்துக்கான குறியீடாக உயர்த்தும் என்பது. தமிழின் பல உன்னத கவிதைகளில் நாம் இந்த பண்பைப் பார்க்க முடியும். பாய் பெஸ்டிகளின் அத்தனை பரிமாணங்களையும் அவர் இதில் கொண்டு வந்து விட்டாரா என்றால் இல்லை, ஆனால் அதற்கு அவசியமில்லை என்பேன் – அது கவிதையின் பணி அல்ல, கட்டுரையின் பணி.
Boy-and-Girl-in-Friendship-happy-friends
இந்த கவிதை பெண்களில் சிலரை சங்கடப்படுத்துவதை நான் புரிந்து கொள்கிறேன் – இயல்பாகவே தம்முடன் நட்புறவில் இருக்கும் ஆண்களின் பொது இடத்தை இது அசைக்கிறது; சின்ன குற்றவுணர்வை பெண்களின் பால் தூண்டுகிறது. குற்றவுணர்வு மிகும் போது அவர்கள் இக்கவிதையை சாடுகிறார்கள்.
பெண்கள் எதிர்பாலினத்தவரின் அங்கீகாரத்தை நாடுவது இயற்கை, அதே வேளையில் பாலுணர்வற்ற பரிசுத்தமான ஆண் நட்பையும் விழைகிறார்கள் – பாய் பெஸ்டிகள் இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு வெளியில் வசிக்கிறார்கள். அப்படித் தான் பாய் பெஸ்டிகளே தோன்றுகிறார்கள். அவர்களால் வெறும் நண்பனாக மட்டுமே எப்போதும் இருக்க இயலாது; அப்போது ஒரு பெண்ணை ‘ஆணாக’ நடத்தும் சங்கடம் ஒரு ஆணுக்கு நேரும். “அலை பாயுதே” படத்தில் மாதவனின் குழுவில் இருக்கும் அந்த ஒல்லியான பெண்ணைப் பற்றி சொல்லும் போது “அவ பாதி ஆம்பளை மாதிரி” என மாதவன் குறிப்பிடுவாரே அப்படி சில ஆண்கள் “பாதி பொம்பளை மாதிரி” பெண்களிடத்து இருப்பதுண்டு. இது முழுமையான ஒரு பெஸ்டியின் இயல்பு அல்ல. அந்த வகையான பெஸ்டி உறவும் இங்கு உண்டு எனிலும் பெரும்பாலான பெண்களுக்கு தம் பாய் பெஸ்டிகள் ஆண்களாக இருந்து தம்மை சற்று ‘உயர்வு நவிற்சியுடன்’ நடத்துவதையும் விரும்புகிறார்கள் என்பது உண்மை தான்.
இறுதியாக ஒரு பாய் பெஸ்டியாக வாழ்வதன் சிக்கல்களை ஒரு ஆணின் பார்வையில் இருந்தும் பேச விரும்புகிறேன் – ஒரு பாய் பெஸ்டி தன் தோழியின் காதலனோ கணவனோ பால் சற்றே பொறாமை கொள்ளலாம். அதே நேரம் அவள் தன் காதலன் / கணவனை விட்டுப் பிரியக் கூடாது என ஒரு சகோதரனைப் போல பிரார்த்திக்கவும் செய்வான். இது பாலியல் சார்ந்த சிக்கல் அல்ல – மாறாக பாலியலின் இறுக்கத்தில் இருந்து, நிர்பந்தங்கள், நிபந்தனைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இருப்பதற்கான விருப்பம் ஒரு ஆணுக்குள் உண்டு. அப்போது ஒரு பாய் பெஸ்டியாக அவன் மாறுகிறான். தன்னுடைய இந்த ‘பதவிக்கு’ ஆபத்து வருவதை அவன் சற்று அச்சத்துடனே எதிர்கொள்கிறான். அவனுடைய இந்த நெருக்கடி ஒரு சாதாரண தோழனுக்கோ சகோதரனுக்கோ நேர்வது அல்ல. இது ஒரு தனித்துவமான நெருக்கடி.
ஒரு ஆணுடல் இயல்பாகவே பெண்ணை அடையும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது – அந்த பெண்ணுடல் யார், எந்த சமூக நிலையில், குடும்ப உறவில் இருக்கிறது என்றெல்லாம் அந்த ஆணுடல் கவலைப்படாது. ஆகையால் ஒரு பாய் பெஸ்டி தன் தோழி மீது சஞ்சலம் கொள்ளும் தருணமும் ஏற்படலாம் தான். ஆனால் அதை மீறிச் செல்லவே அவன் விரும்புவான். இதை பிராயிட் சொன்னதைப் போல பாலுணர்வு அடக்கப்படுதல், அதில் இருந்து அடக்கப்பட்ட உணர்வை உன்னதமாக்கல் (repression – sublimation) என நான் பார்க்க விரும்பவில்லை. மாறாக லக்கான் சொல்வதைப் போல நவீன வாழ்வை செக்ஸ் விழைவுகளைக் கடந்து (மறுத்து அல்ல) முடிவிலி ஒன்றை நோக்கிய நாட்டமாகவே பார்க்க விரும்புகிறேன். பாய் பெஸ்டியாக வாழ்வது இந்த நாட்டங்களில் ஒன்று.
நவீன மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட பாலியல் இச்சையைக் கடந்து கட்டற்ற அனுபவங்களை உறவுகள் வழி நாடுகிறான். நவீன மனிதனின் பெரிய சாதனையே உடல் இச்சையை மொழி மீதான, பண்பாட்டு வடிவங்கள் மீதான, சந்தையில் கிடைக்கும் பண்டங்கள் மீதான, அரசியல் சமூக கருத்தியல் உரையாடல்கள் மீதான, சமூகமாக்கல் மீதான இச்சையாக உருமாற்றியதே. உடல் சுகத்தை விட இது நீடித்த மேலான அனுபவமாக இருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். பாலியல் நாட்டம் ஏற்படுத்தும் நெருக்கடிகள் தரும் பயங்களும் மூர்க்கமும் அவனுடைய உலகை மீண்டும் மீண்டும் ஒரு சின்ன சதுரத்துக்குள் அடக்கி விடுகிறது. அசல் ஜெஸ்ஸியை விட ஜெஸ்ஸி குறித்து ரஹ்மான் உருவாக்கிய இசை, கௌதம் மேனனின் காட்சிகள், த்ரிஷாவின் நளினமான தோற்றமும் தவிப்பான கண்களும் கட்டற்றவை. இதை நடைமுறையில் துல்லியமாக உணர்ந்தவர்கள் பாய்பெஸ்டிகளே.
ஆண்களுக்கு பாய் பெஸ்டி உறவில் உள்ள பயன் அவன் காதலனாக, கணவனாக இருக்க வேண்டியதில்லை, சுதந்திரமாக ஒரு பெண்ணுடன் உறவாடலாம் என்பதே. ஒரு அசலான பாய் பெஸ்டி தனக்கு ஒரு தகுந்த சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமைந்தால் கூட தன் தோழியுடன் படுக்கையை பகிர மாட்டான். ஆனால் இதில் விதிவிலக்குகளும் உண்டு என்பதே இந்த உறவை சிக்கலாக சுவாரஸ்யமாக மாற்றுகிறது.

'பாய் பெஸ்டி’களின் கதை - மனுஷ்ய புத்திரன்

பாய்  பெஸ்டி என்பவன்
கனவுகளால் ஆனவனல்ல
கண்ணீரால் ஆனவன்

ஒரு பாய் பெஸ்டி
பாதி மிருகமாகவும்
பாதி மனிதனாகவும்
வாழ்பவனல்ல;
அவன் வாழ்வது
பாதிக் கணவனாக
பாதிக் காதலனாக

ஒரு பாய் பெஸ்டி
ஒரு பெண் உடுக்கை இழக்கும்
ஒரு கணத்திற்காக
இடுக்கண் களைய
அவள் அருகிலேயே காத்திருக்கிறான்
ஒரு நிழலாக
அதுகூட அல்ல
ஒரு நிழலின் நிழலாக

ஒரு பாய் பெஸ்டிக்கு
ஒரு பெண்ணின் கணவனின் முன்
எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும்
என்று தெரியும்
அதே சமயம் அவன் நண்பனாகவும்

ஒரு பாய் பெஸ்டிக்கு
ஒரு பெண்ணின் காதலன் முன்
எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்
என்று தெரியும்
தான் ஒரு அண்டைவீட்டான்
அல்லது வழிப்போக்கன் என்பதை
ஒவ்வொரு கணமும் நிரூபித்துக்கொண்டே

ஒரு பெண் கண்ணீர் சிந்தும்போது
தன்னை ஒரு கைக்குட்டையாக
பயன்படுத்துகிறாள் என
ஒரு பாய் பெஸ்டிக்கு தோன்றாமலில்லை
கைக்குட்டையாகவாவது
இருக்கிறோமே என நினைத்ததும்
அவன் மனம் சமாதானமடைந்து விடுகிறது

ஒரு பாய் பெஸ்டி
ஒரு பெண்ணின் நலக்குறைவை சரி செய்வதில்
ஒரு மருத்துவரைவிடவும் கவனமாகச் செயல்படுகிறான்
ஒரு பெண் துயரமடையும்போது
ஒருவனை அவனது தாய் தேற்றுவதுபோல
அவளைத் தேற்றுகிறான்

ஒரு பாய் பெஸ்டி
ஒரு பெண்ணின் சிறிய கஷ்டங்களை பெரிதாக்கிக்கொண்டு
தன் தோளில் சுமக்கிறான்
அவள் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டால்
அதற்காக ஒரு நீருற்றைத் தேடிச் செல்கிறான்

ஒரு பாய் பெஸ்டி எப்போதும்
உணவகங்களில் பில்களை செலுத்துவதில்
ஆர்வமுடையவனாக இருக்கிறான்
ஒரு பெண்ணிற்கு பரிசு வங்குவதற்காக
நீண்ட நேரம் செலவிடுகிறான்
ஒரு பெண் படியில் காலிடறும்போது
அது இந்த உலகின் அநீதிகளில் ஒன்றாக
அவனுக்குத் தோன்றிவிடுகிறது

ஒரு பாய் பெஸ்டியை
ஒரு பெண் பிரியத்தோடு அணைத்துகொள்கிறாள்
ஆதரவாக அவன் தோளில் சாய்ந்துகொள்கிறாள்
ஒரு பாய் பெஸ்டி
தான் எப்போதாவது அப்படி
அணைத்துக்கொள்ளவோ
சாய்ந்துகொள்ளவோ முடியுமா என
குழப்பமடைகிறான்

ஒரு பாய் பெஸ்டி என்பவன்
சங்கிலியால் கட்டப்பட்ட
ஒரு நாய்போல சிலசயம் தன்னை உணர்கிறான்
அன்பைக் காட்டவும்
அன்பைப் பெறவும்
சங்கிலியின் நீளம் எவ்வளவோ
அவ்வளவே அனுமதி என்பது
அவனை மனமுடையச் செய்கிறது

ஒரு பாஸ் பெஸ்டி
எப்போதும் தன்னை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய
ஒரு ஆயத்த நிலையில் வைத்திருக்கிறான்
ஒரு போர்வீரனைப்போல உத்தரவிற்குக் காத்திருக்கிறான்
அவன் அன்பின் புரவிகள்
எப்போதும் பாய்ந்து செல்லக் காத்திருக்கின்றன

ஒரு பாய் பெஸ்டி எப்போதும் காத்திருக்கிறான்
ஒரு பெண் அவள் காதலனால் துரோகமிழைக்கப்படுவதற்காக
அவள் கணவனால் அவள் சந்தேகிக்கப்படுவதற்காக
அவள் நண்பனால் அவள் காயப்படுவதற்காக;
அப்போதுதான் அவன் அங்கு அவதரிக்க இயலும்
அப்போதுதான் அவனுக்கு ஒரு சிறிய கதவு திறக்கிறது
அப்போதுதான் அவனுக்கு அவனது வசனங்களுக்கான
அவகாசம் கிட்டுகிறது

ஒரு பாய் பெஸ்டி
எப்போதாவது ஒரு பெண்ணிடம்
அந்த அற்புதம் நிகழ்ந்துவிடும் என
ரகசியமாக கனவு காண்கிறான்
அது ஒருபோதும் நிகழ்வதில்லை
அது வேறு யாருக்கோ கண்முன்னால் நிகழும்போது
அவன் இன்னும் பொறுமை தேவை
என்று தன்னைத்தானே உறுதிப்படுத்திக்கொள்கிறான்
இரண்டு நாள் பேசாமல் இருந்துவிட்டு
மூன்றாவது நாள் பெருந்தன்மையின்
முகமூடியை  அணிந்துகொண்டு
அவனே அலைபேசியில் அழைக்கிறான்
தன் தற்கொலை முடிவுகளை
ஒருபோதும் நிறைவேற்ற முடியாத
ஒரு கோழையாக இருக்கிறான்

ஒரு பெண் தன்னோடு ஒருபோதும்
இல்லாதபோதும்
அவள் ஏன் எப்போதும்
தன்னுடன் இருக்கிறாள் என்பதை
ஒரு பாய்பெஸ்டியினால்
ஒருபோதும் புரிந்துகொள்ள முடிவதில்லை

ஒரு காதலனின் பொறுப்பற்றத்தனங்களோ
ஒரு கணவனின் அதிகாரங்களோ
ஒருபோதும் ஒரு பாய்பெஸ்டியிடம் இருப்பதில்லை
அவன் ஒரே நேரத்தில்
ஒரு பெண்ணின் தந்தையாகவும்
குழந்தையாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறான்

ஒரு பாய் பெஸ்டி எப்போதாவது
ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்ல விழைகிறான்
அவள் முதலில் அதிர்ச்சியடைவதுபோல
முகத்தை வைத்துக்கொள்கிறாள்
அது எதிர்பாராத ஒன்று என்பதுபோன்ற
ஒரு சித்திரத்தை உருவாக்குகிறாள்
பாய் பெஸ்டி குற்ற உணர்வால் நடுங்கத் தொடங்குகிறான்
நூறு முறை மன்னிப்புக் கோருகிறான்
அது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை காட்சியாகிவிடுகிறது
அந்த நகைச்சுவைக்கு
அவளோடு சேர்ந்து
அவனும் சிரிக்கத் தொடங்கிவிடுகிறான்

ஒரு பாய் பெஸ்டி
ஒரு பென்ணின் காதல் கதைகளை
அவ்வளவு பொறுமையுடன் கேட்கிறான்
கல்லாய் சமைந்த ஒரு கடவுள்கூட
அத்தனை பொறுமையாய் கேட்கமாட்டார்

யாரும் பிறக்கும்போதே
பாய் பெஸ்டியாக பிறப்பதில்லை
விதி எங்கோ தடம் மாற்றிவிடுகிறது
பசித்த மனிதர்களின் கையில்
ஒரு மலரைக்கொடுத்து அனுப்பி வைக்கிறது

- மனுஷ்ய புத்திரன்