Friday, February 21, 2020

'பாய் பெஸ்டி’களின் கதை - மனுஷ்ய புத்திரன்

பாய்  பெஸ்டி என்பவன்
கனவுகளால் ஆனவனல்ல
கண்ணீரால் ஆனவன்

ஒரு பாய் பெஸ்டி
பாதி மிருகமாகவும்
பாதி மனிதனாகவும்
வாழ்பவனல்ல;
அவன் வாழ்வது
பாதிக் கணவனாக
பாதிக் காதலனாக

ஒரு பாய் பெஸ்டி
ஒரு பெண் உடுக்கை இழக்கும்
ஒரு கணத்திற்காக
இடுக்கண் களைய
அவள் அருகிலேயே காத்திருக்கிறான்
ஒரு நிழலாக
அதுகூட அல்ல
ஒரு நிழலின் நிழலாக

ஒரு பாய் பெஸ்டிக்கு
ஒரு பெண்ணின் கணவனின் முன்
எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும்
என்று தெரியும்
அதே சமயம் அவன் நண்பனாகவும்

ஒரு பாய் பெஸ்டிக்கு
ஒரு பெண்ணின் காதலன் முன்
எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்
என்று தெரியும்
தான் ஒரு அண்டைவீட்டான்
அல்லது வழிப்போக்கன் என்பதை
ஒவ்வொரு கணமும் நிரூபித்துக்கொண்டே

ஒரு பெண் கண்ணீர் சிந்தும்போது
தன்னை ஒரு கைக்குட்டையாக
பயன்படுத்துகிறாள் என
ஒரு பாய் பெஸ்டிக்கு தோன்றாமலில்லை
கைக்குட்டையாகவாவது
இருக்கிறோமே என நினைத்ததும்
அவன் மனம் சமாதானமடைந்து விடுகிறது

ஒரு பாய் பெஸ்டி
ஒரு பெண்ணின் நலக்குறைவை சரி செய்வதில்
ஒரு மருத்துவரைவிடவும் கவனமாகச் செயல்படுகிறான்
ஒரு பெண் துயரமடையும்போது
ஒருவனை அவனது தாய் தேற்றுவதுபோல
அவளைத் தேற்றுகிறான்

ஒரு பாய் பெஸ்டி
ஒரு பெண்ணின் சிறிய கஷ்டங்களை பெரிதாக்கிக்கொண்டு
தன் தோளில் சுமக்கிறான்
அவள் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டால்
அதற்காக ஒரு நீருற்றைத் தேடிச் செல்கிறான்

ஒரு பாய் பெஸ்டி எப்போதும்
உணவகங்களில் பில்களை செலுத்துவதில்
ஆர்வமுடையவனாக இருக்கிறான்
ஒரு பெண்ணிற்கு பரிசு வங்குவதற்காக
நீண்ட நேரம் செலவிடுகிறான்
ஒரு பெண் படியில் காலிடறும்போது
அது இந்த உலகின் அநீதிகளில் ஒன்றாக
அவனுக்குத் தோன்றிவிடுகிறது

ஒரு பாய் பெஸ்டியை
ஒரு பெண் பிரியத்தோடு அணைத்துகொள்கிறாள்
ஆதரவாக அவன் தோளில் சாய்ந்துகொள்கிறாள்
ஒரு பாய் பெஸ்டி
தான் எப்போதாவது அப்படி
அணைத்துக்கொள்ளவோ
சாய்ந்துகொள்ளவோ முடியுமா என
குழப்பமடைகிறான்

ஒரு பாய் பெஸ்டி என்பவன்
சங்கிலியால் கட்டப்பட்ட
ஒரு நாய்போல சிலசயம் தன்னை உணர்கிறான்
அன்பைக் காட்டவும்
அன்பைப் பெறவும்
சங்கிலியின் நீளம் எவ்வளவோ
அவ்வளவே அனுமதி என்பது
அவனை மனமுடையச் செய்கிறது

ஒரு பாஸ் பெஸ்டி
எப்போதும் தன்னை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய
ஒரு ஆயத்த நிலையில் வைத்திருக்கிறான்
ஒரு போர்வீரனைப்போல உத்தரவிற்குக் காத்திருக்கிறான்
அவன் அன்பின் புரவிகள்
எப்போதும் பாய்ந்து செல்லக் காத்திருக்கின்றன

ஒரு பாய் பெஸ்டி எப்போதும் காத்திருக்கிறான்
ஒரு பெண் அவள் காதலனால் துரோகமிழைக்கப்படுவதற்காக
அவள் கணவனால் அவள் சந்தேகிக்கப்படுவதற்காக
அவள் நண்பனால் அவள் காயப்படுவதற்காக;
அப்போதுதான் அவன் அங்கு அவதரிக்க இயலும்
அப்போதுதான் அவனுக்கு ஒரு சிறிய கதவு திறக்கிறது
அப்போதுதான் அவனுக்கு அவனது வசனங்களுக்கான
அவகாசம் கிட்டுகிறது

ஒரு பாய் பெஸ்டி
எப்போதாவது ஒரு பெண்ணிடம்
அந்த அற்புதம் நிகழ்ந்துவிடும் என
ரகசியமாக கனவு காண்கிறான்
அது ஒருபோதும் நிகழ்வதில்லை
அது வேறு யாருக்கோ கண்முன்னால் நிகழும்போது
அவன் இன்னும் பொறுமை தேவை
என்று தன்னைத்தானே உறுதிப்படுத்திக்கொள்கிறான்
இரண்டு நாள் பேசாமல் இருந்துவிட்டு
மூன்றாவது நாள் பெருந்தன்மையின்
முகமூடியை  அணிந்துகொண்டு
அவனே அலைபேசியில் அழைக்கிறான்
தன் தற்கொலை முடிவுகளை
ஒருபோதும் நிறைவேற்ற முடியாத
ஒரு கோழையாக இருக்கிறான்

ஒரு பெண் தன்னோடு ஒருபோதும்
இல்லாதபோதும்
அவள் ஏன் எப்போதும்
தன்னுடன் இருக்கிறாள் என்பதை
ஒரு பாய்பெஸ்டியினால்
ஒருபோதும் புரிந்துகொள்ள முடிவதில்லை

ஒரு காதலனின் பொறுப்பற்றத்தனங்களோ
ஒரு கணவனின் அதிகாரங்களோ
ஒருபோதும் ஒரு பாய்பெஸ்டியிடம் இருப்பதில்லை
அவன் ஒரே நேரத்தில்
ஒரு பெண்ணின் தந்தையாகவும்
குழந்தையாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறான்

ஒரு பாய் பெஸ்டி எப்போதாவது
ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்ல விழைகிறான்
அவள் முதலில் அதிர்ச்சியடைவதுபோல
முகத்தை வைத்துக்கொள்கிறாள்
அது எதிர்பாராத ஒன்று என்பதுபோன்ற
ஒரு சித்திரத்தை உருவாக்குகிறாள்
பாய் பெஸ்டி குற்ற உணர்வால் நடுங்கத் தொடங்குகிறான்
நூறு முறை மன்னிப்புக் கோருகிறான்
அது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை காட்சியாகிவிடுகிறது
அந்த நகைச்சுவைக்கு
அவளோடு சேர்ந்து
அவனும் சிரிக்கத் தொடங்கிவிடுகிறான்

ஒரு பாய் பெஸ்டி
ஒரு பென்ணின் காதல் கதைகளை
அவ்வளவு பொறுமையுடன் கேட்கிறான்
கல்லாய் சமைந்த ஒரு கடவுள்கூட
அத்தனை பொறுமையாய் கேட்கமாட்டார்

யாரும் பிறக்கும்போதே
பாய் பெஸ்டியாக பிறப்பதில்லை
விதி எங்கோ தடம் மாற்றிவிடுகிறது
பசித்த மனிதர்களின் கையில்
ஒரு மலரைக்கொடுத்து அனுப்பி வைக்கிறது

- மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment