Friday, April 4, 2014

வையத் தலைமைகொள் ! – வெ. இறையன்பு புதிய தலைமுறை

கூண்டில் இருந்த சிங்கத்திற்கு, ‘நானும் மற்ற சிங்கங்கள் போல, காட்டிலே ஆனந்தமாகச் சுற்றித் திரிய முடியவில்லையே’ என்று வருத்தமாக இருந்தது.

கூண்டு திறந்திருக்கும் சமயம் பார்த்து காட்டுக்குள் புகுந்தது. காட்டில் மகிழ்ச்சியாக உலாவிய அதற்குப் பசி எடுத்தது. சர்க்கஸில் இருந்தபோது அதற்கு இறைச்சி, கூண்டுக்கே வரும்.  இப்போது..? காட்டுச் சிங்கங்கள் சாமர்த்தியமாக வேட்டையாடி மற்ற மிருகங்களை அடித்துச் சாப்பிட்டன.  

சின்ன வயதிலிருந்தே வேட்டையாடிப் பழக்கமற்ற சர்க்கஸ் சிங்கத்திற்கு எந்த மிருகமும் சிக்கவில்லை.  பசி மயக்கத்தால் துவண்ட சிங்கம் தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் கூண்டுக்கே திரும்பியது.

‘பாசமுள்ள சிங்கம்’ என்று சர்க்கஸ்காரர்கள் சந்தோஷப்பட்டனர். ‘நமக்கு இந்தக் கூண்டுப் பிழைப்பைத் தவிர வேறு வழியில்லை’ என எண்ணியது சிங்கம்.

சுகமாக வாழப் பழகுபவர்களால் ஒருபோதும் சுமக்க முடியாது. சொகுசை எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். சங்கடங்களையும்  நெருக்கடிகளையும் சகிக்கவும், ஏற்கவும், சமாளிக்கவுமே பயிற்சி தேவை.

சிக்கல்களை சந்திக்க, சந்திக்கவே மனிதன் மெருகேறுகிறான்; மெனக்கெடுபவனே மேன்மையாகிறான்.

ராஜநீதியில் மேற்குக்கு எப்படி மாக்கியவல்லியோ, அப்படி சீனத்திற்கு ஜூஜ் லியாங்.  தளபதியாகவும், தந்திரசாலியாகவும் இருந்த அவரை, ‘பதுங்கும் டிராகன்’ என்றே சீனம் அழைத்தது.  டாங் யுகத்தின் காரணகர்த்தாவாக விளங்கிய அவர் பற்றிய புனைவுகள் சுவாரசியமும், பிரமாண்டமும் நிறைந்தவை.  

நுண்ணறிவு, திறமை, விசுவாசம், ராஜதந்திரம், படிப்பறிவு, வானியல் நிபுணத்துவம் என்று பல்வேறு நுட்பங்களில் அவர்  சக்கைப்போடு போட்டதாக, ‘மூன்று நாடுகளின் நேசம்’  என்கிற சரித்திரப் புதினத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தூங்குவது போன்ற கண்ணமைப்பு கொண்ட சீனர்களே ஒரு காலத்தில் அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பது உலகப் பிரசித்தம்.  

க்சூ ஷூ என்கிற நிபுணர் லியூ பெய் என்பவரிடம் லியாங்கை உத்திகளுக்காக அவருடைய படையில் சேர்க்கும்படி அறிவுரை வழங்கினார்.  லியூ பெய் அவருடைய சொந்த ஊருக்குப் பயணம் செய்தார்.  அங்கு லியாங் ஒரு சின்னக் கூரை வீட்டில் வசித்தது தெரிந்தது.  லியாங்கின் பணியாளர், ‘எஜமான் இல்லை’ என்று சொல்லி விட்டார். லியூ பெய், தான் வந்த சேதியை லியாங்கிடம் தெரிவிக்கும்படி கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்.  ஆனால் லியாங் அவர் எதிர்பார்த்தபடி ஓடோடிச் சென்று சலாமிடவில்லை.  இரண்டாவது முறை பயணம் செய்தபோதும், லியாங்கை சந்திக்க முடியவில்லை.  மூன்றாம் முறை சென்றபோது லியாங் தூங்கிக் கொண்டிருந்தார்.  அவர் விழிக்கும் வரை காத்திருந்த லியூ பெய், லியாங் எழுந்ததும் அவரிடம் சேதியைச் சொன்னார்.  சில நிமிடங்களில் லாங்ஜாங் திட்டத்தின் வரைவைத் தயாரித்த லியாங், லியூ பெயிடம் அவருடைய உத்திசாலியாக இருக்க ஒப்புக் கொண்டார்.  
           
தகுதியும், திறமையும் உள்ளவர்கள் சிபாரிசுக்கு அலைவதில்லை.  அவரைத் தேடி அனைவரும் வருகிறார்கள்.  அவர்கள் கவிஞர்கள் போல;  தவமிருக்கும் எல்லாச் சொற்களையும் அங்கீகரித்து விடுவதில்லை.    

லியாங், சீனத்தின் ராணுவத் தொழில்நுட்பத்தை அடுத்த உயரத்திற்கு எடுத்துச் சென்ற மேதாவி.  அவருடைய கண்டுபிடிப்புகள் முக்கியமானவை.  தளவாடங்கள், கண்ணிவெடி, வீல் பேரோ என்கிற போக்குவரத்துக் கருவி போன்றவை அவருடைய நாட்டின் பலத்தை உறுதிப்படுத்தியது.  அவருடைய போர்க்களத்தை ஸ்திரப்படுத்தும் திமிசுக் கட்டைகளாக அவை இருந்தன.  அவர் காலாட்படை, குதிரைப்படை பற்றிய நுணுக்கங்களை தாவோ தத்துவங்களைச் சார்ந்து வடிவமைத்தார்.

அவர் தந்திரங்களில் கில்லாடி.

வேறோர் அதிகாரிக்கு எப்போதும் லியாங் மீது பொறாமை. அவர், ‘இன்னும் ஒரே வாரத்தில்  நீ 10,000 அம்புகள் தயாரிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் தூக்கிலிடப்படுவாய்’ என்று ஆணை பிறப்பித்தார். ஆனால் லியாங் சிறிதும் அசரவில்லை.  ‘மூன்றே நாட்கள் போதும்.  ஒரு வாரம் எதற்கு? முடித்துக் காட்டுகிறேன்’ என்று கட்டைவிரலை உயர்த்திக் கட்டளையை ஏற்றார்.

லியாங் 20 படகுகளைத் தயாரித்தார்.  ஒன்றிரண்டு சிப்பாய்கள் அவற்றை இயக்குவார்கள்.  மற்றபடி படகு முழுவதும் மனித உருவில் கச்சிதமாக வைக்கோல் பொம்மைகள்.  தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வேறுபாடு எதுவும் தெரியாது.  விடியும்போது, பனிமூட்டம் எக்கச்சக்கமாக இருக்கும்போது, எதிரி மன்னன் கோகோ பாசறையிட்டு முகாமிட்டிருக்கும் நதியில் அந்த ஓடங்களை ஓடவிடுகிறார்.  லியாங் முரசுகளை அறைந்து, படைவீரர்களைக் கரையிலிருந்து முழங்கச் செய்து தாக்குதல் நடத்துவது போல,  ‘பாவ்லா’ காட்டச் சொல்லுகிறார்.

கனமான முரசு ஓசை.  ஆர்ப்பரிக்கும் எதிரிப்படை. நதியில் வரிசையாகப் படகுகள்.   பார்வை துல்லியமாகத் தெரியாத பனிமூட்டம். படகுகள் இருபதா, இருநூறா என்று கூடப் புரியவில்லை.  கோகோவின் படைவீரர்கள் சரமாரியாக படகுகளை நோக்கி அம்பு எய்த வண்ணம் இருந்தனர்.  முரசு சத்தமோ கூடிக் கொண்டேயிருந்தது.  அந்த அம்புகள் அனைத்தும் வைக்கோல் மனிதர்களின் உடம்பில் குத்தி நின்றன.  எக்கச்சக்கமாக அம்புகள் சேர்ந்து படகே மூழ்குமளவு எடை கூடியதும் எச்சரிக்கையுடன் கரைக்குத் திரும்பின.  அந்த அம்புகள் வைக்கோல் மனிதர்களிடமிருந்து கவனமாக உருவி எடுக்கப்பட்டபோது, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அம்புகள் கிடைத்தன.  ஆணையிட்ட அதிகாரி அதிர்ச்சியில் அசந்து போனான்.

சீனம் இன்றிருப்பது போன்று ஒரே பிரதேசமாக இருக்கவில்லை.  ஹன் சாம்ராஜ்யம் கி.பி. 220-ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்தது.  அது பலவீனமானவர்களுடைய  அரசாட்சியாலும், பிரிவினைகளாலும், இயற்கை இடர்பாடுகளாலும் குறுகத் தொடங்கியது.  கிழக்குச் சீனத்தில் மஞ்சள் தலைப்பாகையுடன் 3,50,000 கிளர்ச்சியாளர்கள் தலைவலி தந்தனர்.  மேற்கிலிருந்த புரட்சியாளர்கள் அவர்களாகவே சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தனர்.  

மன்னர் லிங்டி 189-ஆம் ஆண்டு மண்டையைப் போட்டதும், வாரிசு அரசியலில் வம்சம் மண்டை காய்ந்தது.  ஒரு தளபதி தலைநகரைச் சூறையாடி அவையிலிருந்த 2,000 அரவாணிகளைக் கொன்று குவித்து எட்டு வயது பாலகன் ஒருவனை பொம்மை அரசனாக்கினான்.  அவனே உயிருக்குப் பயந்து ஓடிப்போனான்.  

லியாங்கிற்கு அப்போது வயது 19.  கிழக்குப் பிரதேசத்தில் பிறப்பு.  அவர் தாய் இறக்கும்போது வயது 9.  தந்தை தவறியபோது 12. ‘ஏழைத் தந்தைக்குப் பிறப்பது விதி; ஏழை மாமனாரைத் தேர்ந்தெடுப்பது முட்டாள்தனம்’ என்று  நகைச்சுவை மொழி ஆங்கிலத்தில் உண்டு.  லியாங் மிகப் பெரிய படிப்பாளி ஒருவரின் மகளை மணம் செய்தார்.  அவரோ கூலிப்படைகளின் தலைவனான லியூ பெய் என்பவரின் குரு.  

லியூ பெய் வாழ்வு ஏற்ற இறக்கமாக இருந்தது.  கோகோ என்கிற வீ நாட்டுத் தளபதியைக் கொல்ல முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அவர் அந்த அரசவையிலிருந்து அவசர ஓட்டம் எடுத்தார்.  அவர் அந்த நேரத்தில்தான் லியாங்கை சந்திக்க மூன்று முறை பயணம் செய்தார்.

கி.பி. 207-ஆம் ஆண்டு லியாங், லியூ பெய்  வசம் ஹன் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த பெரிய திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.  அதற்குப் பெயர், ‘லாங்ஜாங் திட்டம்’.  வனப்பிரதேசமாகவும், மலைகளால் சூழ்ந்ததாகவும், வளம் கொழிப்பதாகவும் இருந்த சிசுவான் பகுதியில் ஷீ அரசை நிர்மாணிக்க அளிக்கப்பட்ட யோசனையே  அது.  நிர்வாகப் பொருளாதார சட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்துவதன் மூலம் அது வலிமை வாய்ந்த நாடாக வளம் பெறும்.  தெற்குப் பகுதியில் உள்ள வம்சாவளியினரைத் திரட்டி ஹன் எதிர்ப்பை முறியடிக்க வேண்டும்.  இவையே லியாங் திட்டத்தின் சாராம்சம்.  

அந்த நேரத்தில் சீனத்தில் பலம் வாய்ந்த இரண்டு அரசாங்கங்கள் மோதிக்கொண்டன.  வூ என்கிற நாடு எதிரி நாட்டிடம் சரணடைவதாக ஒப்புக் கொண்டது.  பத்து கப்பல்கள் முழுவதும் உணவுப் பொருட்களை நிரப்பி ஒப்படைப்பதாக வாக்குக் கொடுத்து, அவற்றை வூ தளபதி எதிரி முகாமிற்கு அனுப்பினான்.  அதிலிருந்த வெடிபொருட்கள் எரிந்து சிதற... பலத்த சேதம்.  மறுமுனையிலோ சரணடைவதாகச் சொன்ன வூவின் படையுடைய முற்றுகை.  திரும்ப வரும் வழியெங்கும் கொரில்லாத் தாக்குதல்கள்.  அப்போது, ‘காற்று எப்படி வீசும், எப்போது வூ நாட்டிற்கு சாதகமாக இருக்கும்’ என்றெல்லாம் வூ நாட்டு மன்னனுக்குத் தக்க ஆலோசனைகளை லியாங் வழங்கி வந்தார்.  அவருக்கு மாந்திரிகம் தெரியும், அவர் காற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவர் என்றெல்லாம் எண்ணுமளவிற்கு அவருடைய பிம்பம் நம்மூர், ‘கட்அவுட்’ போல் பிரமாண்டமானது.  உண்மையைவிட பிம்பங்களே வேகமாக ஊர் சுற்றுகின்றன.

வூ மன்னன் நன்றியுணர்வுடன் லியூ பெய் சிசுவான் பகுதியில் இயங்க அனுமதியளித்தான்.  கி.பி. 220-ஆம் ஆண்டு கோகோ இறந்தான்.  ஹன் அரசு தடுமாறியது.  லியூ தன்னை சீனத்தின் ஹன் வாரிசு என சில ஆதாரங்களை முன் வைத்து, தானே சீனத்தின் உண்மையான அரசன் என அறிவித்தான்.

ஆதரவை அளித்த வூ நாடு சும்மாயிருக்கவில்லை.  லியூ பெயின் தளபதி ஒருவனின் தலையை வெட்டி அனுப்பியது.  உணவுப் பொருட்களின் வரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் கசப்புணர்வு கசிந்தது.  வூ நாடு இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தி லியூ பெயின் முகாம்களுக்குத் தீ வைத்தது.  வேறு வழியின்றி லியூ கோட்டையுடன் கூடிய பாதுகாப்பான நகரத்தில் அடைக்கலம் புகுந்து ஆதங்கத்திலேயே இறந்து போனான்.  மரணப்படுக்கையில்  அவன் ஜூஜ் லியாங்கை அழைத்து, ‘என் மகனே என் வாரிசு.  அவனுக்குப் போதாது.  நீயே பாதுகாக்க வேண்டும்’ என்று சத்தியம் வாங்கிக் கொண்டு கடைசி மூச்சை நிம்மதியாக விட்டான்.

லியாங் அவனை, அவருடைய சிறகுகளை விரித்துப் பாதுகாத்தார்.  அந்த நாட்டின் முக்கிய சக்தியாக அவரே திகழ வேண்டிய கட்டாயம்.

அப்போது பலசாலியாக இருந்தவை வூ, வீ இரண்டு நாடுகளே! அவர் வூ நாட்டு மன்னருடன் நேசக்கரம் நீட்டி உறவு ஏற்படுத்திக் கொண்டார்.  அது வலுவான கூட்டணியாக இருந்தது.

சாம்ராஜ்யத்தின் எல்லைப் பகுதியோ அமைதியின்றி இருந்தது.  காரணம், அங்கிருந்த மலைப் பகுதிகளின் மரபுவழி மக்கள்.  அவர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவன்.  அவன் ஆள்காட்டி விரலின் அசைவுக்கே அங்கிருந்த அத்தனை மக்களும் கட்டுப்பட்டனர்.  லியாங் அவனை 7 முறை தோற்கடித்தார்.  ஒவ்வொரு முறை அவன் பிடிபட்டபோதும், கொல்லாமல் மன்னித்து அனுப்பினார். ஏழாவது முறையும் தோற்றவுடன் அவனுக்கே வெட்கம் ஏற்பட்டது.  ‘இனி நான் உங்கள் விசுவாசி. தெற்குப் பகுதி இனி ஒருபோதும் கிளர்ச்சியில் ஈடுபடாது.  நீங்களே எங்கள் அரசர்’ என்று சத்தியம் செய்தான்.  அந்த மரபுவழித் தலைவன் பெயர் மெங்.  அவனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அப்பகுதிகளின் நிர்வாகிகளாக்கி நிரந்தரத் தலைவலியை நீக்கினார்.  அந்த மரபுவழி மக்கள் தேர்ந்த குதிரைகளை அளித்து முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்தனர்.

எதிரி நாடு படையெடுத்து வந்தது.  பலம் வாய்ந்த நாடு. வீ என்றால், ‘வீல்’ என்று கத்துமளவு அச்சத்தைப் பரப்பிய வீரர்கள் கொண்ட நாடு.  அதன் மீது நேரடியாக மோதினால் நெற்றி வீங்க நேரிடும் என்பதை அறிந்த லியாங் இரண்டு சிறு பிரிவுகளை மட்டும் நேரடியாக மோத அனுப்பிவிட்டு, பின்புறமாக மற்ற துருப்புகளை அனுப்பி முற்றுகையைத் தகர்த்தார்.  அடுத்த ஆண்டு, யூ, வீ இரு நாடுகளின் மோதலைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடுத்தார்.  ஆனால் மூன்றாம் முறையே கணிசமான முன்னேற்றம்.  இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக பகுதிகளை எச்சரிக்கையுடன் கையாண்ட அவர், சக்தி வாய்ந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பிறகே ஓய்ந்தார்.  

திடீரென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குவது என்பது எளிதல்ல.  வெறும் கையால் முழம் போட வீரம் மட்டும் போதாது, விவேகமும் வேண்டும்; சண்டை மட்டும் போதாது, சாதுரியமும் வேண்டும்.  அவற்றையெல்லாம் தொழில்நுட்பத்துடன் பொருத்தி, அசைக்க முடியாத சக்தியாக உருவாக்கியவர் லியாங்.

மெங் வம்சாவளியினருடன் மோதும்போது, வெற்றி பெறும் நேரத்தில் திடீரெனப் படையைப் பின்வாங்கினார் லியாங்.  அவர்கள் உத்வேகத்துடனும், பெருமிதத்துடனும் முன்னேறியபோது ஏற்கெனவே வெட்டிய, இலை-தழைகளால் மறைக்கப்பட்டிருந்த குழிகளில் அவர்கள் தொப்-தொப் என்று வரிசையாக விழுந்து மாட்டிக்கொண்டனர்.  அவர்களை சிறிதும் சிரமப்படாமல் சென்று சிறை பிடித்தனர் லியாங் படையினர்.

இன்னொரு முறை யானைகளையும், சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட புலிகளையும் எதிரிகள் மலைப் பிரதேசத்தில் பயன்படுத்தினர்.  ஆனால் சிறிதும் அசராத லியாங், நெருப்பைக் கக்கும் எந்திரங்களை முன்னிறுத்தினார்.  மனிதனுக்குக் கிடைத்த மாபெரும் சக்தி நெருப்பு.  அத்தனை விலங்குகளுக்குமே நெருப்பு என்றால் பயம்.

கிரேக்கப் புனைவு ஒன்று உண்டு.  தேவர்கள் மட்டுமே நெருப்பைப் பயன்படுத்தி வந்தார்களாம்.  அப்போது புரோமதியஸ் என்கிற தேவன்,  கடவுளர் உலகத்திலிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டுவந்து மனித இனத்திற்குத் தந்து விட்டானாம்.  ‘இனி மனிதர்களும் நமக்குச் சமமாக ஆகி விடுவார்களே’ என்று கோபப்பட்ட ஜூபிடர் தேவன், புரோமதியஸை தண்டித்தான்.அதன்படி சங்கிலிகளால் பிணைக்கப்பட்டான் புரோமதியஸ். பகலில் கழுகால் சின்னாபின்னமாக்கப்பட்ட அவன் இதயம் இரவில் மறுபடி வளரும்.  மறுநாள் வல்லூறு காலையில் மீண்டும் கொத்தத் தொடங்கும்.  தீராத வலி; ஆராத காயம்.  

விலகிச் சென்றதற்காக வருந்துகிறேன்...

மெங், இறுதிப் போரின்போது புதிய தொழில்நுட்பத்தைக் கையாண்டான்.  அவன் வேறொரு நாட்டிடம் இருந்து கடுமை வாந்த கேடயங்களைத் தருவித்தான்.  அவற்றை வாளால் துளைக்க முடியாது.  ஈட்டிகளால் ஊடுருவ முடியாது.  அப்படிப்பட்ட கேடயங்களுடன் ஆக்ரோஷமாக மோத வந்தது மெங்கின் படை. ஏற்கெனவே மலைப் பகுதியில் வாழ்ந்தவர்கள்.  ஆபத்துகளுடன் இருப்பவர்கள்.  சவால்களோடு கைகுலுக்குபவர்கள்.  அப்படிப்பட்ட அவர்கள் உயிரை துச்சமாக எண்ணி வருவதைப் பார்த்ததும் சட்டென லியாங்கின் படை, ‘ஜகா’ வாங்கியது.  அது ஒரு பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றது.  அங்கே புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் மெங்கின் குதிரைக் குளம்புகள் பட்டதும் அவர்களை எரித்து அழித்தன.  எளிதில் லியாங்கின் மடியில் வந்து விழுந்தது வெற்றி.

லியாங் சிரமப்படாமல், சிராய்ப்பு அடையாமல் சிறப்பான வெற்றியைப் பெற்றவர். அவர் மலைப்பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல சக்கரங்கள் கொண்ட வண்டிகளைப் பயன்படுத்தினார். அதனால் அவருடைய படைவீரர்களும், குதிரைகளும் களைப்படையாமல் எளிதில் பொருட்களைக் கொண்டு செல்ல முடிந்தன.  பிறகு மற்றவர்களும் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

மலைப்பகுதிகளை அதிரடித் தாக்குதலுக்குத் தோதாகப் பயன்படுத்தியவரும் அவரே. சிசுவான் கரடுமுரடான பகுதி. எதிரிகளை அவர்கள் முகாம்களிலிருந்து கவர்ந்து இழுத்து, ஆங்காங்கே மரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வீரர்களைக் கொண்டு சரமாரியான அம்புகளால் தாக்குவதுதான் அவரது அணுகுமுறை. அம்புகளும், ஈட்டிகளும், பாறைகளும் எந்தத் திசையிலிருந்து ஓடி வருகின்றன, பாய்ந்து வருகின்றன என்று அறிவதற்கு முன்பே தாக்குதலில் எதிரிகள் கலகலத்துப் போவார்கள்.

லியாங் பயன்படுத்திய உத்திகளிலேயே உயர்ந்தது காலிக்கோட்டை உத்தி. புத்திசாலியாகவும், உத்திசாலியாகவும் இருக்கும் லியாங் எதற்கும் அசராதவர் என்கிற அபிப்ராயத்தை எதிரிகளிடம் ஆழமாக வேரூன்ற வைத்தார்.  ஒருமுறை அவர் படை வேறு பக்கம் போயிருந்தது. சொற்ப சிப்பாய்களுடன் ஒரு கோட்டையில் அவர் தங்க நேரிட்டது. அதே நேரம் பார்த்து, எதிரி ஒருவன் படை வருகிற தகவல்கள் வந்து சேர்ந்தன.

பொதுமக்களும், குடிமக்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால் லியாங் பயப்படவில்லை.  சிப்பாய்களையெல்லாம் சிப்பந்திகள் போல சிவிலியன் உடையில் நகரின் தெருக்களை சுத்தம் செய்யச் சொன்னார்.  துப்பாக்கி  ஏந்த வேண்டிய கைகள் துடைப்பத்துடன் நகரின் தெருக்களைத் துப்புரவு செய்தன. மக்களோ அச்சத்தின் மடியில் அமர்ந்திருந்தனர்.  

லியாங் சாவகாசமாக சிறிதும் பதற்றமின்றி கோட்டைக் கொத்தளத்தில் இரண்டு குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தார்.  படை நடத்தி வந்த தளபதி, ‘இதில் ஏதோ சூது இருக்கிறது’ என எண்ணி தாக்குதல் நடத்தாமல் தப்பி ஓடினான்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பதற்றமடையக் கூடாது.  பொறுமையுடன், எதிரியின் அசைவுகளைக் கவனித்து அவற்றிற்குத் தகுந்தவாறு காய் நகர்த்த வேண்டும்.  போர்க்களத்தில் மட்டுமல்ல, நிறுவனத்திலும் நாம் ஏற்படுத்தும் பிம்பங்கள் முக்கியம்.  எந்த மிகப் பெரிய பிரச்சினைக்கும் தீர்வு உண்டு.  கொஞ்சம் ஆற அமர யோசித்தால் எந்த நெருக்கடியையும் மதி யூகத்தால் சந்திக்க முடியும்.  அவற்றைப் பக்கவாட்டுச் சிந்தனைகள் என்று மேற்கு இப்போது அழைக்கிறது. ஆனால் பெயரிடாமல் அப்போதே கிழக்கு செய்து முடித்தது.

தலைமை கொள்பவர்கள் ஒவ்வொரு நெருக்கடியையும் அவர்களை பலப்பரீட்சை செய்துகொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பாகக் கருதுவார்கள்.  அவர்களுடைய அறிவு, சாணை தீட்டப்பட்ட கூர்மையுடன் இதுவரை யாரும் எண்ணியிராத தீர்வைக் காணும்.  இதுவே எளிய முறையில் வாழ்வைத் தொடங்கிய லியாங் காட்டும் வழி.

No comments:

Post a Comment