Friday, April 4, 2014

வையத் தலைமைகொள் - வெ. இறையன்பு புதிய தலைமுறை

இறவாமை வேண்டும் என ஆசைப்படுவது ஆன்மிகம்.  மறவாமை வேண்டும் என விருப்பப்படுவது அரசியல்.  மக்கள் மனத்தில் நிலையாக இருக்கும் மறவாமையும் ஒருவித இறவாமை.

அன்றாட நிர்வாகம் மக்களால் மறக்கப்படும்.  ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்து நிற்கக் கூடிய பணியை, பயனைச் செய்து முடித்தால் அது எப்போதும் மக்களால் நினைக்கப்படும்.

இந்த ஆசை பல சாம்ராஜ்யங்களைக் கவிழ்த்ததுமுண்டு.  மக்களின் வரிப் பணத்தை ஆடம்பரமான மாளிகைகள் கட்டவும், பூங்காக்கள் அமைக்கவும் பயன்படுத்தி கஜானா திவாலாகி சூம்பிப்போன நாடுகள் உண்டு.  கிரேக்கமும், ரோமாபுரியும் அதற்குச் சான்று.  இந்தியாவிலேயே தாஜ்மஹாலை நிர்மாணிக்க செல்வத்தை விரயமடித்துவிட்டதாக தந்தையை நொந்தே ஔரங்கசீப் கலகம் செய்ததாக நாடகங்கள் உண்டு.

ஆடம்பரப் பணிகள் மறக்கப்படும்; அவசியமான பணி நினைந்து, நினைந்து இன்புற வைக்கும்.  ஆடம்பரப்பணி ஒருவனின் பதாகையை உயர்த்துவதற்கு.  அத்தியாவசியப் பணி மக்கள் என்றும் மகிழ்ச்சியாய் வாழ.

தமிழக மன்னர்கள் எளிமையாக இருந்தார்கள்.  அரியாசனம் கூட வைத்துக்கொள்ளவில்லை.  மகுடம் சூடவில்லை.  கவசம் அணியவில்லை.  அவர்கள் எளிமையைப் பற்றி மார்கோ போலோ சிலாகித்து எழுதியிருக்கிறார். அவர்கள் மக்கட்பணியே மகத்தான பணி என்று நாட்டைக் காப்பது பொறுப்பு வாய்ந்த செயல் எனக் கருதினார்கள்.  மழை பொய்த்தாலும் மன்னனே நிந்திக்கப்படுவான் என சேரன் செங்குட்டுவன் வஞ்சிக் காண்டத்தில் உரைப்பது சிலப்பதிகாரச் சிறப்பு.  அணைகள் கட்டப்படுவது ஒன்றும் அரிய செயல் அல்ல.

கிறிஸ்து பிறப்பதற்கு 2700 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் சட்-எல்-கட்பா என்கிற அணையைக் கட்டினர். அந்த அணை முதல் வெள்ளத்திலேயே உடைந்து விட்டதாம்.  அவர்கள் தொன்மையான இந்திய அணையைக் காண முகலாயப் பேரரசு இருந்தபோது தூதுக்குழு ஒன்றை அனுப்பினர்.  எகிப்தியக் குழுவினர் எழுப்பிய கேள்விக்கு தில்லி தர்பாரில் எந்தப் பதிலையும் அளிக்க முடியவில்லை.  இந்தியா முழுவதும் தேடிப் பார்த்ததும் அவர்கள் கண்டு அதிசயித்ததும் கல்லணையில்தான்.  

கங்கை கால்வாய்த் திட்டத்தை உருவாக்கிய பேயர்டு ஸ்மித் என்கிற ஆங்கிலேயர், கல்லணையைப் பார்வையிட்ட அந்த நொடியிலேயே, ‘மானுடத்தின் மிகப் பெரிய பொறியியல் சாதனை’ என்று மெய்மறந்து குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ‘கரிகாலன்’ என்கிற பெயரைக் கேட்ட உடனேயே நினைவுக்கு வருவது, ‘கல்லணையே’. தமிழக மக்கள் அணையைக் கட்டியவர்களை ஆண்டவனாகக் காண்பவர்கள்.  கரிகாலனானாலும் சரி, பென்னி குவிக் ஆனாலும் சரி.  ஆக்கப்பூர்வமான செயல்களையே மக்கள் போற்றுகிறார்கள் என்பதற்கு அத்தாட்சிகள்.

கரிகாலன் ஒன்றும் முழுநேரம் கல்லணையைக் கட்டிய பொதுப்பணித் துறைப் பொறியாளரோ, ஒப்பந்தக்காரரோ அல்லன்.  மன்னன்.  தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவன்.      

தமிழகம் யாராலும் துளைக்க முடியாத கோட்டையாக இருந்தது ஒரு காலம்.

அசோகருடைய பரந்த சாம்ராஜ்யத்தில் கூட தமிழகம் அடங்கவில்லை.  அவருடைய இரண்டாம் பாறை  சாசனத்தில், ‘சோழர்கள், பாண்டியர்கள் அரசை ஒட்டிய நம் ஆட்சிக்குட்பட்ட எல்லையில்’ என்று தெளிவாக மகத சாம்ராஜ்யத்தின் வரைபடம் குறிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெருமையுடன் திகழ்ந்த காலம் - சங்க காலமும், அதற்கு முந்தைய காலங்களும்.  வீரம், அறிவு, போர், மகிழ்ச்சி, இலக்கியம், எளிமை என்று தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த செறிவான காலம் அது.

கரிகாலன் என்று அழைக்கப்படும் கல்லணையைக் கட்டிய மன்னன் சங்க காலத்தில் வாழ்ந்தவன்.  ‘திருமாவளவன்’ ‘கரிகால் வளவன்’ என்கிற பெயர்களுக்கும் சொந்தக்காரன்.

பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை போன்ற சங்ககால இலக்கியங்களின் தலைமகன் பாத்திரம் அவனுக்கே. அவன் எத்தனாவது கரிகாலன் என்று நாம் இருக்கும் சிக்கல்களுக்கு நடுவே இன்னோர் இடியாப்பச் சிக்கலை இடைசெருகத் தேவையில்லை.

கரிகாலன், இளஞ்சேட் சென்னியின் மகன்.  தாய் கருவுற்றிருக்கும்போதே தந்தை இறந்ததால், ‘தாயம் எதிப் பிறந்த குழந்தை’ எனப் பெயர் பெற்றது.  வாரிசுப் போர் அப்போதும் நிகழ, குழந்தை பாதுகாப்பாக மறைத்து வளர்க்கப்பட்டது.  உறையூர் அப்போது  சோழர் தலைநகரம்.

உறையூர் கோழியூர் என்றும் அழைக்கப்படுவதற்கு வீரவரலாறு கர்ணவழிக் கதையாக உண்டு.  சோழ மன்னன் ஒருவன் பட்டத்து யானையின் மீது பவனி வந்தான்.  யானைக்கு திடீரென மதம் பிடித்தது.  யானைப் பாகன் செய்வதறியாது திகைத்து நின்றான்.  அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த கோழியொன்று, யானையின் தலை மீது அமர்ந்து அதன் மத்தகத்தின் மீது அலகால் கொத்தியது.  யானையின் மதம் மறைந்தது. கோழியும் விலகி மறைந்தது.

அவ்வளவு வீரம் செறிந்த மண் கோழியூர் என்கிற பெயரில் சோழப் பேரரசின் தலைநகரமானது.  மண்ணுக்கும், மன்னனுக்கும் மட்டுமல்ல; வீரத்திற்கும் தொடர்பு உண்டு. மண்ணும், மரபும், மக்களும், உணவும், சங்கிலித் தொடராகத் துணிவையும், எதிர்க்கும் ஆற்றலையும் நிர்ணயிக்கின்றன. வீரர்கள் சூழ வாழ்பவனும் வீரியமடைகிறான். கோழைகள் கும்பலில் மாட்டிக் கொள்பவன் வீரனாக இருந்தாலும் நாளடைவில் பயந்தாங்கொள்ளியாகி பந்தாடப்படுகிறான்.

மேலாண்மையில் ஒரு மொழியுண்டு... ‘நீங்கள் தொடர்ந்து புலியை பூனையைப் போலவே நடத்தினால் அது பூனையாகவே ஆகிவிடும்’ என்று.  அது மனிதர்களுக்கும் பொருந்தும்.

கரிகாலன் சின்னவயதிலேயே மன்னனாக ஆனதாகவும், பகைவர்கள் கடத்திச் சென்று சிறை வைத்ததாகவும் அந்தச் சிறையிலும் அவன் தொடர்ந்து கற்ற போர்ப் பயிற்சிகளை விடாது மேற்கொண்டதாகவும் தகவல்கள் உண்டு.  அவனை பகைவர்கள் சிறைப்பட்டிருந்த அறையை நெருப்பிட்டு அழிக்க நினைத்தனர்.  அங்கிருந்து தப்பினான் சிறுவன்.  அவன் சிங்கமா சிலிர்த்தெழுந்து தப்பியபோது கால்கள் கருகியதால், ‘கரிகாலன்’ என அழைக்கப்பட்டதாகவும், சிலர் யானையைப் போன்ற வலிமையான கால்களின் காரணமாக அவனைக் கரிகாலன் என்றதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இது குறித்த தகவல்களைப் பட்டினப்பாலை நூலில் படிக்கலாம்.

கரிகாலன் கால்கள் கறுப்பாக இருந்ததா என்பது பிரச்சினையல்ல; அவன் பெயர் அப்படி நிரந்தரமாகக் கறுப்பு வெள்ளையாக ஆனது என்பதே சிந்தனைக்குரியது.
பெரிய திட்டங்களை செயல்படுத்தப் பணம் வேண்டும். அதற்கு மக்களிடம் வருத்தாமல் வரி வசூலிக்க வேண்டும். புறநானூறு கூறுவது போல யானையை வயலை மேயவிட்டால் அது பயிர்களை மிதித்து பெருஞ்சேதமேற்படுத்தும்.  நாமாக அறுவடை செய்தால், அந்நிலத்தில் பத்து யானைகளுக்கு உணவு படைக்கலாம்.

ராஜ்யத்தின் எல்லைகளை விரிக்கும்போது பெறுகிற திரையும் ஒரு நாட்டை செழிப்பாக்கும். கரிகாலன் சோழ நாட்டுப் படைகளை அதிகரிக்கிறான் என்பது தெரிந்ததும் சேர மன்னன் சேரலாதனும், பதினோரு வேளிர் தலைவர்களும், பாண்டிய மன்னன் ஒருவனும் கரிகாலனை எதிர்ப்பதற்காக தஞ்சாவூருக்குக் கிழக்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெண்ணி என்கிற ஊரின் புறவெளியில் அவனை எதிர்கொண்டனர்.

இருதரப்பும் கடுமையாக மோதியது. கரிகாலன் வெற்றி பெற்றான். இது பற்றி அகநானூறு போன்ற தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. வெவ்வேறு இலக்கியங்கள் வெவ்வேறு தகவல்களை எதிரிகள் பற்றிக் குறிப்பிட்டாலும் வெண்ணிப்போர் நடந்ததும், கரிகாலன் வெற்றி பெற்றதும் நிலைநாட்டப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் வரலாற்றுக் குழு அறிக்கை ‘சங்க காலத்தில் வெண்ணியில் நடந்த போர் ஒன்றே ஒன்றுதான்.  அந்தப் போரில் ஈடுபட்டவன் கரிகால் பெருவளத்தான் என்று அழைக்கப்படுகிற கரிகாலன் ஒருவனே’ என டாக்டர் நிரஞ்சனா தேவி கூறுவது பொருத்தமாக உள்ளது.

கரிகாலனை எதிர்த்து மீண்டும் போர். சோழ நாட்டிற்குக் கப்பம் செலுத்தி வந்த ஒன்பது குறுநில மன்னர்களும் ஆந்திர நாட்டைச் சார்ந்தவர்கள்.  அவர்கள் வாகை என்கிற இடத்தில் முற்றுகையிட்டனர்.  கரிகாலன் ஆபத்துகளைத் தாயின் கருவில் இருக்கும்போதே சந்தித்தவன்.  எதிர்ப்புகளோடு வளர்பவர்களும், ஆபத்துகளோடு வாழ்பவர்களும் அசாத்திய துணிச்சலை வளர்த்துக் கொள்கிறார்கள்.  அவர்கள் நெருக்கடிகளை நேசிக்கிறார்கள்.  அப்படி சிறுவயதிலேயே சிறைப்பட்டு, தீயைத் தாண்டி, தீமையை எதிர்த்துப் பழக்கப்பட்ட கரிகாலன் பலம் வாய்ந்த அவனுடைய குதிரைப் படையுடன் வாகைப் புறந்தலையில் போரிட்டான்.  கம்பீரமாகவும், புயலைப் போல் விரைவாகவும் வருகிற அவனுடைய சேனையைக் கண்டதும் எதிரிகள் அச்சத்தில் பின்வாங்கி ஓடி ஒளிந்தனர்.

கரிகாலன் இமயப் படையெடுப்பு பற்றி குடவாயில் பாலசுப்ரமணியன், மு. இராகவ ஐயங்காரை நமக்கு மேற்கோள் காட்டுகிறார்.

சிக்கிம் மாநிலத்திலிருந்த திபெத் நாட்டின் சீனப் பகுதிக்குச் செல்கிற சூம்பிப் பள்ளத்தாக்கை ஒட்டி அமைந்துள்ள, ‘சோழக் கணவாய்’, ‘சோழ மலைத் தொடர்’ ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதியே கரிகாலன் இமயத்தில் புலிச் சின்னம் பொறித்த இடம்".

ஒரிஸாவிற்குச் சென்றபோது, புவனேஷ்வர் நகரில் குலோத்துங்கனால் கட்டப்பட்ட சிலவற்றையும், நிர்மாணித்த குளத்தையும் சோழர்கள் பெயரால்
சொல்லி வருவதையறிந்தேன்.  அப்போது கலிங்கத்துப் பரணி தகவல்கள் எவ்வளவு உண்மை என்பது அந்தச் சின்ன வயதில் எனக்குப் புரிந்தது.  அதைப் போலத்தான் இடங்களின் பெயர்களும் வரலாற்றை மெய்ப்பிக்கும் ஆதாரங்கள்.

தமிழகத்தில்  நாவாய் படையை வலிமையானதாக உருவாக்கியவனும் கரிகாலனே! அவன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் வர்த்தக மையமாக விளங்குவதற்கு அவனுடைய நாவாய்ப்படையும் காரணம். கடற் கொள்ளையர்கள் வணிகக் கப்பல்களைச் சூறையாடா வண்ணம் பாதுகாப்பு அளிக்கிற இடத்தில்தான் வர்த்தகம் பெருகும். ‘நனியிரு முந்நீர் நாவாய் ஓட்டி’ என்கிற புறநானூற்றுப் பாடல் அவனுடைய கப்பற்படையை பற்றிப் பேசுகிறது.  தமிழில் கடலுக்கு இருக்கும் ஏகப்பட்ட பெயர்கள் எவ்வளவு தூரம் தமிழர்கள் கடலோடு ஒன்றி வாழ்வை நடத்தினார்கள் எனத் தெளிவுபடுத்துகிறது.

கடற்படையை வலிமையாக்கி கரிகாலன் கடல் கடந்து இலங்கையின் மீது போரிட்டு வென்றான்.  அவனுடைய படைத் தளபதியை இலங்கையில் ஆட்சி புரிய அமர்த்தினான். பன்னிரண்டாயிரம்  சிங்கள வீரர்களைக் கைதியாக சோழநாட்டுக்கு அழைத்து வந்தான்.  அவர்களையே கல்லணை கட்டும் பணியில் அமர்த்தினான். இலங்கையின் வரலாற்றைக் கூறும் ‘மகாவம்சம்’ என்கிற நூலில் இது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

கடுமையான பாதுகாப்புடன் இயங்கி வந்த சுங்கக் சாவடிக்கு அளந்து கணக்கிட முடியாத அளவு கப்பலிலிருந்து சரக்குகள் கொண்டுவரப்பட்டன.  சுங்கச் சாவடியில் சரக்குகள் மீது புலிச்சின்ன முத்திரை பொறித்து அனுப்பப்பட்டது.  இத்தகவல்களை பட்டினப்பாலையில் பார்க்கும்போது எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் கரிகாலனுடைய ஆட்சி நடந்தது என்பது புரிகிறது; பெருமிதம் ஏற்படுகிறது.

கரிகாலன் அவைக்கு வழக்கு கொண்டு வந்த இருவர் அவனுடைய தோற்றத்தைப் பார்த்துத் தயங்கியபோது, ‘பெரியவர் ஒருவரை அனுப்பி வைப்பதாகச் சொல்லி உள்ளே சென்ற கரிகாலன் அவனே முதியவர் தோற்றத்துடன் வந்து அவர்களுடைய வழக்கை விசாரித்து இருவருக்கும் திருப்திகரமாக தீர்ப்பு வழங்கியதையும், பின்னர் வேடத்தைக் கலைத்து உண்மை வடிவத்தை வெளிப்படுத்தியதையும் ‘பழமொழி’ ஒன்று பகர்கிறது.  அது கரிகாலனுடைய உளவியல் பார்வையையும், நுண்ணறிவையும் வெளிப்படுத்தும் நிகழ்வு.

கரிகாலன் பல்வேறு ஆட்சித் திறன்களைப் பெற்றிருந்ததாலும், அதிக நிதியாதாரத்தைப் பெறும் வழிகளைக் கையாண்டிருந்ததாலும் அவனால், ‘கல்லணை’ என்கிற ஒன்றை கனவு காண முடிந்தது. வேளாண்மையே முக்கிய தொழிலாக இருந்தபோது, பயிர்களின் மீது செலுத்தும் கவனமும் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்கிற கட்டத்தில் காவிரி நீர் சிந்தாமல் சிதறாமல் பயன்படும் வழியை அவன் காட்சிப்படுத்தினான்.   அதுவே இன்றும் அவன் பேர் சொல்கிறது.  கிருஷ்ணராஜ சாகரோ, மேட்டூர் அணையோ கட்டப்படாத காலம்.

பொறியியல் அறிஞர் ஆர்தர் காட்டன் அச்சூழலில் கல்லணையின் பங்கு பற்றி யோசித்தார். கரை புரளும் காவிரி, திருச்சி முக்கொம்புக்கு அருகே காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிவதைப் பார்த்து வியப்புற்றார்.  கொள்ளிடம் ஓடும் பாதை, காவிரியை விட ஆறடி தாழ்வாக இயற்கையிலேயே அமைந்துள்ளதைப் புரிந்து கொண்டார்.  இதன் மூலம் கல்லணை பிறப்பின் ரகசியத்தை அறிந்தார்; அதிசயித்தார்.

இயற்கை அமைத்துக் கொடுத்த வெள்ள வடிகால்தான் கொள்ளிடம்.  காவிரியின் நீர் அனைத்தும் கொள்ளிடம் வழியாகப் பள்ளத்தில் ஓடி கடலில் விழுந்து விரயமானது.  அத்தனை நீரையும் பயன்படுத்தி சோழநாட்டை வளப்படுத்தும் அரிய யோசனையே இந்த கல்லணை தோன்றக் காரணமானது.  

ஆர்தர் காட்டன் கல்லணையின் அடித்தளம் பற்றி அறிந்துகொள்ளும் தணியாத ஆர்வம் கொண்டார்.  ஒரு கோடையில், காவிரி வறண்டிருந்தபோது, அணையின் அடிப்பகுதியைப் பிரித்துப் பார்த்தார். பன்னிரண்டு அடி ஆழம் தோண்டப்பட்டது. கற்கள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டு இருப்பதைக் கண்டார். அவற்றை இணைக்க எந்தக் கலவையும் பயன்படுத்தப்படவில்லை.  அடித்தளம் பெருங்கற்களால் மட்டும் அமைந்துள்ளது என அறிந்தார்.  ஓடும் நீரில் அணையைக் கட்டுவதற்கான இந்தத் தொழில்நுட்பம் உலகில் வேறெங்கும் இருந்திருக்க முடியாது என நம்பினார்.

அவர் ஆழ யோசித்து அந்த நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.

ஓடும்  நீரில் மிகுந்த எடையுள்ள கல்லைப் போட வேண்டும்.  அந்தக் கல் நீரால் புரட்ட முடியாமல், மண்ணுக்குள் அமிழ்ந்து விடும்.  கல்லின் எடை அதிகமாக இருப்பதன் காரணமாக, மணலுக்குள் சென்று,  அடி  ஆழத்தில் அது அணையின் அடித்தளமாகவே அமைந்து விடுகிறது.  இவ்வாறு சில ஆண்டுகள் கற்களைப் போட்டுக் கட்டியதுதான் கல்லணை என்று அவர் புரிந்து கொண்டார்.  ஆழங்காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்கிற தொழில்நுட்பத்தைக் கல்லணை கட்டிய கரிகால் வளவனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.  1874-ஆம் ஆண்டு, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தௌலீஸ்வரம் அணையை கோதாவரி நதியில் அவரே கட்டினார்.  இன்றும் அது அந்த சமவெளிப் பகுதியில் மரகதப் போர்வையைப் பருவம் தவறாமல் பரப்பிவருகிறது.

கல்லணையின் நீளம் 1,080 அடி அகலம் :  40 முதல் 60 அடி. பாம்பு போல வளைந்து நெளிந்து செல்கிறது.

சுற்றுலாத் துறையில் இருக்கும்போது கல்லணையைச் சுற்றிப் பார்க்க நேரிட்டது.  சுற்றுலா என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்க்க வேண்டும்.  வயோதிகர்களுக்கு ஆலயம், வாலிபர்களுக்குப் பூங்கா, இளைஞர்களுக்கு சாகசம், சிறுவர்களுக்கு உயிரியல், அறிஞர்களுக்கு சரித்திரம் என அனைத்தையும் பரிமாறக்கூடிய இடமே எப்போதும் மக்களை ஈர்க்கும்.

சுற்றுலாவைப் பெருக்க மூன்று தங்க விதிகள் இருக்கின்றன. முதலாவது, நிறைய பயணிகளை ஈர்க்க வேண்டும். அடுத்ததாக, அவர்கள் அதிக நாட்கள் தங்கும்படி செய்ய வேண்டும்.  மூன்றாவதாக அவர்கள் நிறைய பணம் செலவு செய்யும்படி வசதிகள் வேண்டும்.  அப்போதுதான், நம் பொருளாதார நிலை மேற்படும். சுற்றுலாவால் உருவாகும் மனித நாட்கள் அதிகம். படித்தவர் முதல் பாமரர் வரை அனைவருக்கும் பணி வழங்கி வயிறு நிறைக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது சுற்றுலா மட்டுமே.

கல்லணையில், வருபவர்கள் அணையைப் பார்த்து அதற்குப் பிறகு என்ன செய்வது என்று சிந்திக்காமல் இருப்பதை நான் பார்த்தேன்.  பின்னர் அரசு மூலம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி அங்கே அழகான பூங்கா ஒன்று பயணிகள் இளைப்பாறும் வசதிகளுடன் அமைக்கப்பட்டது.   

காவிரி தொடங்கும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை அதன் ஓட்டம், சிறப்பு, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை ஒளி-ஒலிக் காட்சியாக அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினோம்.  அப்போது ‘நடந்தாய் வாழி காவிரி’ என்று சிட்டி- தி. ஜானகிராமன் எழுதிய புத்தகத்தை ஒரு தமிழ்ப் பேராசிரியர் எனக்கு அனுப்பி வைத்தார். காவிரியுடன் பயணம் செய்த சுவையான அனுபவங்களையும், அங்குள்ள மக்களின் வாழ்வையும் சித்தரிக்கும் அற்புதமான பயண நூல் அது.

காவிரி பற்றிய காட்சிக் கூடத்தை அப்புத்தகத்தைத் தழுவி அமைப்பது என முடிவு செய்து அதற்காக ஐந்து கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை வடிவமைத்து முன்மொழிவுகளை அனுப்பினோம்.  இப்போது தமிழக அரசு கரிகாலனுக்கு அங்கு கட்டிய மணி மண்டபம் கூடுதல் பயண ஈர்ப்பு மையம்.

கரிகாலனுடைய தலைமைப் பண்பு இன்று நமக்கெல்லாம் ஒரு மிகப் பெரிய வழிகாட்டி.  பரபரப்புடன் ஆட்சி செய்த பல மன்னர்கள் இந்தியாவில் இருந்தார்கள்.  ஆடம்பரமாகவும், டாம்பீகமாகவும் இருந்த அவர்கள் இன்றும் அவர்களுடைய அட்டகாசங்களுக்காகவும், அத்துமீறல்களுக்காகவும்  விமர்சிக்கப்படுகிறார்கள்.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கரிகாலன் அவனைப் பற்றி புகழ்ந்து எங்கும் கல்வெட்டுகளை எழுதவில்லை.  அவனைப் பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு மட்டும் கல்மண்டபம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தான்.  மாறவர்ம சுந்தரபாண்டியன் தஞ்சையையும், சோழ அரசையும் சூறையாடியபோது, ‘கவிஞருக்குச் செய்த மரியாதை’ என்பதால் அந்தக் கல்மண்டபத்தில் ஒரு கல்லைக் கூட அகற்றவில்லை.  தம்மைத் தாமே புகழ்ந்து எழுதிக் கொண்ட கல்வெட்டுகள் மறைந்து விடும்.

ஆனால் கல்லணை எப்போதும் நிமிர்ந்து நிற்கும். தொடர்ந்து அதை யார் புதுப்பித்தாலும், வலுப்படுத்தினாலும் அதைத் தொடங்கிய கரிகாலன் பெயரே எப்போதும் நிலைத்து நிற்கும்.

செயல்களே சொற்களைவிட முக்கியமானவை.  நாம் எந்த நிறுவனத்தில் எவ்வளவு காலம் பணியாற்றினாலும், அங்கு ஏதேனும் ஒரு நினைத்து மகிழத்தக்க, அடுத்து வருபவர்களும் போற்றத்தக்க மாற்றத்தைச் செய்ய வேண்டும்.  நம் பெயர் மறையலாம்.  ஆனால் நாம் கொண்டுவருகிற மாற்றம், இனிய முன்னேற்றம் எப்போதும் பயனுடையதாக இருக்கும். அது பலருடைய வாழ்வை மேன்மைப் படுத்துவதாக இருக்கும்.

போர், எதிரிகள், இலக்கியம், நீதி பரிபாலனம் என அனைத்திலும் அக்கறை செலுத்திய பின்னரும், கரிகாலன் நிரந்தரமான ஒன்றை நிறுவ நினைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் கோப்புகள் தேங்கிக்கிடக்க விளம்பர வெளிச்சம் விழுகிற நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.  ஆனால் அன்றாடப் பணிகளைத் தாண்டி யார் புதுமையை விளைவிக்கிறார்களோ அவர்களே அந்த நிறுவனத்தை விட்டுச்சென்ற பிறகு போற்றப் படுகிறார்கள்.

கரிகாலன் என்பது பெயர் அல்ல; ஆளுமை.  ஆட்சியாளன் அல்ல; குறியீடு.  நாம் இப்போது ஆற்றும் பணியில் நமக்குப் பின்னும் தொடர்கிற எந்த ஆக்கப்பணியைச் செய்யப் போகிறோம் என்பதையே அந்த ஆளுமை சிந்திக்கத் தூண்டுகிறது.

(தலைமை  கொள்வோம்)

ஒரு சிறுவன் குருகுலத்தில் கல்வி பயிலச் சென்றான். அப்போது கைரேகையும், சாமுத்ரிகா லட்சணமும் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

அவனுக்கு அனுமதியளிக்கும் முன் ஆசான் அச்சிறுவனின் உள்ளங்கையைக் காண்பிக்கச் சொன்னார்.  

நன்றாகப் பரிசோதித்தார் ஆசான்.

‘உன் உள்ளங்கையில் கல்வி ரேகை இல்லை.  எனவே உனக்குப் படிப்பு வராது.’

‘உள்ளங்கையில் எந்த இடத்தில் படிப்பு ரேகை ஓட வேண்டும்?’

ஆசான் அவனுடைய உள்ளங்கையில் படிப்பு ரேகை எங்கேயிருந்திருக்க வேண்டும் என்று வரைந்து காண்பித்தார்.   

ஒரு கக்தியை எடுத்து அந்த இடத்தில் ஆழமாகக் கீறிய அந்தச் சிறுவன் ரத்தம் வழியும் உள்ளங்கையோடு,

‘இப்போது எனக்கு அந்தக் கோடு உள்ளது’ கல்வியை ஆரம்பியுங்கள்’ என்றான்.

அந்தச் சிறுவனின் பெயர் சாணக்கியன்.

No comments:

Post a Comment