Sunday, February 9, 2014

தமிழும் திரவிட மொழிகளும்-பேராசிரியர் இரா. மதிவாணன்

தமிழும் திரவிட மொழிகளும்-பேராசிரியர் இரா. மதிவாணன் 

கன்னடம் 

தென்னக நான்மொழிகளுள் பழங்கன்னடம் பழந்தமிழுக்கும் பழகு தமிழுக்கும் ஒரு பொற்பாலமாக விளங்குகிறது. பழங்கன்னட இலக்கியத் தொடங்கள் தமிழினின்றும் வேறுபடுத்தியறிய முடியாதவை என்பதற்கு 'வட்டாராதனை' என்னும் பழங்கன்னட நூலிலிருந்து பின்வரும் வரிகளைச் சான்றாகக் காட்டலாம். 

கன்னடம்-மர்தள கஹலாதி த்வனிகளும் எனித்து எனித்து ஆ புலி கேள்கும் அனித்து அனித்து அஞ்சி குகையொள் அடங்கி இர்தத்து.

தமிழ்-மத்தளம் காகளம் முதலியவற்றின் ஓசைகளை எனைத்து எனைத்து அந்தப் புலி கேட்குமோ அனைத்து அனைத்து அஞ்சிக் குகையுள் அடங்கி இருந்தது.

மைசூர் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் தம் நூலில், தக்காணப்பகுதி முழுவதிலும் வாழ்ந்த பழங்குடிகள் தமிழர்களே என்றும் கன்னடம் கருநாடகம் என்று பெயரிட்டவர்களும் தமிழர்களே என்றும் கூறுகிறார். (எம்.எச். கிருட்டிணன் "கர்நாடக பூர்வ சரித்ரெ")

"கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுற சையத்
துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும்"

என்றார் அகத்தியனார் என்று நன்னூல் 161ஆம் நூற்பாவுரையில் மயிலைநாதர் குறிப்பிடுகிறார்.

கருநாடு-கரிசல்மண் நிலம் எனப் பொருள் படுவதாகப் பலரும் கருதுகின்றனர். பழந்தமிழ் நிலப்பாகுபாட்டில் குறிஞ்சி முதலாகிய நிலவகையாலல்லது மண்வகையில் பாகுபாடின்மையின் கல்+அகம்+-கல்நாடகம்-கன்னடம் எனத் திரிந்தது என்பதே முற்றிலும் உண்மை. இன்றும், மலையாளத்தார் கன்னடத்தை, கன்னாடகம் என்று அழைக்கின்றனர்.

'பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே', 'கல்லிறந்தோரே', 'கல்நாடன்' என்னுந் தொடர்களில் 'கல்' மலையும் குன்றும் சார்ந்த நிலப்பகுதியைக் குறித்து வருதலைக் காணலாம்.

கல்நாடு-குன்றுகள் நிறைந்த நாடு. ஆந்திரத்திலுள்ள ராயலžமைப் பகுதியும் கல்நாடே. அறைராய் (தெ.)-கல். கன்னட இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் கருநாடர் என்னும் சொல் பயிலவில்லை. வீரசோழியத்தில் 'கன்னாடர்' என்றும், பிராகிருதத்தில் 'கன்னாட' என்றும், மராத்தியில் 'கானட' என்றும் கன்னடம் குறிப்பிடப்படுகிறது.

கருநாடகம் என்னும் சொல் அக்காலத்தில் மராட்டிய மாநிலத்தைக் குறித்தது. கருநாடு என்றால் பெரியநாடு என்று பொருள். கன்னடத்தில் 'கருமாட' என்னும் சொல் பெரிய மாளிகையைக் குறிக்கிறது. 'தராதந்திரம்' என்னும் மராத்திய நூல் மகாராட்டிரத்திற்குக் 'கர்னாடக்' என்னும் மற்றொரு பெயரிருப்பதாகக் கூறுகிறது. கலிங்கத்துப்பரணியில் கருநாடர், வடுகுந் தமிழும் குழறிப் பேசியதாகவுள்ளதேயன்றிக் கன்னடம் பேசியதாகக் கூறப்படவில்லை. கன்னட மன்னன் புலிகேசி மராட்டியப் பகுதிவரை ஆண்டதால் தன்னை மகாராட்டிர அரசன் என அழைத்துக்கொள்கிறான். எனவே, மராட்டிய மாநிலத்திற்கு நெடுங்கால முதலே 'கருநாடு' என்று பெயரிருந்தது என்பதும், இத்தமிழ்ச் சொல்லே பெரிய நாடு என்னும் பொருளில் வட மொழியாளரால் 'மகாராட்டிரம்' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. என்பதும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது.

சிலப்பதிகாரக் கதை கன்னட நாட்டுப்புறங்களில் சந்திராவின் கதையாக வழங்கிவருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்ப் பண்பாட்டுக்கே உரிய அகநானூற்றுத் திருமணமுறை இன்றளவும் கன்னட, தெலுங்கு நாட்டுப்புறங்களில் உயிரோடு நிலவி வருவது பெரிதும் உவப்புக்கும் வியப்புக்கும் உரியதாக இருக்கிறது. மணமக்களை முதுசெம் பெண்டிர் முறையாக வாழ்த்தி, புதுக்குடங்களில் நறுநீர் கொணர்ந்து நீராட்டும் திருமணமுறை அகநானூற்றில் அழகுற விளக்கப்படுகிறது. கன்னட மாநிலத்தையொட்டிய தருமபுரி எல்லைப் பகுதிகளில்கூடக் கன்னடப் பெருங்கடைப் (தமிழ் மூவேர்ந்தர் காலத்தில் அரண்மணை, மேலதிகாரிகளாக இருந்த 'பெருங்கடை' என்பாரின் வழிவந்து இன்று 'பெக்கடெ' மற்றும் எக்கடெ, எக்கடி என அழைக்கப்படுவர்) பிரிவினரின் திருமணத்தில் இன்றும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரிலுள்ள உறவினர் அனைவரும் ஒவ்வொரு குடம் நறுநீர் கொணர்ந்து மணமக்களை நீராட்டி வாழ்த்துகின்றனர். மகளிரே பாடும் திருமண வாழ்த்துப் பாடல்களில் மூன்று மணிநேரம் பாடப்படுகின்றன. (கண்ணடப் பழங்குடிகளின் அகநானூற்றுத் திருமணம்-தென்மொழி-(ஆகத்து-1977) அவற்றுள் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை நெறிகளும் நகையாட்டுகளும் இழையோடி மணமன்றத்திற்குப் பொலிவூட்டுகின்றன. தெலுங்கு நாட்டுப்புறங்களிலும் ஒரிசாவிலுள்ள தோபி வகுப்பார் திருமணங்களிலும் இவ்வழக்கம் இன்றும் உள்ளது.

முழுநிலா நாட்களில் விழாக் கொண்டாடுதல், இன்னியம் அல்லது பறை முழங்க நள்ளிரவில் முதன்முதல் அறுவடை விழாச் செய்தல் (குடகு நாட்டில் இரவரிவார்-புலமை-ஏப்ரல்-சூன்1975) ஆகிய பழந்தமிழர் வழக்கங்கள் இன்றும் குடகு மக்களிடை முழுமையாகவும் தஞ்சைத் தாழ்த்தப்பட்டோரிடை ஓரளவும் உள்ளன. இளங்கோவடிகள் மணப்பள்ளியை (மணவரைக்கட்டில்) 'மங்கல நல்லமளி' என்கிறார். குடகு மக்கள் திருமணத்தைக் 'கன்னி மங்கல' என்றும், காது குத்தும் விழாவைக் 'கெமிகுத்தி மங்கல' என்றும், புலியைக் கொன்றவனைப் பாராட்டும் விழாவை 'நரி மங்கல' என்றும், பத்துப்பிள்ளை பெற்றவளைப் பாராட்டும் விழாவைப் 'பய்த்தாண்டெக்கு அளெப்ப மாங்கல' என்றும் வழங்குகின்றனர்.

தமிழகத்துப் பெரிய புராணம் கன்னடத்துச் சிவனடியார்க்குத் தெய்வமணங் கமழும் பெருநூலாதலால், அது அக்காலத்திலேயே கன்னடப் புலவர்களால் பல நூல்களாகக் கன்னடத்தில் பாடப்பட்டுள்ளது. 63 சிவனடியார்களைப்பற்றிக் கூறும் 'சிவகணத ரகளெகள்', நம்பி ஆரூரரைப்பற்றி மட்டும் கூறும். 'நம்பியண்ணன ரகளெ', சம்பந்தம் வரலாறு கூறும் 'சத்தியேந்திர சோழ சரிதெ', சேரமான் பெருமாள் சரிதம் ஆகியவை குறிப்பிடத்தக்கன. சேக்கிழார் 'பிள்ளை நயினார்' எனப்படுகிறார். தமிழகத்துச் சிவனடியார் அறுபத்து மூவரும் 'புராதனர்' என்றும் கன்னட நாட்டுச் சிவனடியார்கள் 'நூதனர்' என்றும் அழைக்கப்பட்டனர்.

கன்னடட இலக்கண நூலான சப்தமனு தருப்பணம்' 'ழகர' எதுகை கொண்ட 181 உரிச்சொற்களின் பொருள் கூறிப் பழங்கன்னடத்தின் தனித்தன்மையை நிறுவ முயல்கிறது

No comments:

Post a Comment