Thursday, February 20, 2014

இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு...

எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது என்று பெருமை தொனிக்க, வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான் தெருவோரம் அமர்ந்திருந்த ஒருவன். பலர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கடந்து போவார்கள். சிலர் அதைக் கேட்டு இதழ்களில் இகழ்ச்சி நகை நெளிந்தோடப் பார்த்துச் செல்வார்கள். அவர்கள் ஏன் அப்படி ஏளனம் தொனிக்கப் பார்க்கிறார்கள் என்பது அந்த ஊருக்கு வந்த ஒருவனுக்குப் புரியாமலே இருந்தது. யானை வைத்திருந்த தாத்தாவின் பேரனுடன் அவன் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். பேச்சுவாக்கில் ‘சரி, உங்கள் தாத்தாவிற்கு யானை இருந்தது என்றால் நீங்கள் பெரும் செல்வந்தராக இருந்திருக்க வேண்டும், ஆனால் ஏன் இப்படித் தெருவில் வந்தமர்ந்திருக்கிறீர்கள்’ என்று கேட்டான் புதியவன். ‘வேறெதற்கு? பிச்சை கேட்கத்தான்’ என்றான் பேரன்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை என்ற மகாகவியின் கவிதைகளை மேடைக்கு மேடை காது கொள்ளாத அளவு திரும்பத் திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகளில் சில அதற்கு அடுத்து வரும் வரிகளை -பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு- என்ற வரிகளை சௌகரியமாக மறந்தோ, மறைத்தோ விடுவதுண்டு.

ஒருவரது பெருமை அவரது கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ இல்லை, நிகழ்கால நிஜங்களில் இருக்கிறது என்பதை மகாகவி தகப்பன், மகனுக்குச் சொல்வதைப் போல் அக்கறையும் அன்பும் ததும்பச் சொல்கிறார். ஆனால் மனதுக்குள் வாங்கி, மூளைக்குள் பதிந்து கொண்டவர்கள் மிகக்குறைவு, ஆளும் தரப்பில் மிகச் சொற்பம்.

அன்றைய இந்தியா ஞானத்திலே சிறந்த நாடு, நாளை இந்தியா வல்லரசு ஆகப் போகிறது என்றெல்லாம் நாம் உரத்து முழங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நம்மைப் பற்றி உலகம் என்ன சொல்கிறது?

உலகிலேயே எழுத்தறிவு இல்லாத மக்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா. உலகிலுள்ள எழுத்தறிவற்ற மக்களில் மூன்றிலொரு பங்கு மக்களுக்கு மேல் (37 சதவீதம்) இந்தியாவில் வசிக்கிறார்கள் என்கிறது சென்ற செவ்வாயன்று வெளியிடப்பட்ட யுனஸ்கோவின் அறிக்கை. தமிழ்நாட்டில் மூன்றாம் வகுப்பில் உள்ள குழந்தைகளில் 70 சதவீதம் பேரால் தமிழில் எழுதப்பட்ட ஒரு பத்தியைக்கூட முழுமையாகப் படிக்க முடியவில்லை, 80 சதவீதக் குழந்தைகளால் இரண்டிலக்கக் கணக்கைப் போடமுடியவில்லை என்கிறது அண்மையில் வெளியான அசர் அறிக்கை.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், உலகிலேயே எடை குறைவான குழந்தைகள் அதிகம் உள்ள நாடு தைமூர் என்ற சிறிய நாடு (45.3%). அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது இந்தியா(40.2%).

அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட ஒரு விளம்பரம், சராசரி இந்தியனின் ஆயுள்காலம் கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து வருடங்கள் அதிகரித்திருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால் உலகளாவிய அளவில், சராசரி மனிதனின் ஆயுள்காலம் பற்றிய புள்ளிவிவரப்படி இந்தியா 161-ஆவது இடத்தில்தான் இருக்கிறது.

எழுத்தறிவு, தரமான கல்வி, ஆரோக்கியமான குழந்தைகள், ஆயுள் நிறைந்த குடிமக்கள் இவையெல்லாம் எட்ட முடியாத இலக்குகள் அல்ல. அதற்குத் தெளிவான திட்டங்களும், முழுமனதோடு மேற்கொள்ளப்படும் முயற்சிகளும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட களப்பணியாளர்களும் வேண்டும். 120 கோடி மக்கள் ஒன்றிணைந்து இழுத்தால் உருளாத தேர் ஏதுவுமில்லை.

ஆனால், வெல்லப்பட வேண்டிய தீமைகள் இவை என அடையாளம் காட்டி, அவற்றை வீழ்த்துவதற்கான உணர்வை ஊட்டி, எழுச்சியை ஏற்படுத்துவது அரசின், அரசை வழி நடத்தும் தலைமையின் கடமை. பொறுப்பு. அதைவிடுத்து வல்லரசு என்ற வண்ணக் குமிழிகளைப் பறக்க விடுவதிலும் , ஒரு பொற்காலத்தில் வாழ்கிறோம் என்ற மாய பிம்பங்களை தூக்கி நிறுத்துவதும் பொருளற்றது. போலியானது.

காற்றைத் தின்று பசியை வென்றவர் எவரும் இல்லை.

புதிய தலைமுறை.....

No comments:

Post a Comment