ஆயிரக்கணக்கில் தமிழ்பேசும் மக்களை இலங்கை இனவாத அரசு படுகொலை செய்ததைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் இளையோர் பலர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைய முன்வந்துள்ளனர். இந்த போராட்ட உணர்வை தமக்கு சாதகமாகப் பாவித்து பலம்பெற முயற்சிக்கின்றன இந்திய-இலங்கை வலது சாரிக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் பல. இது மீண்டும் ஒடுக்குமுறைக்கு எதிரான பலம்பொருந்திய சக்தி உருவாகுவதைத் தடுக்கும் முயற்சி. ஆனால் இதை நாம் ஒரு வசனத்திற் சொல்லி இளையோருக்குப் புரியவைத்துவிட முடியாது. அதிகாரம் சார்ந்து இயங்குபவர்களை சரியானபடி எதிர்கொள்ள நாம் பல்வேறு விவாதங்களை பொதுத் தளத்தில் நிகழ்த்தி போராட முன்வருபவர்களின் அறிதலை-தேடலை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது.
இருப்பினும் நானறிந்த மொழிகளில் இலங்கை போராட்ட வரலாறு பற்றி உருப்படியான எந்த புத்தகங்களும் இன்றுவரை வெளிவரவில்லை. நானறிந்த மொழிகளில் வெளிவந்த அனைத்து புத்தகங்களையும் படித்த தெனாவெட்டில் நாமதை சொல்லவில்லை. படிக்கவேண்டியது இன்னும் ஏராளம் உண்டு. இருப்பினும் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இலங்கை போராட்ட வரலாற்றுடன் ஏதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்ட முறையிலும் - அதிகாரம் சார்ந்தும் ஒடுக்கப்படுபவர்கள் சார்ந்தும் இயங்கும் பலருடன் நேரடியாக எதிர்த்து உரையாடிய அனுபவத்தாலும் - வருசக்கணக்கில் தொடர்ந்து படித்தும் ஆய்வுகள் செய்துவருவதாலும் - நானறிந்த அளவில் இலங்கை போராட்ட வரலாறு இதுவரை யாராலும் எழுதப்படவில்லை என்பதை துணிந்து கூறமுடியும். இதை எழுதவேண்டிய அத்தியாவசிய தேவையான இக்காலகட்டத்தை கருத்தில் கொண்டு இதற்கான முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டியதாயிற்று.
இருப்பினும் சுருக்கம் கருதி இங்குகூட நாம் முழுமையான வரலாற்றை எழுதவில்லை. விவாதங்கள் உரையாடல்களைப் பொருத்து பல பகுதிகளை பின்பு நாம் சேர்த்துக்கொள்ளலாம். தவிர இந்த வரலாற்றை எழுத வேறு பலரும் முன்வருவர் என்றும் ஒரு நப்பாசை நமக்குண்டு! இன்றய காலத்தேவையை ஒட்டிய முக்கிய விசயங்களை மட்டுமே நாம் இங்கு மேலோட்டமாக தொட்டுச் செல்கிறோம். கேள்விகள் கேட்டபடி படியுங்கள்.
வரலாறு பற்றி ஒரு குறிப்பு
மதம்சார் பழைய ஆவனங்கள் மற்றும மன்னராட்சிகால எச்சங்களைக் கொண்டு பழைய வரலாற்றை கட்டமைப்பது இதுவரை உலகெங்கும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இதன் பற்றாக்குறையை நாம் இன்று தெரிந்து கொண்டபோதும்கூட பழையன கழிதல் செய்து சிந்திக்க முடியாதவர்களாகவே இருக்கிறோம். உதாரணமாக இலங்கையில் இன்றும் புத்தமதம் சார் பழைய ஆவணங்கள் மற்றும் அதுசார் வரலாற்றைக் கொண்டு சிங்கள இனவெறி கட்டமைக்கப்படுவதை நாமறிவோம். துட்டகைமுனுவுக்குப் பின் நாட்டை ஒன்னறிணைத்த மாபெரும் மன்னராக சித்தரிக்கப்படுகிறார் தற்போதய ஜனாதிபதி. இதை சரியானபடி எதிர்கொள்ள வக்கற்ற தமிழ் இனவாதிகளும் காலாவதியாகிப்போன பழங்கதை பேசி இனவாத தேசியத்தை எதிர்ப்பாக காட்ட முற்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகளால் ஒடுக்கப்படும் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் தாம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மட்டுமே இது உதவி வருகிறது.
காலனித்துவ காலத்துக்கு முன்பு மன்னர்களுக்காக அடிபட்டு செத்த தமிழ் சிங்கள முஸ்லிம் மற்றும் பல்வேறு இன மொழி அடையாளங்களைக் கொண்ட மக்களுக்கு அந்த அடையாளங்கள் சார்ந்த தேசிய எல்லைகள் இருக்கவில்லை. இவர்களை ஆட்சி செய்த மன்னர்கள் தொடர்ந்து இவர்கள் மத்தியில் இருந்து வந்தவர்கள் இல்லை. நிலத்துக்காக அடிபட்ட இராஜ குடும்பங்கள் நிலப்பிரதேசத்தை கைப்பற்றியபோது இந்நிலத்தில் வாழ்ந்த மக்களையும் ‘சொத்தாகக்’ கைப்பற்றினர். ‘தமிழர்’ ‘சிங்களவர்’ ‘முகமதியர்’ என்று பல்வேறு இன அடையாளங்களைக் கொண்ட மன்னர்களின் ஆட்சியின் கீழ் பல்வேறு இன அடையாளங்களைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தது சகஜமான ஒரு விடயமே. இராஜ குடும்பங்களுக்கிடையில் இன அடையாளத்தை தாண்டிய திருமண உறவுகள் இருந்ததும் அறிவோம். நிலத்தை ஆட்சி செய்தல் கருதி மன்னர்கள் தமக்குள் உறவுகளையும் பகைகளையும் வைத்துக்கொண்ட போதும் மக்களை தமது கட்டுப்பாட்டில் வைக்க - தமக்காக யுத்தத்தில் ஈடுபட வைக்க இவர்களுக்கு கட்டுப்படுத்தும் அடையாளம் தேவைப்பட்டது. மன்னராட்சிக் காலத்தில் இதற்கு உதவிய முதன்மை அடையாளம் மத அடையாளமே. மதத்தை வைத்து தேச எல்லைகள் தீர்மானிக்கப்பட்டன.
பழைய இலக்கியங்களில் வரும் தமிழ் சிங்களம் என்ற அடையாளக் குறிகள் பெரும்பாலும் இராஜ குடும்பத்தவர்களையும் அவர்சார் மதம் மொழி பற்றியும் குறிப்பவையே என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். பெரும்பான்மை பழைய இலக்கியங்கள் சாதாரன மக்கள் பற்றி குறிப்பாக ஒடுக்கப்படும் மக்கள் பற்றி பேசியது கிடையாது. மன்னர்கள் மத்தியில் இருந்ததுபோல் பல்வேறு அடையாளங்களை கொண்ட சாதாரன மக்கள் மத்தியில் பெரும் பகைமை இருந்ததில்லை. எவ்வாறு வெவ்வேறு அடையாளங்களைச் சேர்ந்த மக்கள் நெருங்கிய உறவுகள் வைத்திருந்தனர் என்பதற்கு இன்று நாம் பார்க்கும் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையிலான நெருங்கிய ஒற்றுமை சான்று. மக்கள் மத்தியில் பகைமை ஏற்படுதலை மன்னர்கள் தீர்மானித்தனரே அன்றி இது மக்களின் தேர்வு அல்ல. பிற்காலத்தில் இன அடையாளம் வலுப்பெற்றது ஆளும் வர்க்கத்தின் அதிகார மையக்குவியலுடன் சம்மந்தப்பட்டது.
இலங்கை வரலாறு ஒருபோதும் ‘ஒற்றைத் தீவு’ வரலாறாக இருந்ததில்லை. பலர் இன்று பசப்புவதுபோல் காலம் காலமாக அங்கு மூன்று அரசுகள் நிலவி வரவில்லை. மூன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு அதிகார மையங்கள் அடிக்கடி மாறிய எல்லைகளுடன் இயங்கி வந்தததே இத்தீவின் கதை. யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த ஒரு ‘தமிழ் அரசு’ இருந்ததுபோல் இன்று பசப்பப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. யாழ்பாணத்துக்குள்ளேயே பல்வேறு தமிழ் அரசுகள் இருந்ததாகவே வரலாறு. நாம் மேற்சொன்னபடி அக்கால அரசுகள் நிலத்தையும் அதன் எல்லைகளையும் குறித்ததே அன்றி அதற்குள் வாழ்ந்த மக்களின் இன அடையாளத்தைக் குறிக்கவில்லை என்பதையும் இங்கு அவதானிக்க. பரந்த எல்லைகள் மற்றும் இனம் மற்றும் வேறு அடையாளங்கள் சார் அதிகார எல்லைகள் காலனித்துவ காலத்தின் பிறகே ஆரம்பிக்கின்றது.
மேற்கண்ட புள்ளிகளை நாம் ஞாபக படுத்தவேண்டியிருப்பதற்கு காரணமுண்டு. தற்காலய இலங்கை வரலாற்றாசிரியர்கள் இனவாரியாக பிரிந்து நின்று தனித்தனி வரலாறுகளை எழுதி வருகிறார்கள். இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கு இந்தியத் தமிழ் பேசும் மக்களுடன் இருக்கும் இன கொழி கலாச்சார உறவை காரணமாக வைத்து இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாறு என்றும் இந்திய வரலாற்றின் பகுதியாகவே பேசப்படுகிறது. அதே தருணம் இலங்கை வரலாறு ‘சிங்கள அரசுகளின்’ வரலாறாக திணிக்கப்படுகிறது. இலங்கை வரலாறு என்று முழுத்தீவும் சார்ந்த வரலாற்றை யாரும் எழுத முன்வரவில்லை. தவிர காலனித்துவ காலத்துக்குப் பின்புதான் ‘இலங்கை வரலாறு’ என்ற கண்ணோட்டம் எழுந்தததையும் நாம் அவதானிக்க வேண்டும். இதன்காரனமாக காலனித்துவ அதிகாரத்தின் பார்வையிலேயே வரலாறு கட்டப்பட்டது. வரலாற்று ஆவணங்களின் காலனித்துவ ‘மொழி பெயர்ப்பையே’ நாம் உண்மை வரலாறாகப் பார்க்க பணிக்கப்பட்டோம். இன்றும் நவீன வரலாற்று நடைமுறைகளை முதன்மைப்படுத்தி பண்டய வரலாறை வரலாற்றாசிரியர்கள் அணுகுவதை அவதானிக்கலாம். பற்றாக்குறையை தெரிந்து கொண்ட நிலையில் மீண்டும் மீண்டும் நாம் காலனித்தவ உரைநடையில் தொங்கிக்கொண்டிருக்கத் தேவையில்லை.
பிரித்தானியப் பிரித்தாளும் உத்தியும் தமிழருக்கு எதிரான கண்டிய பௌத்த விரோதமும்
பழமைக்குள் புதைந்திருக்கும் பல வலதுசாரிய வரலாற்றாசிரியர்கள் கண்டும் காணாமல் புறக்கணிக்கும் மிக மிக முக்கிய விசயங்கள் பல உண்டு. இவர்கள் தாம் சொல்லும் வரலாற்றுக்குள் முக்கிய வரலாற்று குறிப்புகளை இருட்டடிப்பு செய்வதன்மூலம் வலது சாரிய அதிகாரத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாமல் காப்பாற்றுகிறார்கள். இவற்றைத் தோண்டியெடுத்து பகிரங்கப்படுத்துவது இன்று போராளிகளின் வரலாற்றுக்கடமை.
உதாரணமாக புத்த மதம் என்பது எவ்வாறு ஒரு ‘இனத்தின் மதமாக’ இலங்கையில் மாறியது என்பது பற்றி பலரும் கண்டுகொள்வதில்லை. பல இனத்தவர்களும் புத்த மதத்தை கடைப்பிடித்து வந்துள்ளார்கள். புத்தத்தின் ஒரு பிரிவான மாகாயன புத்தம் தென்னிந்தியாவில் உருவானதாகவும் கருதப்படுகிறது.
இந்துத்துவ சாதிய நடைமுறைக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படை பௌத்த மதம் தோன்றியதற்கான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பௌத்த காலத்தின் பின் இந்துத்துவ 'மறுமலர்ச்சி' இயக்கம் மீண்டும் இறுகிய சாதிய அடக்குமுறையை நிறுவியதுடன் பௌத்தத்துக்கு எதிரான கொடும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. புத்த விகாரைகள் உடைக்கப்பட்டு அங்கு இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன. ஆயிரக்கணக்கில் புத்தமதம் சார்ந்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் சுங்கா ஆட்சிக் காலத்தில் வட இந்தியாவிலும் ஆறு ஏழாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் பரவிய பக்தி இயக்க காலகட்டத்திலும் புத்த சமயத்தவர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டார்கள். இந்து மதத்தவருக்கு எதிரான பௌத்த மத விரோதத்திற்கு இதுவும் ஒரு காரணம்.
இருப்பினும், இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான 'சிங்கள புத்த' விரோதத்துக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. நீண்டகால வரலாற்றுப் பின்னணி உண்டு. அதுபற்றி விரிவாகப் பேச இடமில்லாத போதும் முக்கியமாக கண்டி இராச்சியத்தை மையப்பட்டு வளர்ந்த விரோதம் பற்றிக் குறிப்பிடுதல் அவசியமானது.
புத்தமதத்தின் வளர்ச்சியின் மையமாக விளங்கியது அழகிய கண்டி மாநகர். இங்குதான் புத்தமதத்தின் புனிதத் தலமான புத்தரின் புனிதப்பல் இருக்கும் இடமாகக் கருதப்படும் - தலதா மாளிகை (Dalata Maligawa) இருக்கிறது. 19ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கண்டிக்கு ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு 70 வருடங்களுக்கும் மேலாகக் கண்டியில் ஆட்சி செய்து வந்தவர்கள் தெலுங்கு - தமிழ் கலப்புப் பின்னணியைச் சேர்ந்த நாயக்க மன்னர்கள் (1739-1815).
கடைசி நாயக்க மன்னனின் வீழ்சிக்குப்பின் புத்தகுருக்களால் எழுதப்பட்ட இரு இலக்கியங்கள் ;(Kirala Sadesaya (KS), Vadiga Hatana(VH)) முதற்தடவையாக மொழியை இனமயப்படுத்தி தாக்குதல் செய்வதைக் காணலாம். மரியாதைக்குரிய உயர்குடிகள்மேல் நன்றிகெட்ட ‘தமிழன்’ தாக்குதல் செய்கிறான் என்று இந்த இலக்கியம் பிரச்சாரிக்கிறது(KS). கண்டிய குருசபையை எவ்வளவு குரூரமாக ‘தமிழ் மன்னன்’ நடத்துகிறான் என்று இரு இலக்கியங்களும் நீண்ட வர்ணனைகளைக் கொடுக்கின்றன. முக்கியமாக முதல் மந்திரியாக இருந்த கேலபோல ஆங்கிலேயர்களுடன் இணைந்து மன்னரை எதிர்த்தமையால் எவ்வாறு கொடூராமாக சாகடிக்கப்பட்டார் என்றும் அவரது குடும்பம் எவ்வளவு கொடுமையாக வேட்டையாடப்பட்டது என்றும் இவ்விலக்கியங்கள் வர்ணிக்கின்றன. ‘தமிழ் மன்னன்’ என்று கருதப்பட்ட விக்கிரம ராஜசிங்க மேல் ஏற்பட்ட வெறுப்பை இந்த இலக்கியம் எவ்வாறு ஒட்டுமொத்த ‘தமிழர்’ மேல் திருப்புகிறது என்பதை அவதானிக்கவும். இந்த நடைமுறை இலங்கையின் முதலாவது இனவெறி நடைமுறையாக கருத இடமுண்டு.
இருப்பினும் வரலாறு அவ்வளவு சுலபத்தில் இலகுபடுத்தபடக்கூடியதல்ல. இந்த இலக்கியங்களுக்கூடாக வெளிப்படும் புத்தகுருசபையின் தாக்குதலை நுணுக்கமாக அவதானிப்போமானால் மதரீதியிலான மோதல் முதன்மைப்பட்டிருந்ததையும் அது எவ்வாறு இன எதிர்ப்பாக திரிந்தது என்பதையும் நாம் அவதானிக்க முடியும். மத ரீதியிலான பகைமையை வளர்த்தது ஆதிக்கசாதிய இந்து மத பூசகர்களும் ஆதிக்கசாதிய புத்தகுருக்களுமே என்பதையும் அவதானிக்க முடியும். ‘சாம்பலை ஏதோ பெரிய விசயமாக நினைத்து அப்பிக்கொண்டு பூசணிக்காய்போல் வலம் வரும் தமழர்’(VH) என்று திட்டும் முறைக்குள் இருக்கும் உயர்சாதி இந்துக்களின் மேலான எதிர்ப்பை அவதானிக்க. பெரும்பான்மை இந்துக்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தமையால் இந்துத்துவத்தின் மேலான எதிர்ப்பு தமிழர் மேலான எதிர்ப்பாக திரும்பியதையும் அவதானிக்க. இதை ஆங்கிலேயர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டனர். பிரித்தாளும் உத்தியைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்களுக்கு இது வழியேற்படுத்தியது.
பிரித்தாளும் உத்தி பிரித்தானியர்களின் கண்டுபிடிப்பல்ல. மாறாக அதிகாரத்தைக் கைப்பற்ற அதிகார வர்க்கம் காலம் காலமாக பாவித்துவந்த உத்தி அது. கண்டிய அரசுடன் நேரடி யுத்தத்தில் இறங்கினால் தாம் மிகவும் பலவீனப்படவேண்டும் என்பதை பிரித்தானிய காலனியாதிக்கத்தினர் தெரிந்திருந்தனர். ஆட்சியாளர் ஒரு பகுதியினருடன் இணைந்து மறு பகுதியைத் தாக்குவதால் தமக்கு பாதிப்பு குறைவு என்பதை தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பல இடங்களில் அவர்கள் கற்றுக்கொண்டிருந்தனர். டச்சு காலனியாதிக்கத்திடம் இருந்து இலங்கையைக் கைப்பற்றிய பின்பு 1796ல் இருந்து 1800 ஈறாக பிரித்தானியர் அறிமுகப்படுத்தியிருந்த கொடிய வரி முறைக்கு எதிராக பல்வேறு இடங்களில் எதிர்ப்பு வெடித்தது. பிரித்தானியரிடம் இருந்த துருப்புக்களின் தொகை இந்த கலகங்களை கட்டுப்படுத்தக்கூட போதுமானதாக இருக்கவில்லை. போதாக்குறைக்கு இந்த கலகங்களை செய்த எதிர்ப்பாளர்களுக்கு கண்டிய அரசு ஆள்வசதி உட்பட பல உதவிகளை வழங்கி வந்தது காலனியாதிக்கத்தினருக்கு சினத்தை உண்டுபண்ணியிருந்தது. கண்டிய அரசு தெற்கிலும் வடக்கிலும் என்று நாடெங்கும் நடந்த கிளர்ச்சிகளுக்கு உதவி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 1803ம் ஆண்டு கண்டிய அரசைக் கைப்பற்ற பிரித்தானியர் எடுத்த இரானுவ முயற்சி படுதோல்வியில் முடிந்தது.
இத்தருணத்தில் புத்த மதத்தைப் போற்றிப் பேணுவதில் தனித்துவமான அக்கறையுள்ளவர்களாகத் தம்மை நிலைநாட்டித் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த நாயக்க மன்னர்களுக்கு எதிரான புத்த குருக்களின் எழுச்சி ஆங்கிலேயர்களுக்கு பொன்னான சந்தர்ப்பத்தை வழங்கியது. ஆங்கிலேயர்கள் நாயக்கர் ஆட்சியை வீழ்த்துவதற்காகப் புத்தகுருக்களுடன் கூட்டு சேர்ந்தனர். இருப்பினும் அவர்களால் புத்தகுரு சபையிடம் இருந்த அதிகாரத்தை முற்றாக கைப்பற்ற முடியவில்லை. புத்த குருக்கள் மீண்டும் நாயக்கர்களுடன் சேர்ந்து தம்மைத் தாக்கலாம் என்ற பயமும் அவர்களுக்கு இருந்தது. இதனால் நாயக்கர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஆங்கிலேயர் மீண்டும் நாயக்கர்கள் தலையெடுக்காமல் இருக்க 1815இல் புத்தமத குருசபையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். புத்தகுருக்கள் தமக்கெதிராக கிளர்ச்சியைத் தூண்டாமலிருப்பதற்காக நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தாமதித்த தருணத்தில் ஆங்கிலேயர் ஏற்படுத்திக் கொண்ட இந்த ஒப்பந்தம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. "சிங்கள மக்களின் பூமியை ஆட்சி செய்யும் எந்த உரிமைகளும் இனித் தமிழினத்துக்கு இல்லை என்பதை இப்பத்திரம் உறுதி செய்கிறது" என்ற வாக்குறுதியை இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் ஆட்சியை தம்மிடம் விட்டுவிடுவர் என எதிர்பார்த்த புத்தகுரு சபைக்கு விரைவில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது, விரைவில் தாம் வழங்கியிருந்த உறுதிமொழிகளைத் தூக்கியெறிந்த ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த புத்தகுரு சபை ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கியது.
ஏற்கனவே நாயக்க ஆட்சியாளர்களை முடிவு கட்டிவிட்ட ஆங்கிலேயர்களுக்குப் புத்தகுருக்களை ஒடுக்குவது சுலபமாகிப்போனது. 1817 மற்றும் 1818இல் நடந்த கிளர்ச்சிகளை மிக மூர்க்கமாக அவர்கள் ஒடுக்கினர். 1818ல் கிளர்ச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத் தொடர்ந்து ஆங்கிலேய காலனித்துவம் கண்டி ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து முழு இலங்கையையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர். முழு இலங்கையும் ஒரு காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.
No comments:
Post a Comment