Saturday, January 18, 2014

வெற்றியா தோல்வியா என்பதல்ல போராட்டம்

அமெரிக்காவிலிருந்து தமிழகம் வந்ததில் இருந்து மே-17 இயக்கம் ஒருங்கிணைத்த மற்றும் ஆதரவு அளித்த பல்வேறு போராட்டங்களில் முழுமையாய் ஈடுபட்டதில் இரண்டு மாதங்கள் ஓடியதே தெரியவில்லை. இருப்பினும் எந்த போராட்டமும் ஒரு உடனடி வெற்றியையோ அல்லது 'இது நிச்சயம் நடக்கும்' என்னும் நம்பிக்கை விதையோ என்னுள் முழுமையாக ஏற்றவில்லை. சில போராட்டங்கள் மேலோட்டமாக என்னுடய சிற்றறிவில் "இது தோல்விக்கான போராட்டம் போல் இருக்கிறதே" என்று தோன்றும். ஆனால், மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட மற்றும் அரசாங்கத்திற்கு ஒரு நேர்மையான எதிர்வினையாய் இருப்பதனால், மனதளவில் இப்போராட்டங்கள் காலத்தின் தேவை என்பதாய் தீர்மானமேற்றுவேன்.
ராஜீவ் வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளாய் சிறையிலுள்ள மூன்று நிரபராதித் தமிழர்களையும், வீரப்பன் கூட்டாளிகள் என்று பொய்யாக சோடிக்கப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் நால்வரையும் விடுதலை செய்ய வரும் டிசம்பர்-15 காலை பத்து மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் நடக்க இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மக்களிடம் பரப்புரை செய்ய தோழர்கள் அனைவரும் தத்தம் அருகிலுள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் பெருவாரியாக கூடும் இடங்களில் கடந்த நான்கு நாட்களாய் துண்டறிக்கைப் பிரச்சாரம் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் செய்து வந்தோம்.
இன்று மாலை நான் மற்றும் மதிப்பிற்குரிய தோழர்கள் சங்கரலிங்கம் மற்றும் ராஜேந்திரன் அவர்களுடன் கிண்டி தொழிற்பேட்டை பேருந்துகளில் பரப்புரை செய்து துண்டறிக்கைகளை கொடுத்து வந்தோம். பேருந்துகளில் பேசுவது எனக்குப் புதிதெனினும் இரண்டு நாட்களுக்கு முன் தோழர் முத்துவுடன் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் செய்த பரப்புரை ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருந்ததென்னவோ உண்மை. நானும் முத்துவும் கூட இரு தினங்களுக்கு முன்னர் இப்படியாக பேசிக் கொண்டோம் "தோழர், நாமிருவரும் துண்டறிக்கைகள் கொடுக்கும்போது பரப்புரை செய்து மட்டுமே கொடுக்க நமக்குள் ஒரு உறுதிமொழி எடுப்போமென்று". ஏதும் பேசாமல் துண்டறிக்கைகள் கொடுப்பதென்பது தண்ணீரில் எழுதுவதைப் போல இருப்பதாக எண்ணுவதுண்டு. இன்று முத்து தவிர்க்க முடிய காரணத்தினால் வராமல் போனாலும், இன்றும் அதுபோலவே பேசி கொடுத்துக் கொண்டிருந்தோம்.
ஒரு மணி நேர பணிக்குப் பின்னர் உடன் வந்த தோழர்கள் இருவரும், கிண்டி பாலம் வழியாக செல்லும் பேருந்துகள் சிறிது நேரம் மட்டுமே நிற்கின்றன, அங்கு பரப்புரை செய்வது கடினமென்றும் நின்று கொண்டிருக்கும் மக்களிடம் கொஞ்சம் துண்டறிக்கைகளை மட்டும் கொடுத்து வரலாமென்றும் யோசனை சொன்னார்கள். நான் மனதளவில் அதற்கு உடன் படாவிட்டாலும் அனுபவமான தோழர்கள் சொல்படி செய்வோமென்று அவ்வாறே செய்ய எத்தனித்தேன். ஏதும் பேசாமல் கொடுப்பதால் சிறிது தயக்கத்தினூடே கொடுத்துக் கொண்டிருந்தேன். மூன்று நபர்களுக்குப் பிறகு நான்காவதாய் ஒரு அம்மாவிடம் கொடுத்தேன். பொதுவாக துண்டறிக்கைகள் வாங்குபவர்களைப் பற்றி இங்கு சிறிது சொல்லியாக வேண்டும். அவர்களைப் பற்றி மட்டுமே ஒரு கட்டுரை கூட எழுதலாம்.
அவ்வாறான மனிதர்களை நீங்கள் திரைப்படங்களிலோ நாடகங்களிலோ அல்லது நடைமுறை வாழ்க்கையிலோ காண்பதரிது. அதில் சிலர் நீங்கள் கொடுப்பது என்னவென்று பார்க்காமலேயே 'இந்த நோட்டீஸ் இதுவாகத்தான் இருக்கவேண்டும்' என்று தீர்மானமாய் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். மொழி தெரியாதவர்கள், படிக்கத் தெரியாதவர்கள், பெண்கள் சிலர் கணவரைப் பார்த்துவிட்டு வாங்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதுண்டு (இன்னமும் ஆணாதிக்கம் தொடர்கிறது பெரியாரே), மற்றும் சிலர் நம்மைப் பார்த்து "பாவம் யாரு பெத்த பிள்ளயோவென்று" என்று நினைப்பதாய்த் தோன்றும். "நல்லா வந்துடறானுகையா சட்டையும் பேண்டும் மாட்டிகிட்டு" இவ்வாறாக ஒரு மைன்ட் வாய்ஸ்-உம் கேட்கும், ஆனால் அது நிச்சயம் உழைக்கும் மக்கள் குரலாய் இராது. இருப்பினும் பெரும்பாலான அடித்தட்டு மக்கள் நியாயமான போராட்டங்களை வரவேற்பதாகவே உணர்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு ஒரு போராட்டத்தின் அறிவு சார்ந்த விடயங்களை பற்றி புரிதல் இருக்கிறதோ இல்லயோ, அவர்களால் மனிதத்தை மேல்தட்டு மக்களை விட எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமென்பது திண்ணம். அன்பும் மனிதமும் அறிவைவிட முக்கியம் என்பதற்கு அவர்கள் தான் சாட்சிகளாய் இருக்க முடியும்..
சரி கதைக்கு வருவோம்.
மொத்தத்தில் அங்கிருப்பவர்களிடம் வெளிப்படையான அங்கீகாரம் கிடைப்பது அரிது. முன்பே சொன்னதைப் போல், நான்காவதாய் ஒரு அம்மாவிடம் நோட்டீஸ்‍ஐக் கொடுத்தேன். அவர்கள் என்னைவிட ஏறக்குறைய ஒரு அடி குறைவாக இருந்ததால் முகத்தை சரியாகப் பார்த்து கொடுக்கவில்லை. ஏதோ யோசனையில் அடுத்த நபருக்கு கொடுக்க எத்தனிக்கும் நேரத்திற்குள் அந்த வித்தியாசத்தைக் கவனித்தேன். பொதுவாக பரப்புரை செய்யும்போது, மக்கள் துண்டறிக்கையைப் புரிந்து கொண்டு அங்கீகரித்தல் அரிதாக இருக்கும் பொழுது அவர் நொடிப்பொழுதில் அவ்வறிக்கையில் முகம் புதைத்தார். 'அவராக' இருக்குமோ என்னும் ஐயம் நீங்குமுன் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்த தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் அந்தத் தாய் என்னை ஆரத் தழுவிக்கொண்டார். அன்னையவர்களின் மனபாரமதை தாங்கமுடியா உயிர்வலி. என் கன்னத்தை தொட்டு 'நல்லா இருப்ப பா' என்றார்.
ஆம்! அவர்கள் தான்.. அவர்களுக்கு மட்டும் தானே அது நொடிப் பொழுதில் புரியும்.. ஏனெனில் நாம் கொடுத்த துண்டறிக்கையில் முதலாவதாய் இருந்தது அவரின் புகைப்படமாயிற்றே.
இதை என்னவென்று சொல்வது. இதை விட நம்பிக்கை விதை வேறேது வேண்டும் தோழர்களே. வெற்றியா தோல்வியா என்பதல்ல போராட்டம். உன்னது அறம் சார்ந்ததா என்பதே போராட்டம். பிறந்ததின் பயனை அடைந்ததைப் போன்றதொரு உணர்வு. இன்னும் நூறு வருடங்கள் இருந்தாலும் இப்படி ஒரு கணம் நிகழுமா? வாழ்ந்தாகி விட்டது. இனிமேல் இவ்வுலகில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு லாபம் தான்.

No comments:

Post a Comment